கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்யும் கல்லுப்பட்டி ஊராட்சி உறுப்பினர்கள்

கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்யும் கல்லுப்பட்டி ஊராட்சி உறுப்பினர்கள்


தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியத்திற்கு உட்பட்டது  ஜி.கல்லுப்பட்டி ஊராட்சி. 12 வார்டு உறுப்பினர்கள், ஒரு ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகிய பதவியிடங்களைக் கொண்ட அந்த ஊராட்சியில், பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகக் கூறி இன்று 3பெண்கள் உள்பட 6 உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாகக்கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.

ஜி.கல்லுப்பட்டி ஊராட்சியில் உள்ள 1வது வார்டு உறுப்பினர் நாகஜோதி, 2வது வார்டு உறுப்பினர் வீரலட்சுமி, 4வது வார்டு உறுப்பினர் செல்லப்பாண்டி, 9வது வார்டு உறுப்பினர் மதுமிதா, 10வது வார்டு உறுப்பினர் சுலைமான் மற்றும் 11வது வார்டு உறுப்பினர் சேகர் ஆகியோர் கூட்டாக தங்களது ராஜினாமா கடிதத்தை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜினாமா செய்த உறுப்பினர்கள், ’எங்கள் ஊராட்சியில் திட்டப்பணிகளின் நிலை குறித்து ஆக்கப்பூர்வமாக விவாதிக்க பல மாதங்களாக கூட்டம் நடத்தப்படவில்லை. இது ஊராட்சி விதிகளுக்கு முரணானதாகும். கடந்த செப்டம்பர் 6ஆம் தேதியன்று கூட்டம் நடத்தாமலேயே, கூட்டம் நடைபெற்றதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. மேலும் அடிப்படை மற்றும் வளர்ச்சித்திட்டப்பணிகளை சரிவர மேற்கொள்ளாமல், பெயரளவில் புகைப்பட ஆதாரத்திற்காக மட்டும் வேலை செய்துள்ளதாக குற்றம் சாட்டினர்.

இது தவிர நடைபெறாத பணிகள் பலவற்றை முடித்ததாக கணக்கு எழுதி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலரின் உறுதுணையுடன் லட்சக்கணக்கில் பணம் சுரண்டப்பட்டிருப்பதாக அறிகிறோம். எனவே மக்கள் பணி செய்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நாங்கள் தவறான செயலுக்கு துணை போக விருப்பம் இல்லாமலும், ஊராட்;சி மன்றத் தலைவர், செயலாளர், துணை மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோhர்களின் ஒரு தலைபட்சமான செயலைக் கண்டித்து  இன்று எங்களின் பதவியை ராஜினமாக செய்திருப்பதாகக் கூறினர்.

தேனி மாவட்ட செய்திக்காவெள்ளைச்சாமி