சூர்யா, ஜோதிகா 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் .... 5 கோடி ரூபாய் நஷ்டஈடு தர வேண்டும் ....

 சூர்யா, ஜோதிகா  24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் .... 5 கோடி ரூபாய் நஷ்டஈடு தர வேண்டும் ....


சூர்யா நடிப்பில் ‘ஜெய் பீம்’ படம் நவம்பர் 2 அன்று அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

1994-ஆம் ஆண்டில் கடலூரில் நடைபெற்ற ஓர் உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் வரவேற்பைப் பெற்றுள்ள போதிலும், உண்மையான சம்பவத்தில் ராஜாகண்ணுவை கொடூரமாக அடித்து கொலை செய்த அந்தோணிசாமி என்ற சப் இன்ஸ்பெக்டர் பாத்திரம் குருமூர்த்தி என்ற பெயரில் இடம்பெற்றது, வன்னியர்களின் பண்பாட்டுச் சின்னமான அக்னி கலச காலண்டர் இடம்பெற்றது போன்றவை பெரும் சர்ச்சையாக வெடித்தது.காலண்டர் காட்சி படத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்ட போதிலும் பிரச்சினை முடிவுக்கு வரவில்லை. நடிகர் சூர்யாவுக்கு 9 கேள்விகளை எழுப்பி பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கடிதம் எழுதியதும் அந்தக் கடிதத்துக்கு நடிகர் சூர்யாவின் பதில் கடிதமும் சூடானது.

அதுபோன்று, நடிகர் சூர்யாவை எட்டி உதைப்பவருக்கு ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என்று மயிலாடுதுறை பாமக அறிவித்தது சர்ச்சையானது. அந்த சர்ச்சை முடிவதற்குள் சூர்யா, ஜோதிகா ஆகியோர் 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் 5 கோடி ரூபாய் நஷ்டஈடு தர வேண்டும் என்றும் வன்னியர் சங்கம் சார்பில் சூர்யாவுக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் சூர்யாவுக்கு எதிராக சமூக ஊடகங்களில் பாமகவினர் தொடர்ந்து ஆபாசமாகப் பதிவிட்டு வருகின்றனர்

இதற்கிடையே அக்னி கலச காலண்டருக்குப் பதில் மகாலட்சுமி காலண்டர் மாற்றப்பட்டதற்கு பாஜகவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏசு நாதர் காலாண்டரை மாட்டாமல் மகாலட்சுமி காலண்டரை மாற்றியது ஏன் என்று பாஜகவினரும் சூர்யாவுக்கு எதிராக சமூக ஊடகங்களில் தாக்கி எழுதியும் பேசியும் வருகிறார்கள்.

இந்நிலையில் சூர்யாவுக்கு பாமக, பாஜகவினரிடமிருந்து வரும் மிரட்டல்களைத் தடுக்க வேண்டும் அதில் தொடர்புடையோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விசிக கோரிக்கை விடுத்திருந்தது. மேலும் இடதுசாரிகள், காங்கிரஸ் கட்சியும் வலியுறுத்தின.

இந்நிலையில் சென்னை தியாகராய நகர் ஆற்காடு தெருவில் உள்ள நடிகர் சூர்யா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் சூர்யாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் சிலர் கருத்து தெரிவித்து வருவதால் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பைச் சென்னை மாநகர போலீஸ் வழங்கியுள்ளது.