தேனியில் தண்ணீரில் மூழ்கி 3 பள்ளி மாணவர்கள் மரணம்

தேனியில் தண்ணீரில் மூழ்கி 3 பள்ளி மாணவர்கள் மரணம்

அம்பத்தூர் கள்ளிக்குப்பம் சேர்ந்தவர் மகேஷ் இவரது மனைவி பாரதி மகன் விஷால் (16) 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

கார்த்திக் (14) இவர்கள் அனைவரும் தேனி மாவட்டத்திற்கு நேற்று முன்தினம் சுற்றுலா வந்துள்ளனர். தேனி அருகே வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில், சின்னமனூர் அருகே உள்ள ஹைவேவிஸ், மேகமலை ஆகிய இடங்களை சுற்றிப் பார்த்து விட்டு மாலையில் போடிக்கு சென்றுள்ளனர். நேற்று காலை போடி அருகே உள்ள குரங்கனி, கொட்டகுடி ஆகிய பகுதிகளை சுற்றி பார்த்துவிட்டு வடக்கு மலைப்பகுதிகளில் கிராமத்தை அடுத்த கோம்பை ஆற்றில் குளித்தனர்.

தொடர் மழையால் ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருந்த நிலையில் விஷால் நீர் சூழலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தீயணைப்பு துறை வீரர்கள் நீர்ச்சுழலில் சிக்கிய விஷால் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மற்றொரு சம்பவமாக தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ளது காமாட்சிபுரம் கிராமம். இந்த கிராமத்தில் இருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் நல்லுக்கொண்டு பாறை என்ற அரசால் கைவிடப்பட்ட கல்குவாரி உள்ளது. இந்த கல்குவாரி சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே செயல்படாமல் உள்ளது.

இந்த கல் குவாரியில் உள்ள பள்ளத்தில் இருபது அடிக்கு மேலாக தண்ணீர் தேங்கி உள்ளது. இந்த கல் குவாரியில் வேப்பம்பட்டி மற்றும் காமாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் அவ்வப்போது குளித்து வந்துள்ளனர். இந்த நிலையில், காமாட்சிபுரத்தை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் லோகேஷ், கௌதம், மாதவன் ஆகிய மூன்று மாணவர்கள் கல்குவாரியில் குளிக்க சென்றுள்ளனர். தாழ்வான பகுதியில் குளித்துக் கொண்டிருந்த சிறுவர்கள் திடீரென ஆழமான பகுதிக்கு சென்று விட்டனர்.

இதனால் பதினான்கு வயதாகும் லோகேஷ் தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதனை கண்டு கௌதம் என்ற சிறுவன் காப்பாற்ற முற்பட்டு உள்ளார். இருவருக்கும் நீச்சல் தெரியாததால் காப்பாற்ற சென்ற சிறுவன் உட்பட இருவரும் 20 அடி ஆழத்தில் மூழ்கி உயிரிழந்தனர். இதனை அறிந்த ஊர் மக்கள் காவல்துறையினருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த இரு சிறுவர்களின் உடலையும் மீட்டனர்.விபத்தில் உயிர் இழந்த சிறுவர்களின் உடல்களும், தேனி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கல் குவாரியில் இரு சிறுவர்கள் முழ்கி உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்ட செய்திக்காக வெள்ளைச்சாமி