மீண்டும் மாநிலப் பொதுச் செயலாளர் பதவி கே.டி.ராகவனுக்குக் கிடைத்த சிக்னல்: விஜயேந்திரருடன் சந்திப்பு ரகசியம்...!

 மீண்டும் மாநிலப் பொதுச் செயலாளர் பதவி கே.டி.ராகவனுக்குக் கிடைத்த சிக்னல்: விஜயேந்திரருடன் சந்திப்பு ரகசியம்...!


பாஜகவின் பொதுச் செயலாளராக இருந்து ஆகஸ்ட் கடைசி வாரத்தில் பாலியல் சர்ச்சையில் சிக்கி தனது பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் கட்சி நடவடிக்கைகளில் கலந்துகொள்ளாமல் ஒதுங்கியே இருந்தார். பொதுச் செயலாளர் ஆனதும் வெளியூர் பயணங்கள் தவிர மீத நாட்களில் கமலாலயம் வந்துவிடும் கே.டி.ராகவன், இந்த சர்ச்சைக்குப் பிறகு கமலாலயத்துக்கும் வருவதில்லை, கட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதில்லை.

இந்த நிலையில் சமூக தளப் பக்கத்தின் மூலம் மெல்ல மெல்ல கருத்துகளையும் பதிவுகளையும் இட்டு வந்த கே.டி.ராகவன், நேற்று (செப்டம்பர் 9) முதல் களத்தில் இறங்கியிருக்கிறார்.

செப்டம்பர் 9ஆம் தேதி காலை செங்கல்பட்டு சிறைக்கு சென்றார் ராகவன். காஞ்சிபுரம் நகரில் விநாயகர் சதுர்த்தி தொடர்பான கோரிக்கை போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு பாஜக, இந்து முன்னணி பொறுப்பாளர்கள் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை சக நிர்வாகிகளோடு சென்று சந்தித்துவிட்டு வந்திருக்கிறார் ராகவன். அதைத் தொடர்ந்து நேற்று மாலை காஞ்சி சங்கராச்சாரியாக தற்போது இருக்கும் விஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்றுள்ளார் கே.டி.ராகவன்.

இது தொடர்பாக கே.டி.ராகவனுக்கு நெருக்கமான பாஜகவினர் சிலரிடம் பேசினோம்.

“அந்த பாலியல் சர்ச்சை விவகாரம் ஒரு சில நாட்கள் சூடாக விவாதிக்கப்பட்டது. ஆனால் ராகவனை சட்ட ரீதியாக சிக்கவைக்கும் அளவுக்கு அதில் எந்த உள்ளீடும் இல்லை. எனவேதான் ராகவன் மீது அது தொடர்பாக இதுவரை எந்தப் புகாரும் கொடுக்கப்படவில்லை. ஆனால் இந்த வீடியோவை மையமாக வைத்து அவரது அரசியல் வாழ்வை முடிவுக்குக் கொண்டுவர தமிழக பாஜகவிலேயே இருக்கும் பெரும்புள்ளிகள் சிலர் திட்டமிட்டு இதை அரங்கேற்றியுள்ளனர். இதுவும் ராகவனுக்கு தெரியும்.

விரைவில் ராகவனுக்கு தேசிய செயலாளர் பதவியை டெல்லி மேலிடம் வழங்க இருந்த நிலையில்தான், அந்த பாலியல் வீடியோ வெளியிடப்பட்டு ராகவன் பரமபதத்தில் வெட்டுண்டவர் போல கீழே சறுக்கினார். இப்போது அவரது மாநிலப் பொதுச் செயலாளர் பதவியும் இல்லை.

ஆனால், ராகவன் டெல்லியில் தனக்கு ஆதரவாக இருக்கும் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் மூலமாக தனது நிலையை தலைமைக்கு விளக்கியிருக்கிறார். அதன் அடிப்படையில் அவருக்குக் கிடைத்த சில சிக்னல்களின் அடிப்படையில்தான் சுமார் இரண்டு வாரத்துக்குப் பிறகு கட்சி தொடர்பான செயல்பாட்டில் நேரடியாக களத்தில் இறங்கியுள்ளார். டெல்லி சிக்னலுக்குப் பிறகே தனக்கு நெருக்கமான விஜயேந்திரரையும் ராகவன் நேற்று சந்தித்துள்ளார்.

எனவே விரைவில் கே.டி.ராகவனுக்கு மீண்டும் மாநிலப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்படலாம். ஆனால் அதைத் தடுக்க கட்சிக்குள்ளேயே பலத்த தடுப்புகளும் சிலரால் போடப்பட்டு வருகின்றன” என்கிறார்கள்.