அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கிவைத்த இல்லம் தேடி கல்வி

அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கிவைத்த இல்லம் தேடி கல்வி


கொரோனா காலத்தில் மாணவர்களின் கற்றல் இழப்பை ஈடுகட்டும் வகையில் இல்லம் தேடி கல்வித் திட்டம் (Illam Thedi Kalvi) செயல்படுத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். ஆர்வமுள்ள தன்னார்வளர்களுக்கு 1,000 ரூபாய் ஊக்க தொகை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா காலத்தில் மாணவர்கள் இழந்த கற்றலை மேம்படுத்திட பள்ளிக்கல்வித்துறை சார்பில் "இல்லம் தேடி கல்வி" என்கிற திட்டத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இல்லம் தேடி கல்வி திட்டத்தில் இணைய ஆர்வமுள்ள தன்னார்வலர்களுக்கான இணையதளத்தை தொடங்கிவைத்தார்

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தன்னார்வலர்களை இணைப்பதற்கான இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது. அதில் ஆர்வமாக பலர் பதிவு செய்ய வேண்டும். இந்த திட்டத்தை மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மாலை 5 மணி முதல் 7 மணி வரை மையங்களுக்கு அனுப்பவும். 20 மாணவர்களுக்கு ஒரு தன்னார்வலர் என்கிற வீதத்தில் திட்டம் செயல்படுத்தப்படும். மொத்தமாக 17 லட்சம் தன்னார்வலர்கள் வரை இந்த திட்டத்திற்கு தேவைப்படும். தொடர்ந்து 6 மாத காலத்திற்கு இந்த திட்டம் செயல்படும்.

மாணவர்களின் கற்றல் திறனை அதிகப்படுத்த பெற்றோர்களின் ஒத்துழைப்பு அவசியம். மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் தன்னார்வலர்களின் முழு விபரம் சேகரிக்கப்படும். 1 முதல் 5 வகுப்பு மாணவர்கள் வரை கற்பிக்க 12-ம் வகுப்புவரை தன்னார்வலர்கள் படித்திருந்தால் போதும். தன்னார்வலர்கள் ஆர்வமாக இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

திருச்சி, தஞ்சை, நாகை, கடலூர், திண்டுக்கல், திருச்சி, மதுரை, கிருஷ்ணகிரி, ஈரோடு போன்ற 12 மாவட்டங்களில் திட்டம் செயல்படுத்தப்படும். முதல்கட்டமாக 12 மாவட்டங்களில் செயல்படுத்தபடும். விரைவில் அனைத்து மாவட்டங்களுக்கு இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும். தனியார் பள்ளி மாணவர்களும் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பயன் பெறலாம். பெற்றோர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.

இது கொரோனா காலத்தில் ஏற்பட்டுள்ள கல்வி ரீதியான இழப்பை ஈடுகட்டும் வகையிலான திட்டம். மாநில, மாவட்ட, பள்ளி அளவிலான கமிட்டி மூலம் இந்த திட்டம் இயக்கப்படும். மாணவர்களின் கற்றல் இடைவெளியை இந்த திட்டம் குறைக்கும். இதற்காக 200 கோடி ரூபாய் அளவிற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தன்னார்வளர்களுக்கு 1,000 ரூபாய் ஊக்க தொகை வழங்க ஆலோசித்து வருகிறோம்.

கதை சொல்வது, பாடல் பாடுவது போன்ற செயல்பாடுகளும் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் செயல்படுத்தப்படும். தமிழகத்தில் கொரோனாவிற்கு பின்னர் கல்வி இடைநிற்றலில் ஒரு லட்சம் மேல் மாணவர்கள் பள்ளிக்கு வராமல் உள்ளனர். இந்த இல்லம் தேடி கல்வி திட்டம் 1 முதல் 5 ம் வகுப்பு வரையும், 6 முதல் 8ம் வகுப்பு வரை என இரண்டு குழுக்களாக வகுப்புகள் நடைபெறும். ஆர்வம் இருக்கும் தன்னார்வலர் இணையத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.