தமிழ்நாடு பிரஸ் கவுன்சில்: உயர்நீதிமன்றம் உத்தரவு-முழு விவரம்!

 தமிழ்நாடு பிரஸ் கவுன்சில்: உயர்நீதிமன்றம் உத்தரவு-முழு விவரம்!


போலி ஊடகவியலாளர்களை களையெடுக்கும் முயற்சியாக தமிழக அரசு மூன்று மாதங்களுக்குள் தமிழ்நாடு பத்திரிகை கவுன்சில் என்ற அமைப்பை அமைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழகத்தில் பத்திரிகையாளர்கள் என்பதை கேடயமாக பயன்படுத்தி சிலர் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அவ்வப்போது புகார்கள் எழுவது வழக்கமாகிவிட்டது. இப்போது கூட ஆகஸ்டு 28 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம், ‘தமிழ்நாடு பத்திரிகை கவுன்சில்’ அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது அப்படிப்பட்ட ஒரு விவகாரத்தை அறிந்துதான்.

சேகரன் என்பவர் தன்னை பத்திரிகையாளர் என்று குறிப்பிட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு பொது நல மனுக்களைத் தாக்கல் செய்தார். .

சேகரன் தனது முதல் மனுவில் சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரித்த முன்னாள் டிஐஜி பொன். மாணிக்கவேல் திறனற்ற விசாரணை நடத்தியிருக்க்கிறார், அவர் குற்றவாளிகளை தப்ப விட்டிருக்கிறார் எனவே அவரது விசாரணை பற்றி ஆய்வு நடத்த குழுவை அமைக்க வேண்டுமென உள்துறைச் செயலாளர், டிஜிபி, சிபிசிஐடி தலைவர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இன்னொரு பொது நல மனுவில் இரு அதிகாரிகள் தொடர்புடைய ஒரு அறக்கட்டளை விதிகளை மீறி பணம் வசூலிக்கிறது என்றும் அதுகுறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். அந்த அறக்கட்டளைக்கும் பொன்.மாணிக்கவேலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்பது மனுதாரர் சேகரனின் சந்தேகம்.

இந்த வழக்கு விசாரணையின்போது பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக மனு தாக்கல் செய்தவர் சிலை திருட்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காதர் பாட்ஷாவுடன் தொடர்புடையவர் என்பதை நீதிபதிகள் அறிந்தனர்.

அவர் ஒரு பத்திரிகையாளர் என்பதை நீதிபதிகள் முழுமையாக நிராகரிக்கவில்லை என்றாலும், சிலை திருட்டு வழக்குகளின் விசாரணையை திசை திருப்புவதற்கு ஒரு காரணியாக இருக்கிறார் என்று நீதிபதிகள் கருதினர்.

இதை அடிப்படையாக வைத்துதான் இந்த வழக்குக்குத் தொடர்பில்லை என்றாலும் முக்கியத்தும் வாய்ந்த உத்தரவை நீதிபதிகள் என் கிருபாகரன் (ஓய்வு பெற்றதிலிருந்து) மற்றும் பி வேல்முருகன் ஆகியோர் அளித்துள்ளனர்.

“இப்போதெல்லாம் வாகனங்களில் PRESS என்பதையும் மனித உரிமை என்ற ஸ்டிக்கர்களையும் சர்வசாதாரணமாக பார்க்க முடிகிறது. கொடூரமான குற்றங்களில் சிக்கிய பின்னர் இதுபோன்ற மோசடி செய்பவர்கள் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த போலி ஊடகவியலாளர்கள் போலி ஊடக சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்களை உருவாக்கி, அனைத்து வகையான சமூக விரோதிகளையும் உறுப்பினர்களாக சேர்த்து, "PRESS" அடையாள அட்டைகளை வழங்குகிறார்கள். அவை பணம் சம்பாதிக்கும் சாதனமாகப் பயன்படுத்தப்படுகின்றன.

