மீண்டும் வேலை வழங்கக்கோரி, திருநெல்வேலியில் தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள், கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்!

 மீண்டும் வேலை வழங்கக்கோரி, திருநெல்வேலியில் தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள், கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்!

 திருநெல்வேலி,செப்.7:- "பாரதப்பிரதமர்" நரேந்திர மோடியால், 2018- ஆம் ஆண்டு, "தேசபிதா" மகாத்மா காந்தியடிகளின், பிறந்த தினமான, அக்டோபர் 2-ஆம் தேதி, நாடுமுழுவதும் அறிமுகப்படுத்தப்பட்ட, "தூய்மை இந்தியா திட்டம்" ( SWACHH BHARAT MISSION), திருநெல்வேலி உட்பட, நாட்டின் அனைத்து பகுதிகளிலும்,இன்று வரையிலும், செயல்பாட்டில் இருந்து வருகிறது. கழிப்பறை வசதி இல்லாத வீடுகளில் கழிப்பறைகளை, உருவாக்கி கொடுத்தல், குப்பைகளை தரம்பிரித்து வழங்குவது குறித்து, ஒவ்வொருவரிடமும் அறிவுறுத்துதல், டெங்கு களப்பணியாளர்களை, கண்காணித்தல், தடை செய்யப்பட்டுள்ள, பிளாஸ்டிக் பொருட்களை கண்டறிந்து, அவற்றை பறிமுதல் செய்தல், பேரூராட்சியின் வரிவசூல் பணிகளை மேற்பார்வையிடுதல், கொரோனா நோயாளிகளை அடையாளம் கண்டு, அவர்களை  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தல், தேர்தல் காலங்களில், தேர்தல் தொடர்பான வேலைகளில் ஈடுபடுதல்  போன்ற பல்வேறு பணிகளை, "தூய்மை இந்தியா" திட்ட பணியாளர்கள், மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், இந்த ஆண்டு (2021)  ஜூலை மாதம் வரையிலும்,  பணியில் இருந்து வந்த இவர்கள், திடீரென வேலையில் இருந்து, அதிரடியாக நீக்கப்பட்டனர். இதனால், இந்த தொழிலாளர்களும், அவர்களின் குடும்பத்தினரும், வருவாய் இழந்து, மிகுந்த மனவேதனை அடைந்துள்ளனர். "இதனை கருத்திற்கொண்டு,   தங்களுக்கு மீண்டும், வேலை வழங்கிட வேண்டும்! " என்னும் கோரிக்கையை முன்வைத்து, திருநெல்வேலியில், "தூய்மை இந்தியா" திட்ட பணியாளர்கள், இன்று (செப்டம்பர்.7) காலையில், "கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்" செய்தனர். திருநெல்வேலி, பாளையங்கோட்டை, என்.ஜி.ஓ.காலனியில் உள்ள, பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மணடல அலுவலகம் முன்பாக நடைபெற்ற, இந்த "கோரிக்கை" முழக்க ஆர்ப்பாட்டத்தை, சி.ஐ.டி.யூ.மாவட்ட செயலாளர் ஆர்.மோகன்,  தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். சுமார் இரண்டுமணி நேரம்  நடைபெற்ற, இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, கோரிக்கைகளை வலியுறுத்தி, " குரல்" எழுப்பினர்.