திருமண சான்றிதழ்களை அங்கீகரிக்க புதிய வசதி!

 திருமண சான்றிதழ்களை அங்கீகரிக்க புதிய வசதி!


சென்னை:திருமணம் மற்றும் பிறப்பு சான்றிதழ்களை அங்கீகரிக்க, புதிய ஆன்லைன் வசதியை, பதிவுத் துறை பயன்படுத்த துவங்கியுள்ளது.

சார் - பதிவாளர் அலுவலகங்களில், சொத்து விற்பனைக்கான பத்திரப்பதிவு பிரதான பணியாக உள்ளது. அத்துடன், திருமணம், பிறப்பு தொடர்பான பதிவு பணிகளும் மேற்கொள்ளப் படுகின்றன.

இவ்வாறு பதிவு செய்யப்படும் நிலையில், இவை தொடர்பான சான்றுகளை பதிவுத் துறை வழங்கி வருகிறது.

இந்த சான்றிதழ்களை பிற அரசு அலுவலகங்களில் பயன்படுத்தும் வகையில், 

சார் - பதிவாளர்கள் அங்கீகார சான்று வழங்க வேண்டும்.

இந்நிலையில், மத்திய அரசின் வெளியுறவுத் துறை, சான்றிதழ்களை அங்கீகரிப்பதற்கான புதிய ஆன்லைன் சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த சேவை, http://esanad.nic.in/ என்ற, இணையதளம் வாயிலாக வழங்கப்படுகிறது. 

புதிய வசதியை சார் - பதிவாளர்கள் பயன்படுத்த, பதிவுத் துறை ஏற்பாடு செய்துள்ளது.

ஆன்லைன் பத்திரப்பதிவுக்கான சாப்ட்வேரில், இப்புதிய இணையதளம் சேர்க்கப்பட்டு உள்ளது. 

எனவே, சார் - பதிவாளர்கள் இதை பயன்படுத்தி திருமணம், பிறப்பு சான்றிதழ்களுக்கு ஆன்லைன் முறையில் அங்கீகாரம் வழங்க, பதிவுத் துறை உத்தரவிட்டுஉள்ளது.

இதனால், நாட்டின் எந்த மாநிலத்திலும், எந்த அரசு துறை அலுவலகங்களிலும், இந்த சான்றிதழ்களை பொது மக்கள் பயன்படுத்தலாம்.

இதில், சரிபார்ப்பு தொடர்பான பிரச்னைகள் ஏற்படாது என்று கூறப்படுகிறது.