ஒன்றிய தலைவர் முதல் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வரை: கே. என். நேருவின் அரசியல் பயணம் ஒரு பார்வை
எதிர்பார்த்தபடியே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராகி உள்ளார் திமுக முதன்மை செயலாளரும் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவருமான கே.என்.நேரு. திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள காணக்கிளியநல்லூர் என்ற ஊரில்,1952 ஆம் ஆண்டு நவம்பர் 9 ல் பிறந்தவர் கே. என். நேரு. இவரது தந்தை நாராயணசாமி ரெட்டியார், தாயார் தனலட்சுமி அம்மாள். உடன் பிறந்தவர்கள் 7 பேர். தீவிர காங்கிரஸ் ஆதரவாளராக இருந்த இவரது தந்தை நாராயணசாமி,ஜவகர்லால் நேரு மீது இருந்த பிரியம் காரணமாகவும், தனது மகனும் நேருவை போல் பேர் சொல்லும் பிள்ளையாக ஆக வேண்டும் என்ற எண்ணத்திலும் இவருக்கு 'நேரு' எனப் பெயர் சூட்டினார். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த நேரு பி.யூசி வரை பயின்றவர். அரியநல்லூரில் மிளகாய் மண்டி, புள்ளம்பாடியில் பால் சொசைட்டி என ஆரம்ப காலங்களில் சொந்த தொழில் செய்து வந்த நேரு, அந்த நேரத்தில் எப்போதும் புல்லட்டில் வலம் வருவார். இதன் காரணமாக 'புல்லட் நேரு’ என அப்போது அழைக்கப்பட்டிருக்கிறார். கையில் சற்றுக் காசு பணம் புழங்கி, சுற்று வட்டாரத்தில் கிடைத்த நல்ல அறிமுகத்தால் அரசியலில் நுழைய விரும்பினார். சிறு வயது முதலே கருணாநிதி மீது கொண்ட ஈர்ப்பினால் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த காலத்தில், நீண்ட நாட்களாக நடத்தப்படாமலிருந்த உள்ளாட்சித் தேர்தல் 1986 ஆம் ஆண்டு நடைபெற்றது. அந்தத் தேர்தலில் புள்ளம்பாடி யூனியன் தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் போட்டியிட்டுவென்றார். பின்னர் ஒன்றிய செயலாளர், மாவட்டச் செயலாளர் எனப் படிப்படியாக வளர்ச்சி கண்டார்.
எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர் 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், லால்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். அப்போது மாவட்ட திமுகவில் நிலவிய கோஷ்டி பூசல் காரணமாக புதிதாக ஒருவருக்கு அமைச்சர் பதவி கொடுக்க, கட்சித் தலைவர் கருணாநிதி முடிவு செய்து தேடியபோது, நேருவுக்கு அடித்தது அதிர்ஷ்டம். 1989 முதல் 1991 வரையிலான திமுக ஆட்சியில் மின்சாரத் துறை, பால்வளம், செய்தித் துறை, தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பணியாற்றினார்.எப்போதும் திருச்சியில் தொண்டர்கள் புடை சூழ கட்சிப் பணிகளை ஆற்றி வருபவர். திமுகவில் இருந்து வைகோ பிரிந்து சென்று மதிமுகவை தொடங்கியபோது அவருடன் பல்வேறு மாவட்டச் செயலாளர்களும் உடன் சென்றனர். அவர்களில் திருச்சி மாவட்ட செயலாளராக இருந்த செல்வராஜும் ஒருவர். இதனால் அந்த பதவி காலியானது. அடுத்ததாக யாரை நியமிக்கலாம் என்று திமுக தலைமை ஆலோசனை செய்தது. அப்போது கே.என்.நேருவை மாவட்டச் செயலாளர் ஆக்கலாம் என்று கருணாநிதியிடம் திமுகவின் பலம் வாய்ந்த தலைவராக இருந்த கோ.சி.மணி சிபாரிசு செய்தார். அப்போது முதல் 27 ஆண்டுகள் திருச்சி மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர், தற்போது திமுக முதன்மை செயலாளராகவும் உள்ளார். 1996 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியமைத்தபோது, உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சரானார். 2006-ல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று போக்குவரத்துத்துறை அமைச்சரானார். 2011-ல் நடந்த தேர்தலில் அதிமுக வேட்பாளரிடம்தோல்வியடைந்தவர், 2016-ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றார். தற்போது 2021 தேர்தலில் வெற்றி பெற்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராகி உள்ளார்.