தமிழக புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று பதவியேற்பு

தமிழக புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று பதவியேற்பு

தமிழக புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

ராஜ்பவனில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமியும் பங்கேற்றார். அவர் 8வது வரிசையில் தனியாக அமர்ந்திருந்தார்.

இதேபோல சபாநாயகர் அப்பாவு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோரும் இந்த விழாவில் பங்கேற்றனர்.


புதிய ஆளுநர் பதவியேற்பு

பஞ்சாபின் முழுநேர ஆளுநராக பன்வாரிலால் புரோகித் சென்றுவிட்டதால் பீகாரைச் சேர்ந்த ஆர்.என்.ரவி தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட்டார். இவர் இதற்கு முன்பு நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநராக பதவி வகித்தவர் ஆகும். ஆளுநராக பதவியேற்று, பதவி ஏற்பு விழா முடிந்ததும் ஆளுநருக்கு புத்தகங்களை பரிசாக வழங்கி வாழ்த்து தெரிவித்தார் முதல்வர் ஸ்டாலின். ஆளுநரின் மனைவிக்கும் சால்வை வழங்கி கவுரவித்தார்.

8வது வரிசையில் எடப்பாடி

இதேபோன்று தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜியும் புதிய ஆளுநரை வரவேற்றார். இந்த பதவியேற்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி எட்டாவது வரிசையில் அமர்ந்து இருந்ததை கவனிக்க முடிந்தது . அவருக்கு அடுத்த இருக்கையில் மத்திய இணையமைச்சர் முருகன் அமர்ந்திருந்தார் . பின் வரிசையில், தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. அமர்ந்திருந்தார். ஆனால் பிறருக்கு இடையே நன்கு இடைவெளி விடப்பட்டு இருக்கை போடப்பட்டிருந்தது.

செல்போன் பார்த்துக் கொண்டிருந்தார்

எடப்பாடி பழனிச்சாமி வேறு யாருடனும் பேசியதை கவனிக்க முடியவில்லை. அவர் குனிந்தபடி தனது செல்போனில் எதையோ பார்த்துக் கொண்டு இருந்தார். அதிமுக தரப்பிலிருந்து, வைத்திலிங்கம், தங்கமணி, தனபால், வேலுமணி ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். பாஜக தலைவர் அண்ணாமலையும் இதில் கலந்து கொண்டார்.

எடப்பாடியை அறிமுகம் செய்த ஸ்டாலின்

இதனிடையே பதவியேற்பு விழா முடிந்ததும், ஆளுநருக்கு வாழ்த்து தெரிவிக்க மேடைக்கு வந்த எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை, ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார். எதிர்க்கட்சித் தலைவரை, மேடையில் ஆளுநருடன் அமர்ந்திருக்கும் முதல்வர் ஆளுநருக்கு அறிமுகம் செய்து வைப்பது என்பது வழக்கமான மரபு. அதை பின்பற்றி முதல்வர், எடப்பாடி பழனிச்சாமியை, அறிமுகம் செய்து வைத்தபோது, ஆளுநர் மற்றும் எடப்பாடிபழனிசாமி ஆகிய இருவரும் பரஸ்பரம் வணக்கம் என்று கூறிக் கொண்டனர்.

சர்ச்சை

புதிய ஆளுநரின் வருகைக்கு முன்பே காங்கிரஸ் தலைவர் அழகிரி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட எதிர்க்கட்சி வரிசையில் உள்ள பலரும் அவரது நியமனத்திற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்தனர். எனவே புதிய ஆளுநரின் செயல்பாடு மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநரின் அடுத்தடுத்த நடவடிக்கைகளை பொறுத்துதான் தமிழக அரசியல் நிலவரம் சூடுபிடிக்க ஆரம்பிக்கப் போகிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.