முதல் நாளிலேயே சபாஷ் வாங்கிய பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ்: கல்வி டிவி, அண்ணா நூலகத்தில் அதிரடி ஆய்வு..

முதல் நாளிலேயே சபாஷ் வாங்கிய பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ்: கல்வி டிவி, அண்ணா நூலகத்தில் அதிரடி ஆய்வு.. 

அண்ணா நூற்றாண்டு நூலகம், கல்வி தொலைக்காட்சியில் ஆய்வுகளை மேற்கொண்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முதல் நாளிலேயே தனது செயல்பாடுகளால் கவனிக்க வைத்துள்ளார்.

திமுக தலைவர் மு க ஸ்டாலின் தமிழக முதல்வராகக் கடந்த வெள்ளிக்கிழமை பதவியேற்றார். அவருடன் சேர்த்து மொத்தம் 34 அமைச்சர்களும் பதவியேற்றனர். ஸ்டாலினின் முதல் அமைச்சரவை அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையிலேயே அமைந்திருந்தது.

கடந்த 2006ஆம் ஆண்டில் கருணாநிதி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 14 பேருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டது. புதியவர்கள் 15 பேருக்கு இந்த முறை வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

பள்ளிக்கல்வி துறை

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட துறைகளில் ஒன்றான பள்ளிக்கல்வித் துறை திருவெறும்பூர் எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு வழங்கப்பட்டது. கருணாநிதி ஆட்சியில் பள்ளிக்கல்வித் துறையைத் தங்கம் தென்னரசு கவனித்து வந்தார். அப்போது சமச்சீர்க் கல்வி, அண்ணா நூற்றாண்டு நூலகம் எனக் கல்வித் துறையில் பல முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதனால் கல்வி துறை மீண்டும் தங்கம் தென்னரசுக்கே ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

அன்பில் மகேஷ்

அதிலும் இப்போது நீட் தேர்வு, மும்மொழிக் கொள்கை, புதிய கல்விக் கொள்கை என மத்திய அரசுப் பள்ளிக் கல்வியில் பல மாற்றங்களைச் செய்ய முயலும் போது, அதைக் கையாள தங்கம் தென்னரசு போன்ற அனுபவம் வாய்ந்த நபர்களே சரியாக இருப்பார்கள் எனப் பலரும் கூறினார். ஆனாலும், இந்த முறை 43 வயதான அன்பில் மகேஷுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

திருவெறும்பூர் தொகுதியில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இந்த முறை சுமார் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரை வீழ்த்தியிருந்தார். மேலும், உதயநிதியின் மிக நெருங்கிய நண்பர். உதயநிதி திருவெறும்பூருக்கு வாக்கு சேகரிக்க வந்தபோது, அன்பில் மகேஷுக்கு வாக்கு கேட்பதும், தனக்கு வாக்கு கேட்பதும் ஒன்றுதான் எனப் பேசியிருந்தார். தலைமைக்கு இந்தளவு நெருக்கத்தில் இருப்பதாலேயே அவருக்குப் பள்ளிக் கல்வித் துறை வழங்கப்பட்டதாகச் சிலர் விமர்சித்தனர்

அவரது செயல்பாடுகள் எப்படியிருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் அவரது ஆதரவாளர்கள், விமர்சகர்கள் என இரு தரப்பில் அதிகமாகவே இருந்தது. இந்நிலையில், நேற்று முதல் நாளிலேயே அண்ணா நூற்றாண்டு நூலகம், கல்வி தொலைக்காட்சி என முக்கிய இடங்களில் ஆய்வுகளைச் செய்து சபாஷ் வாங்கியுள்ள புதிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ். மேலும், நூலகத்தில் இருந்த விருந்தினர் பதிவேட்டில் அவர், ‘கலைஞரின் கைவண்ணம் கண்டோம், பிரமித்துப் போனோம்' என்றும் குறிப்பிட்டார்.

அண்ணா நூலகம் புத்துயிர் பெறும்

அதைத்தொடர்ந்து பேசிய அவர், அமைச்சராகப் பதவியேற்றதும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை ஆய்வு செய்வது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த நூலகம் பல முக்கிய அரசு அதிகாரிகளை உருவாக்கியுள்ளது. ஆனால் கடந்த பத்து ஆண்டுகளாக இது பராமரிக்கப்படாமல் உள்ளது வருத்தத்தை ஏற்படுத்துகிறது. நூலகங்களைப் புனரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். திறப்பு விழாவில் இருந்ததைப் போல நூலகம் மீண்டும் புத்துயிர் பெறும் என்று கூறினார்.

கல்விக் கட்டணம்

மேலும், கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காகக் கல்வி தொலைக்காட்சி நிறுத்தப்பட மாட்டாது என்றும் அதில் மேலும் பல ஆக்கப்பூர்வமான நிகழ்ச்சிகள் சேர்க்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அதேபோல கல்விக் கட்டணம் தொடர்பாக அதிகாரிகள் மற்றும் பெற்றோர்கள் கொண்ட ஒரு குழுவை உருவாக்கி, நல்ல முடிவை மாநில அரசு அறிவிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கல்வி தொலைக்காட்சி

புதிய கல்வித் துறை அமைச்சரின் செயல்பாடுகள் எப்படியிருக்கும் எனப் பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், முதல் பந்திலேயே சிக்சர் அடித்துள்ளார் அன்பில் மகேஷ். அதிலும், தற்போது கொரோனாவால் மாணவர்களில் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏழை மாணவர்கள், இணைய வசதி இல்லாதவர்கள் கல்வி தொலைக்காட்சி மூலமே பாடங்களை கற்று வருகின்றனர்

.ஆட்சி மாற்றம் காரணமாக எங்குக் கல்வி டிவி சரியான நிர்வகிக்கப்படாமல் போகுமோ என்ற அச்சம் இருந்தது. அந்த அச்சத்தை முதல் நாளிலேயே காலி செய்துவிட்டார். அதேபோல பெரும் சிக்கலாக இருக்கும் கல்விக் கட்டணத்தில் இரு தரப்பையும் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என அறிவித்து சபாஷ் வாங்கியுள்ள புதிய கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகாஷ் பொய்யாமொழி.

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்