காந்தி பிறந்த நாளில், கூடங்குளம் அணுஉலை தொடர்பான, மாநில அளவிலான சிறப்பு கருத்தரங்கம்!
காந்தி பிறந்த நாளில், கூடங்குளம் அணுஉலை தொடர்பான, மாநில அளவிலான சிறப்பு கருத்தரங்கம்! திருநெல்வேலியில் நடைபெறுகிறது!
திருநெல்வேலி,செப்.4:- திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் கூடங்குளத்தில், ரஷ்ய நாட்டு தொழில்நுட்ப உதவியுடன் நாளொன்றுக்கு, தலா ஆயிரம் மெகாவாட், உற்பத்தி திறன் கொண்ட, இரண்டு அணுஉலைகள், செயல்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து, தற்பொழுது மூன்றாவது மற்றும் நான்காவது அணுஉலைகளை நிறுவுவதற்கான, கட்டுமான பணிகளும், முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இவை தவிர, ஐந்தாவது மற்றும் ஆறாவது அணுஉலைகளை அமைப்பதற்கான, முயற்சிகளும் மேற்கொள்ளப் பட்டுள்ளன.
அணுஉலைகளின், இத்தகைய விரிவாக்கத்தை கண்டித்து, பல்வேறு தொடர்நடவடிக்கைகளை எடுத்திட, "அணுஉலை எதிர்ப்பு இயக்கம்" முடிவு செய்துள்ளது. அதன் ஒருபகுதியாக, "அணுஉலைகள் தொடர்பான "சிறப்பு கருத்தரங்கம்" ஒன்று, "தேசபிதா" மகாத்மாகாந்தி பிறந்த தினமான, அக்டோபர் 2-ஆம் தேதி, திருநெல்வேலியில், நடத்தப்படும். அதன்பின்னர், 12-ஆம் தேதி,அனைத்து அரசியல் கட்சித்தலைவர்கள் பங்கேற்கும், "மாநாடு" ஒன்றும், திருநெல்வேலியில் நடைபெறும்!" என, "அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்" ( PEOPLE'S MOVEMENT AGAINST NUCLEAR ENERGY) தலைவர் சுப.உதயகுமாரன், தெரிவித்துள்ளார். நேற்று (செப்டம்பர்.3) மாலையில், திருநெல்வேலி ரெட்டியார்பட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற, "ஆலோசனை" கூட்டத்திற்கு, தலைமை வகித்து பேசிய போது, அவர் இவ்வாறு கூறினார். இந்த கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் K.G.பாஸ்கரன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், முத்துகிருஷ்ணன், SDPI மாவட்ட தலைவர் K.S.சாகுல் அமீது, துணை தலைவர் S.S.A.கனி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மாவட்ட செயலாளர் " கரிசல்" மு.சுரேஷ், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு தலைவர் V.பழனி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மாவட்ட செயலாளர் க.ஸ்ரீராம், மக்கள் ஜனநாயக கட்சி, மாவட்ட செயலாளர் T.அப்துல் ஜப்பார்,"அருட்தந்தை" மை.பா.ஜேசுராஜ், திராவிடர் தமிழர் கட்சி, மாநில பொது செயலாளர் கதிரவன் உட்பட, பலர் கலந்து கொண்டிருந்தனர்.