பாலியல் தொழில் குற்றமல்ல: மும்பை ஐகோர்ட் கருத்து!

 பாலியல் தொழில் குற்றமல்ல: மும்பை ஐகோர்ட் கருத்து!


மும்பை:'பாலியல் தொழில் தடுப்பு சட்டத்தின் படி, பாலியல் தொழில் செய்வது, கிரிமினல் குற்றமாக கருதப்படவில்லை' என, மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மஹாராஷ்டிர தலைநகர் மும்பையில் உள்ள விருந்தினர் இல்லத்தில், கடந்தாண்டு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அங்கிருந்த மூன்று பெண் பாலியல் தொழிலாளர்களை பிடித்த போலீசார், அவர்களை சீர்திருத்த மையத்திற்கு அனுப்பிவைத்தனர். 

அந்த பெண்களின் பெற்றோர், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முறையிட்டனர்.

சீர்திருத்த மையத்திலிருந்து அந்த பெண்களை விடுவிக்க உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்தனர். எனினும், அவர்களின் கோரிக்கையை ஏற்க, மாஜிஸ்திரேட் மறுத்து விட்டார். இதையடுத்து, அந்த மூன்று பெண்கள் தரப்பில், மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த, நீதிபதி பிருத்விராஜ் சாவன் கூறியதாவது:

பாலியல் தொழில் தடுப்பு சட்டத்தின் படி, பாலியல் தொழில் செய்வது, கிரிமினல் குற்றமாக கருதப்படவில்லை; எனவே, அதற்கு தண்டனை வழங்கப்படுவது சரியல்ல.கைது செய்யப்பட்டுள்ள பெண்கள் அனைவரும், 18 வயதை கடந்தவர்கள். தாங்கள் செய்ய விரும்பும் தொழிலை, தேர்வு செய்து கொள்ளும் உரிமை அவர்களுக்கு உள்ளது.

இதுவரை, பாலியல் தொழில் செய்யும் பெண்களுக்கு தண்டனை வழங்கப்பட்டதில்லை. 

பாலியல் தொழில் தடுப்பு சட்டத்தின் படி, பாலியல் தொழிலுக்காக, பிறரை கவர்ந்திழுக்கும் வகையில் நடந்து கொள்வதும், விபசார விடுதியை நடத்துவதும் குற்றமாகும். 

அவற்றை, அந்த மூன்று பெண்களும் செய்ததாக தெரியவில்லை. எனவே, இந்த மூன்று பெண்களை, இனியும் சீர்திருத்த முகாமில் அடைத்து வைக்கக்கூடாது. உடனடியாக, அவர்களை விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.