பெட்ரூமில் சிக்கிய ரூ.2 கோடி.. ஓசூர் பெண் அதிகாரியின் மிரள வைக்கும் ஊழல்.. விசாரணை ஆரம்பம்

பெட்ரூமில்  சிக்கிய ரூ.2 கோடி.. ஓசூர் பெண் அதிகாரியின் மிரள வைக்கும் ஊழல்.. விசாரணை ஆரம்பம்


2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற, வேலூர் மண்டல தொழில்நுட்ப கல்வி பெண் அதிகாரி ஷோபனாவிடம் தொடர் விசாரணை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.. அவரது உறவினர்கள் பெயரில் சொத்துகள் ஏதேனும் வாங்கி குவித்து உள்ளாரா? என்பது தொடர்பாகவும் போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்தவர் ஷோபனா... 57 வயதாகிறது.. வேலூர் தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் உள்ள மண்டல தொழில்நுட்ப கல்வி அலுவலகத்தில் செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், தர்மபுரி ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள பாலிடெக்னிக், என்ஜினியரிங் கல்லூரிகளில் கட்டுமானம் உள்ளிட்ட பணிகள் தொடர்பான டெண்டர் விடுவது, நிதி ஒதுக்கீடு செய்வது பணிகளை ஆய்வு செய்வது போன்றவைகள்தான் இவரது பணி.

லஞ்சம்

தந்தை பெரியார் பாலிடெக்னிக் வளாகத்திலேயே தங்கி உள்ளார். இந்த நிலையில், ஒருவரிடமிருந்து ரூ 5 லட்சம் லஞ்சம் வாங்கி இருக்கிறார்.. அப்போது கையும் களவுமாக 3 நாட்களுக்கு முன்பு ஊழல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் பிடிப்பட்டார்... லஞ்ச பணம் வாங்குவதற்காக அணைக்கட்டு சாலையில் உள்ள ஒரு ஹோட்டல் அருகே ஷோபனா காரை நிறுத்திவிட்டு காத்திருந்தார்!.. அப்போதுதான் அவரது காரை அதிகாரிகள் சோதனையிட்டனர்.. அதில் இருந்த ரூ.5 லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

இதற்கு பிறகு, மேலும் தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் ஷோபனா தங்கியுள்ள ரூமிலும் சோதனை நடத்தி கட்டுக்கட்டாக ரூ.15 லட்சத்து 85 ஆயிரத்தையும், ரூ.3.92 லட்சத்திற்கான காசோலைகளையும், 17 டாக்குமெண்ட்களையும் பறிமுதல் செய்தனர். ஷோபனாவின் வீடு ஓசூர் நேருநகர் பகுதியில் இருப்பதால், அங்கும் சென்று சோதனை நடத்தினர்.. இவரது படுக்கை அறையில் இருந்து 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் கட்டுக்கள் இருந்துள்ளன..

அது மொத்தம் 2 கோடியே 6 லட்சத்து 90 ஆயிரத்து 300 ரூபாய் ஆகும்.. அந்த கணக்கில் வராத 2 கோடியே, 7லட்சம் ரூபாயையும் பறிமுதல் செய்தனர். இதைதவிர, 38 சவரன் தங்க நகைகள், 11 வங்கிக் கணக்குகள், வங்கி லாக்கர் சாவி, ஒரு கிலோ 320 கிராம் வெள்ளி மற்றும் 13 சொத்து ஆவணங்கள் ஆகியவற்றை ஊழல்தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்து, அது தொடர்பான விசாரணையையும் மேற்கொண்டனர்.

ஆவணங்கள்

ஒரு பெண் அதிகாரியிடம் ரூ.2 கோடிக்கும் அதிகமான ரொக்கப்பணம் மற்றும் நகை உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.. இந்தநிலையில், அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட 11 வங்கிக்கணக்குகளை போலீசார் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. இதுதொடர்பாக வங்கி மேலாளர்களுக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் கடிதம் அனுப்பி உள்ளனர்.

சோதனை

இதெல்லாம் இவர் வாங்கிய லஞ்சப்பணத்தின் ஒரு பகுதிதானாம்.. அதனால் வங்கி லாக்கரை திறந்து விரிவான சோதனை நடத்தவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.. அதுமட்டுமல்ல, ஷோபனா பயன்படுத்திய வங்கி லாக்கரை திறந்து பார்க்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.. உறவினர்கள் பெயரில் வேறு ஏதேனும் சொத்துகள் வாங்கி குவித்து உள்ளாரா? லஞ்ச பணம் இதுவரை எவ்வளவு வாங்கி உள்ளார்? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.