சட்ட மேல்சபை வருமா? சட்ட மேல்-சபையை எம்.ஜி.ஆர். ஏன் கலைத்தார் தெரியுமா...? பரம ரகசியம் அம்பலம்...!
திமுகவின் சட்டசபை தேர்தல் வாக்குறுதிகளில் மிக முக்கியமான ஒன்றாக எதிர்பார்க்கப்படுவது சட்ட மேலவை (சட்ட மேல்சபை) மீண்டும் உருவாக்கப்படும் என்பதுதான். இந்த நியமன பதவிகளிலாவது திமுகவுக்காக அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக உழைத்து, சிறைவாசம் அனுபவித்து இன்னமும் பிரதிபலன் பாராமல் ஓடிக் கொண்டே இருக்கும் மூத்தவர்களுக்கு அங்கீகாரம் தரப்படுமா? என்பது மக்களிடத்தில் மட்டுமல்ல திமுகவினரிடத்திலும் பெரும் எதிர்பார்ப்பு.
நாட்டில் 6 மாநிலங்களில்தான் சட்ட மேலவை தற்போது நடைமுறையில் உள்ளது. 1986-ம் ஆண்டு தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர். இருந்தபோதுதான் இந்த சட்ட மேலவை கலைக்கப்பட்டது.
தமிழக சட்ட மேலவை கலைக்கப்பட்டதன் பின்னணியில் சுவாரசியமான சர்ச்சை வரலாறும் உண்டு. 1986-ல் எம்.ஜி.ஆர். தம்முடன் திரைப்படங்களில் நடித்த வெண்ணிற ஆடை நிர்மலாவை சட்டமேல்சபை உறுப்பினராக்கினார். ஆனால் வெண்ணிற ஆடை நிர்மலா பதவியேற்புக்கு முன்னதாகவே அவருக்கு எதிராக ஒரு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. முன்பு தம்மை திவால் ஆனவர் என வெண்ணிற ஆடை நிர்மலா அறிவித்திருந்தார். அப்படி திவாலான நபர்கள், சட்டமேலவை உறுப்பினராக முடியாது என்பதை சுட்டிக்காட்டி இந்த வழக்கு தொடரப்பட்டது. இது தமிழகத்தில் அப்போது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
உடனடியாக முதல்வராக இருந்த எம்ஜிஆர், அதிமுக நிதியில் இருந்து ரூ.4.65 லட்சத்தைக் கொடுத்து வெண்ணிற ஆடை நிர்மலாவின் திவால் சூழ்நிலையை மாற்ற முயன்றார். இதனடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம், வெண்ணிற ஆடை நிர்மலா திவால் ஆனவர் அல்ல என தீர்ப்பளித்தது. ஆனால் வெண்ணிற ஆடை நிர்மலா தமது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். இது புதிய சர்ச்சையானது. அப்போதைய ஆளுநர் குரானா, திவாலான நபரை எப்படி சட்ட மேலவை உறுப்பினராக்கினீர்கள் என கேட்க கடுப்பாகிப் போனார் எம்ஜிஆர். அப்போதுதான் சட்ட மேலவையையே கலைப்பது என எம்ஜிஆர் முடிவு செய்தார்.
இதன் பின்னர் 1989, 1996, 2006 சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்ற திமுக ஆட்சிக் காலத்தில் சட்ட மேலவைகள் கொண்டுவர முயற்சிக்கப்பட்டன. 2011-ன் இறுதியில் சட்ட மேலவை சட்டப்படியாக உருவாகும் நிலை இருந்தது. அதற்காகவே கலைஞர் ஆட்சியில் ஆயிரம் கோடி செலவில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலக கட்டிடத்தில் மேல்சபை கென்று தனி கூட்ட அரங்கத்தையே வடிவமைத்து வைத்திருந்தார்.
ஆனால் 2011 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய ஜெயலலிதா, இந்த முயற்சியை கைவிட்டார். இப்போது சட்டசபை தேர்தலில் மீண்டும் மேலவையை கொண்டுவருவோம் என திமுக உறுதியளித்திருந்தது.
இதனால் இந்த முறை எப்படியும் சட்ட மேலவை கொண்டுவரப்படும் என்றே தெரிகிறது. அப்படி சட்டமேலவை கொண்டுவரப்படும் போது கல்வியாளர்கள், பொருளாதார வல்லுநர்கள் என துறைசார் வல்லுநர்கள் இடம்பெறுவர். அவர்களுடன் திமுகவில் இதுவரை அங்கீகாரம் கிடைக்காமல், கட்சி நலன் கருதி மட்டுமே உழைத்துக் கொண்டிருக்கும் பல சீனியர்களுக்கும் வாய்ப்பு தரப்பட வேண்டும் என்பது பலரது எதிர்பார்ப்பு.
இது தொடர்பாக திமுகவின் மூத்த மாநில நிர்வாகி ஒருவரிடம் நாம் பேசியபோது, பொதுவாக தேர்தல் களத்தில் பொருளாதாரம் மற்றும் ஜாதிய பலம் ஆகியவற்றின் அடிப்படையில் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. ஆனால் இது போன்ற நியமனப் பதவிகளில் கட்சிக்காக நெடுங்காலம் உழைத்து கொண்டிருக்கும் கொள்கை பற்றாளர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படுவது மரபு. அந்த மரபை இப்போதும் பின்பற்றி கட்சிக்காக எந்த பிரதிபலனும் பார்க்காமல் உழைத்து கொண்டு அத்தகைய மூத்தவர்களுக்கு ஒரு அங்கீகாரமாக இத்தகைய நியமன பதவிகளை வழங்க வேண்டும். பொதுவாகத் தேர்தல் களத்துக்குப் போகிறவர்களும் வெல்வதும் தோற்பதும் இயல்பு. அவர்களுக்கான வாய்ப்புகளும் அங்கீகாரமும் அடுத்தடுத்து வந்து கொண்டுதான் இருக்கும். அதைப்பற்றி கடைகோடி தொண்டன் பொதுவாகப் பெருமிதப்படுவதில்லை. ஆனால் கட்சிக்காக உழைத்துக் கொண்டே இருக்கும் கொள்கையாளர்கள், மூத்தவர்களுக்கு இதுபோன்ற அங்கீகாரங்களை வழங்கும் போதுதான் அந்த கடைக்கோடி தொண்டன் தமக்கு கிடைத்ததைப் போல ஒரு மகிழ்வை வெளிப்படுத்துவான்; கட்சி மீதான பற்றுதலும் அவனது செயல்பாடுகளும் உத்வேகம் பெறும் என்கின்றனர். இதனை திமுக தலைமை கவனத்தில் கொள்ளுமா? என்பது எதிர்பார்ப்பு.