லஞ்சம் வாங்கிய பெண் வி.ஏ.ஓ.,கைது; வீட்டிலிருந்து ரூ.12 லட்சம் பறிமுதல்!
பட்டா மாற்றத்திற்கு லஞ்சம் பெற்ற பெண் வி.ஏ.ஓ., கைது செய்யப்பட்டார்.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த நண்டுக்குழியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் அரிகிருஷ்ணன்,49; இவரது நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய மனு கொடுத்தார்.
மனுவை பெற்ற வி.ஏ.ஓ.,செண்பகவள்ளி,38; ரூ. 10 ஆயிரம் லஞ்சம் கேட்டார். இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. அலுவலகத்தில் அரிகிருஷ்ணன் புகார் செய்தார்.
அவர்கள் ஒரு கவரில் 8,000 ரூபாயை வைத்து அரிகிருஷ்ணனிடம் கொடுத்தனர்.
அதன்படி காட்டுக்கூடலுார் அலுவலகத்தில் வி.ஏ.ஓ.,செண்பகவள்ளியை நேற்று காலை சந்தித்து பணத்தை அரிகிருஷ்ணன் கொடுத்தார்.
அப்போது லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் டி.எஸ்.பி., ராஜாமெல்வின்சிங் தலைமையில்வி.ஏ.ஓ.,வை கைதுசெய்தனர்.
அவரை கடலுார் அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று விசாரித்தனர்.
பணம் பறிமுதல்:
இதையடுத்து பண்ருட்டி அடுத்த எல்.என்.புரத்தில் உள்ள அவரது வீட்டில் விஜிலென்ஸ் போலீசார் சோதனை நடத்தி அங்கு இருந்த ரூ.12 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து மேலும் விசாரிக்கின்றனர்.