177 ஏக்கர் கோயில் நிலத்தை அபகரித்த காங்கிரஸ் எம்எல்ஏ....! துணி போகிறது திமுக அரசு....? குயின்ஸ் லேண்ட் பித்தலாட்டங்கள்.....

177 ஏக்கர் கோயில் நிலத்தை அபகரித்த காங்கிரஸ் எம்எல்ஏ....! துணி போகிறது திமுக அரசு....? குயின்ஸ் லேண்ட் பித்தலாட்டங்கள்.....


பூந்தமல்லி அருகேயிருக்கும் குயின்ஸ் லேண்ட் பொழுது போக்கு பூங்கா, அறநிலையத்துறை கோவில்களுக்குச் சொந்தமான 21 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்திருக்கும் விவகாரம் சமீபத்தில் சர்ச்சையானது. குயின்ஸ் லேண்ட் ஆக்கிரமிப்பு விவகாரத்தை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நான்கு வார காலத்திற்குள் ஆக்கிரமிப்புப் பகுதிகளை அகற்றி, கோயில் நிலத்தை மீட்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறது. இந்த விவகாரம் பெரிதாக வெடித்துவிடாமல் தடுக்க, காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் கடுமையாக முட்டி மோதியதாகச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

பூந்தமல்லியை அடுத்த பாப்பான்சத்திரத்தில், குயின்ஸ் லேண்ட் பொழுது போக்கு பூங்கா செயல்பட்டு வருகிறது. காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவருக்குச் சொந்தமான இந்த பூங்கா, பாப்பான்சத்திரம் காசி விஸ்வநாதர் ஆலயம், வேணுகோபால்சாமி கோயிலுக்குச் சொந்தமான 21 ஏக்கர் நிலத்தை குத்தகை என்கிற பெயரில் அபகரித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கிடையே, கோயில் நிலத்திற்கு வழங்கப்பட்ட பட்டாவை வருவாய்த்துறையினர் ரத்து செய்ததால், வருவாய்த்துறைக்கும் இந்து அறநிலையத்துறைக்கும் இடையே முட்டல் மோதல் எழுந்திருக்கிறது. இதைப் பயன்படுத்திக்கொண்டு கோயில் நிலத்தை குயின்ஸ் லேண்ட் நிர்வாகம் தங்கள் ஆக்கிரமிப்பிலேயே தொடர்ந்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.


குத்தகை காலம் முடிந்த பிறகும், சம்பந்தப்பட்ட நிலத்தை பூங்கா நிர்வாகம் தொடர்ந்து அபகரிப்பில் வைத்திருந்ததால், இழப்பீடு வழங்கும்படி ஶ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் சம்பந்தப்பட்ட குயின்ஸ் லேண்ட் நிர்வாகத்துக்கு 2013-ல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். இந்த நோட்டீஸை ரத்து செய்யக்கோரி குயின்ஸ் லேண்ட் நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கில்தான், அவர்கள் கோரிக்கையை நிராகரித்ததோடு, நான்கு வார காலத்துக்குள் ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டு, கோயில் நிலத்தை மீட்கும்படி உத்தரவிட்டிருக்கிறது உயர்நீதிமன்றம். தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடனேயே, இந்த ஆக்கிரமிப்பில் கை வைத்துவிடாமல் தடுக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ தரப்பு கடுமையாக முயற்சித்ததாகச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் சிலர், ``தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன், கோயில் நிலங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் தீவிரமாகக் களமிறங்கினார் இந்து அறநிலையத்துறை அமைச்சரான சேகர்பாபு. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வரும் கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் அறநிலையத்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன. கோயில் நில மீட்புப் பணியில் அமைச்சரின் வேகத்ததால், அரண்டுபோன குயின்ஸ் லேண்ட் உரிமையாளரான அந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ., அமைச்சர் தரப்பிடம் சமாதான தூது அனுப்பினார். இப்படியொரு கோயில் இடம் பூங்காவின் ஆக்கிரமிப்பிலிருப்பது முதலில் அமைச்சர் தரப்புக்குத் தெரியாது. இதுதொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதையும் அதிகாரிகள் யாரும் சொல்லவில்லை. இதைப் பயன்படுத்திக் கொண்டு, அமைச்சர் தரப்பை சமாதானப்படுத்த ஆட்சியின் தொடக்கத்திலேயே காங்கிரஸ் எம்.எல்.ஏ முயன்றிருக்கிறார்.