தகவல் மற்றும் மக்கள் தொடர்பு இயக்குநரகம் இதை அறிந்திருக்கிறது, ஆனால் அதிகாரிகள் கண்டும் காணாமலும் இருக்கிறார்கள். . ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகைத் துறை சுத்தமாகவும் வலுவாகவும் இருப்பதை உறுதி செய்ய இதுபோன்ற போக்குகள் நிறுத்தப்பட வேண்டும். மேற்கண்ட நிலைப்பாட்டைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களின் நலன் கருதி ஊடகங்களை சுத்தம் செய்ய தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும்” என்ற நீதிபதிகள் அதற்கான வழிகாட்டுதல்களையும் வழங்கினார்கள்,

“போலி பத்திரிகையாளர்களை தடுக்கவும் முடக்கவும் தமிழ்நாடு அரசு தமிழ்நாடு பத்திரிகை கவுன்சில் என்ற அமைப்பை உருவாக்க வேண்டும். தமிழ்நாடு பத்திரிகை கவுன்சிலுக்கு உச்சநீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமை தாங்க வேண்டும். அதன் உறுப்பினர்கள் அனுபவம் வாய்ந்த மற்றும் புகழ்பெற்ற பத்திரிகையாளர்களாக இருக்க வேண்டும். பணியில் இருக்கும் அல்லது ஓய்வு பெற்ற அதிகாரிகளை இக்குழுவில் நியமிக்கலாம். .

மாநிலத்தில் உள்ள பிரஸ் கிளப்புகள் மற்றும் பத்திரிகையாளர்கள் சங்கங்கள் அல்லது தொழிற்சங்கங்களை அங்கீகரிக்க இந்த கவுன்சிலுக்கு முழு அதிகாரம் வேண்டும், மேலும் இந்த கவுன்சில் சாதி, சமூகம் அல்லது மாநில எல்லைகளின் அடிப்படையில் கிளப்புகள் அல்லது தொழிற்சங்கங்கள் அல்லது சங்கங்களை உருவாக்கவோ அல்லது தொடரவோ அனுமதிக்காது.

இந்த பத்திரிகையாளர் கிளப்புகள் மற்றும் சங்கங்கள், அவற்றின் நிர்வாகத்திற்கான தேர்தல்களை நடத்தி ஒப்புதல் அளிக்கும் கடமையும் பத்திரிகை கவுன்சிலுக்கு இருக்க வேண்டும். எந்தவொரு ஊடகவியலாளர்களுக்கும் மாநில அரசு நேரடியாக எந்த வீட்டையும் ஒதுக்கவோ அல்லது இலவச பஸ் பாஸ்களை வழங்கவோ கூடாது, அது கவுன்சிலின் வழியாக மட்டுமே வழிநடத்தப்பட வேண்டும்,

போலி ஊடகவியலாளர்களின் அச்சுறுத்தலைக் குறைக்க, கவுன்சிலுக்கு அத்தகைய நபர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக போலீசில் புகார் அளிக்க அதிகாரம் உள்ளது. பொதுமக்களும், பாதிக்கப்பட்ட மற்ற மக்களும், போலி பத்திரிகையாளர்கள் மீது தங்கள் புகார்களை கவுன்சிலுக்கு அனுப்பலாம், இது போன்ற போலி பத்திரிகையாளர்களுக்கு எதிராக கிரிமினல் நடவடிக்கைகளைத் தொடங்கும்” என்று உயர் நீதிமன்ற பெஞ்ச் கூறியுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்துஜா ரகுநாதன், “ பத்திரிகை உலகில் இன்று அங்கீகாரமற்ற கிளப்புகள் மற்றும் மிகச் சிலரால் நடத்தப்படும் பத்திரிகை சங்கங்கள் அதிகரித்திருக்கும் நிலையில் இந்த உத்தரவால் நன்மையே. அதேநேரம், . பிரஸ் கவுன்சில் மாநிலத்தில் ஒரு நியாயமான மற்றும் சுதந்திரமான சங்கங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அமைக்கப்பட இருக்கும் பிரஸ் கவுன்சிலில் நடுநிலையாளர்கள் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய உறுப்பினர்கள் இருப்பார்கள் என்று நம்புகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.