கனிமொழியின் ஏக்கத்தை தீர்த்த மு.க. ஸ்டாலின்
முதல்வராக மு.க.ஸ்டாலின் இன்று பதவியேற்ற நிலையில், சிஐடி நகரில் வசிக்கும் கனிமொழியின் தாயார் ராசாத்தி அம்மாளிடம் ஆசி பெற்றார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை பெற்று வெற்றிப் பெற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வராக இன்று பதவியேற்றுக் கொண்டார்.
ஆளுநர் மாளிகையில் நடந்த எளிமையான பதவியேற்பு விழாவில், ஸ்டாலின் முதல்வராக பதவியேற்க, அவரைத் தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
தேர்தலில் வெற்றிப் பெற்ற பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் ராசாத்தி அம்மாள் இல்லத்திற்கு மட்டும் செல்லாமல் இருந்தார். இதனால், கனிமொழி தரப்பில் மிகுந்த அப்செட்டாக இருந்ததாக செய்திகள் வெளியாகின. குறிப்பாக, தேர்தல் பிரசாரத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்தவர் எம்.பி.கனிமொழி. கடந்த ஆண்டு நவம்பர் மாதமே தேர்தல் பிரசாரத்தை துவக்கிய கனிமொழி, ஏறக்குறைய 150க்கும் மேற்பட்ட இடங்களில் பிரசாரம் செய்திருக்கிறார்
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெற்றிக்காக கடுமையாக உழைத்த கனிமொழி, தேர்தலில் வெற்றிப் பெற்றவுடனேயே அண்ணன் வீட்டுக்கு வருவார் என்று எதிர்பார்த்து காத்திருந்ததாகவும் ஆனால், கடைசி வரை ஸ்டாலின் வராததால் அவர் பெரும் ஏமாற்றம் அடைந்ததாக கூறப்பட்டது. இவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, 'திமுக தலைவர்' என்ற அடையாளம் கொண்ட அண்ணனாக இல்லாமல், அதிகாரப்பூர்வமாக தமிழக முதல்வரான மு.க.ஸ்டாலின் என்ற அண்ணனாக சிஐடி நகர் வீட்டுக்கு இன்று மதியம் சென்றார்.
அங்கு, கலைஞர் கருணாநிதி படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின், பிறகு இராசாத்தி அம்மாள் காலில் விழுந்து ஆசி பெற்றார். கனிமொழியிடம் சிறிது நேரம் உரையாடிய முதல்வர், பிறகு அங்கிருந்து வெளியேறினார். அப்போது, அமைச்சராக பதவியேற்றுள்ள துரைமுருகனும் ஸ்டாலின் உடனிருந்தார்.
தேர்தல் பிரசாரத்தில் கனிமொழியின் பங்கு மகத்தானது என்பதை முதல்வர் ஸ்டாலின் அறியாமல் இல்லை. நட்சத்திர பேச்சாளராக வலம் வந்த கனிமொழி, பிரசாரம் காரணமாக பல நாட்கள் சாப்பிட நேரமில்லாமல் ஓடியதையும் முதல்வர் அறியாமல் இல்லை என்று கூறுகின்றனர் கனிமொழியின் ஆதரவாளர்கள். என்றுமே, தங்கையின் பாசமிகு அண்ணனாக முதல்வர் ஸ்டாலின் இருப்பார் என்பதும் அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.