சினிமா தயாரிப்பாளராக இருந்து நடிகராகி, எம்எல்ஏ வாகி, அமைச்சராகப் போகும் உதயநிதி இனி சினிமாவில் நடிப்பாரா...?
தமிழ் சினிமாவை பொறுத்தவரை தயாரிப்பாளர், விநியோகஸ்தர், நடிகர், அரசியல்வாதி என பல முகங்களைக் கொண்டவர் உதயநிதி ஸ்டாலின். 2008 ம் ஆண்டு ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனத்தை துவக்கிய உதயநிதி, முதல் படமாக விஜய் நடித்த குருவி படத்தை தயாரித்தார்.
தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் ஆதவன், மன்மதன் அம்பு, ஏழாம் அறிவு ஆகிய படங்களை தயாரித்தார். இவர் தயாரித்த படங்களை அனைத்தும் ஹிட் ஆனது. பிறகு விண்ணைத் தாண்டி வருவாயா, மதராச பட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், மைனா, பக்ரித் ஆகிய படங்களின் மூலம் விநியோகஸ்தராகவும் அவதாரம் எடுத்தார் உதயநிதி.
துவக்கத்தில் ஆதவன், வண்க்கம் சென்னை படங்களில் சிறப்பு தோற்றங்களில் நடித்த உதயநிதி, 2012 ல் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் ஹீரோவானார். பிறகு இது கதிர்வேலன் காதல், நண்பேன்டா. கெத்து, மனிதன் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்தார். கடைசியாக இவர் நடித்த சைக்கோ படம் 2020 ம் ஆண்டு ரிலீசானது.
அதன் பிறகு தீவிர அரசியலில் களமிறங்கிய உதயநிதி ஸ்டாலின், தற்போது நடந்து முடிந்துள்ள தமிழக சட்டசபை தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். விரைவில் பதவியேற்க உள்ள ஸ்டாலின் தலைமையிலான புதிய அமைச்சரவையில் உதயநிதிக்கு இடம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதே சமயம் உதயநிதி தற்போது கண்ணை நம்பாதே, ஏஞ்சல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக இந்தியில் பிளாக்பஸ்டர் மூவியான ஆர்ட்டிக்கிள் 15 படத்தின் தமிழ் ரீமேக்கிலும் நடிக்க உதயநிதி ஒப்பந்தம் ஆகிய உள்ளார். வேறு சில படங்களில் நடிக்கவும் இவரிடம் கதை சொல்லப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் உதயநிதி எம்எல்ஏ.,வாகி, விரைவில் அமைச்சராகவும் ஆக உள்ளார். இதனால் தொடர்ந்து படங்களில் நடிப்பதில் அவர் கவனம் செலுத்துவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எம்ஜிஆர், விஜயகாந்த், சரத்குமார் ஆகியோர் எம்எல்ஏ ஆன பிறகும் படங்களில் நடித்தனர். இதனால் உதயநிதியும் அதே பாணியை பின்பற்றுவாரா அல்லது நேற்று தேர்தல் வெற்றிக்காக மக்களுக்கு நன்றி தெரிவிக்கையில், உங்கள் வீட்டு பிள்ளையாக மக்கள் பணியாற்றுவேன் என வாக்குறுதி அளித்தபடி முழு நேர அரசியல்வாதி ஆவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கலைஞர் குடும்பத்தில் மு. க. முத்து, மு. க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் என்று பலரும் சினிமாத்துறையில் வலம் வந்தாலும் உதயநிதி பிரகாசித்த அளவிற்கு இவர்கள் யாராலும் பிரகாசிக்க முடியவில்லை.
2006 முதல் 2011 வரை சினிமா உலகத்தையே தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த இவர் சினிமா உலகத்தில் மீண்டும் கோலோச்ச போகிறாரா இல்லை அரசியல் மட்டுமே போதும் என்று மக்கள் பணியாற்ற போகிறாரா என்று பரபரப்பாக பேசப்படுகிறது.