நவம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறப்பது உறுதி; தயாராகுங்கள் பெற்றோர்களே....!

நவம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறப்பது உறுதி; தயாராகுங்கள் பெற்றோர்களே....!


இன்னும்கூட நிறைய பேருக்கு நவம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறக்குமா...? திறக்காதா...? என்கிற அச்சமும் சந்தேகமும் இருந்து கொண்டே தான் இருக்கிறது. இதற்கெல்லாம் விடை கொடுக்கும் விதமாக

1 முதல் 8 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு வரும் நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் துவங்க உள்ள நிலையில் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய சில முக்கிய முன்னேற்பாடுகள் தொடர்பாக முக்கிய செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு

கொரோனா 2ம் அலை தொற்று பரவல் தற்போது ஓய்ந்திருக்க கூடிய சூழலில் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளது. தவிர வரும் நவம்பர் மாதம் 1ம் தேதி முதல் 1 லிருந்து 8ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் துவங்க உள்ளது. அந்த வகையில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கான நேரடி வகுப்புகள் முறையான கொரோனா வழிகாட்டுதல் நடைமுறைகளை பின்பற்றி துவங்கப்பட உள்ளது.

தற்போது பள்ளிகளை மீண்டும் திறப்பது தொடர்பான முன்னேற்பாடுகளை பள்ளிக்கல்வித் துறை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அனைத்து பள்ளிகளிலும் மேற்கொள்ள வேண்டிய சில முக்கிய முன்னேற்பாடுகள் குறித்த செயல்முறைகளை தொடக்க கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதன் கீழ், பள்ளி வளாகங்கள் குப்பைகள் இன்றி எப்போதும் சுத்தமாக காணப்பட வேண்டும். நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ளும் மாணவர்களை உளவியல் ரீதியாக தாயார்படுத்த வேண்டும்.

பள்ளி சூழ்நிலையை மாணவர்களுக்கு மகிழ்ச்சி நிறைந்ததாக மாற்ற வேண்டும். மாணவர்களுக்கு வாய்மொழி பயிற்சி, எழுத்துப் பயிற்சி, கதைகள் கூறுதல் மற்றும் ஓவியம் வரைதல் போன்ற செயல்பாடுகளை ஊக்குவிக்க வேண்டும். கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளை மாணவர்கள் கற்றுக்கொள்வதற்கு ஏதுவாக உரிய ஆலோசனை வழங்கப்பட வேண்டும். மாணவர்களுக்கு கொரோனா தடுப்பு அணுகுமுறைகள் மற்றும் சுத்தம் குறித்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேவையான விழிப்புணர்வை வழங்க வேண்டும்.

பள்ளியின் அனைத்து வகுப்பறைகள், ஆசிரியர் அறை, சமையலறை, கழிப்பறைகளை தூய்மையாக காத்துக்கொள்ள வேண்டும். பள்ளியின் அனைத்து இடங்களையும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டிகளை அடிக்கடி கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் முகக்கவசம் அணிவது, கை சுத்திகரிப்பான் இருப்பு இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

பள்ளியின் நுழைவு வாயிலில் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மாணவர்கள் குறிப்பிட்ட இடைவெளியுடன் வகுப்பறைகளில் அமர வைக்கப்பட வேண்டும். நடமாடும் மருத்துவ குழு, ஆரம்ப சுகாதார நிலையம், செவிலியர் ஆகியோரின் தொலைபேசி எண்கள் பள்ளிகளின் அறிவிப்பு பலகையில் எழுதப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தவிர பள்ளி ஆசிரியர்கள், மேற்பார்வையாளர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் முதன்மை கல்வி அலுவலர்கள் என அனைவரும் பின்பற்ற வேண்டிய சில வழிகாட்டுதல் நெறிமுறைகளைளும் வெளியிடப்பட்டுள்ளது