மத்திய அமைச்சர் எல் முருகன் M.P. ஆவதில் புது சிக்கல்

 மத்திய அமைச்சர் எல் முருகன் M.P. ஆவதில் புது சிக்கல்

புதுச்சேரியில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக-என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சி அமைத்தாலும்... ஆட்சி அமைப்பதன் ஒவ்வொரு கட்டத்திலும் இரு கட்சிகளுக்கும் இடையே கசப்புணர்வு ஏற்பட்டு, அதனால் அமைச்சர்கள் பதவியேற்பு, சபாநாயகர் தேர்வு என ஒவ்வொன்றிலும் தேக்கம் ஏற்பட்டது. இது புதுச்சேரி முதல்வரான என்.ரங்கசாமி பிரதமர் மோடியை சந்திப்பதில் ஏற்பட்ட தாமதம் வரை நீடித்தது.

இந்த நிலையில் இப்போது ராஜ்யசபா தேர்தலை மையமாக வைத்து மீண்டும் பாஜக-என்.ஆர். காங்கிரஸ் இரண்டுக்கும் இடையே நெருடல் ஏற்பட்டுள்ளதாக புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து காலியாக உள்ள ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தலை தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது.

தமிழ்நாட்டில் அதிமுக ராஜ்யசபா எம்பிகளாக இருந்த கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகியோர் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றதால் எம்பி பதவியில் இருந்து விலகினார்கள். அதேநேரம் புதுச்சேரியில் அதிமுகவின் என்.கோகுலகிருஷ்ணனின் பதவிக்காலம் வரும் அக்டோபர் 6ஆம் தேதி முடிவடைகிறது. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி ராஜ்யசபா காலியிடங்களுக்கு வரும் அக்டோபர் 4 ஆம் தேதி தேர்தல் அறிவித்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.

கடந்த ஜூலை மாதம் தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகனை ஒன்றிய இணை அமைச்சராக்கினார் பிரதமர் மோடி. மக்களவை, மாநிலங்களவை எதிலும் உறுப்பினராக இல்லாத எல். முருகனை புதுச்சேரியில் இருந்து எம்பி ஆக்கலாம் என்று பாஜக தலைமை திட்டம் வைத்திருந்தது.

இந்த நிலையில் இப்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால் புதுச்சேரியில் இருந்து எல்.முருகனை பாஜக வேட்பாளராக அறிவித்து சட்டமன்றத்தில் தங்கள் கூட்டணிக்கு இருக்கும் பலத்தின் அடிப்படையில் அவரை ராஜ்யசபா எம்பியாக்க பாஜக தலைமை தீர்மானித்துள்ளது. ஆனால் பாஜகவின் இந்த முடிவுக்கு முதல்வர் என். ரங்கசாமி ஒப்புக் கொள்ளவில்லை என்கிறார்கள் என்.ஆர். காங்கிரஸ் வட்டாரத்தில்..

“ தனது நெருங்கிய நண்பரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான மல்லாடி கிருஷ்ணாராவை ராஜ்யசபா எம்பியாக்க ரங்கசாமி விரும்புகிறார். அதனால் எல். முருகனை வேறு மாநிலத்தில் இருந்து எம்பியாக்கிக் கொள்ளுமாறு பாஜகவுக்கு ரங்கசாமி தெரிவித்துவிட்டதாக தெரிகிறது. ஏற்கனவே என்.ஆர். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பலரை பாஜக மேலிடப் பொறுப்பாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாக ஒரு தகவல் புதுச்சேரி தேர்தல் முடிவில் இருந்தே பேசப்பட்டு வருகிறது.

. முதல்வராக இருக்கும் ரங்கசாமியிடம் உள்துறை அமைச்சக பொறுப்பைக் கொடுக்காமல் அதை பாஜக வைத்துக் கொண்டதில் இருந்தே பாஜகவின் தலையீடு தெளிவாகத் தெரிகிறது. இந்நிலையில் ராஜ்யசபா தேர்தலில் முருகனை புதுச்சேரியில் இருந்து எம்.பி. ஆக்க ரங்கசாமி மறுத்தால் பாஜக-என்.ஆர். காங்கிரஸ் கூட்டணியின் நிலை என்ன என்பது குறித்த அடுத்தகட்ட பரபரப்புகளில் மிதக்கிறது புதுச்சேரி அரசியல்.

இப்போதைக்கு இது ஒரு மாய தோற்றம் ஆகத்தான் தெரிகிறது புதுச்சேரியில் பாஜக  கூட்டணி ஆட்சி அமைப்பதில் எவ்வளவு சிக்கல்கள் இழுபறி நீடித்தது இதை எல்லாம் எளிதாக எதிர்கொண்ட மத்திய பாஜக இந்த விஷயத்தையும் எளிதாக முடிக்கும் என்கிற நம்பிக்கையும் இருக்கிறது..