மாணவர்கள் நேரடி வகுப்புக்கு வர வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை : ஐகோர்ட் எச்சரிக்கை
மாணவர்கள் நேரடி வகுப்புக்கு வர வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. நெல்லையை சேர்ந்த அப்துல் வகாபுதின் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் பள்ளிகளில் நேரடி வகுப்பிற்கு தடை விதிக்க வேண்டுமென மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், பல்வேறு துறை நிபுணர்களின் ஆலோசனையின்படி 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புகள் வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் செப்.1 முதல் நடந்து வருகின்றன. இதனால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதித்து வருகிறது. . எனவே பள்ளிகளிலில் நேரடி வகுப்பிற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் துரைசாமி, முரளிசங்கர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “60க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் கொரோனா நோய்த் தொற்றின் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். பல பள்ளிகளில் மாணவர்கள் கட்டாயம் நேரடி வகுப்பிற்கு வர வேண்டும் என கூறுகின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், கட்டாயமாக மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என கூறும் பள்ளிகளின் விவரங்கள் மனுதாரர் தெரிவித்தால் அந்த பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க நாங்கள் பரிந்துரை செய்கிறோம் எனத் தெரிவித்தனர்.
மேலும் வழக்கு குறித்து முதன்மை செயலாளர், பள்ளி கல்வித் துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 30ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.