அமைச்சருக்கு நெருக்கமானவர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ தரப்பினர், ``ஐந்து ஏக்கர் நிலம் மட்டும்தான் ஆக்கிரமிப்பில் வருகிறது. சற்று கால அவகாசம் தாருங்கள். கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை தந்துவிடுகிறோம்" என்று சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். இதை அமைச்சர் தரப்பினர் ஏற்கவில்லை. ``கோயில் விஷயத்துல அமைச்சர் எந்த சமரசமும் ஏற்படுத்திக்க மாட்டார். ஒழுங்கா ஆக்கிரமிச்ச இடத்தைக் கொடுத்துடுங்க. அபராதத் தொகை விதித்திருந்தாலும் அதையும் செலுத்திடுங்க. இதுல சமரசம் பேசுற பேச்சுக்கே இடமில்லை" என்று கூறியிருக்கிறார்கள். இதை காங்கிரஸ் எம்.எல்.ஏ தரப்பு எதிர்பார்க்கவில்லை.

ஐந்து ஏக்கர் மட்டுமே ஆக்கிரமிப்பில் இருப்பதாகக் காங்கிரஸ் எம்.எல்.ஏ தரப்பினர் சொன்னதை அமைச்சர் தரப்பினர் சந்தேகித்திருக்கிறார்கள். உடனடியாக, இந்து அறநிலையத்துறை ஆவணங்களை 'செக்' செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. அப்போதுதான், 21 ஏக்கர் கோயில் நிலம் பூங்காவின் ஆக்கிரமிப்பில் தொடர்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். கோயிலுக்கு வழங்கப்பட்ட பட்டாவை வருவாய்த்துறை ரத்து செய்த விவகாரமும், பூங்கா நிர்வாகத்துக்குத் தாசில்தார் நோட்டீஸ் அனுப்பியது தொடர்பாக ஒரு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையிலிருப்பதும் தெரியவந்திருக்கிறது. டென்ஷனான சேகர்பாபு, ``நமக்கிட்டயே விளையாடுறாங்களா... உடனடியாக கோapல் நிலம் எல்லாவற்றையும் மீட்க நடவடிக்கை எடுங்க. வருவாய்த்துறை அமைச்சர்கிட்ட நான் பேசிக்குறேன்' என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சேகர்பாபுவை சமாதானப்படுத்த, தென்மாவட்ட அமைச்சர் ஒருவர் மூலமாக மீண்டும் ஒரு சமாதானத் தூது அனுப்பினார் அந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. அதற்கும் சேகர்பாபு மசியவில்லை. இதற்கிடையேதான், நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்த வழக்கில், கோயில் நிலங்களை மீட்கும்படி உத்தரவாகி இருக்கிறது. இன்றைய தேதியில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த கோயில் நிலங்கள் மீட்கப்பட்டு, அறநிலையத்துறை வசம் கொண்டுவரப்பட்டால், அதைவைத்துப் பல்வேறு நலத்திட்டங்களை உருவாக்க முடியும்" என்றனர்.

இந்த 21 ஏக்கர் மட்டுமல்லாமல், குயின்ஸ் லேண்ட் அமைந்திருக்கும் 177 ஏக்கர் நிலமும் கோயில் நிலம்தான் என்கிற குற்றச்சாட்டும் ஒருதரப்பால் முன்வைக்கப்படுகிறது. இதுகுறித்தும் விசாரிக்க இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறதாம். ஆக மொத்தத்தில் அரசின் நடவடிக்கையால் அந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ கடும் அப்செட் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.