பள்ளிகள் திறப்பதற்கும் தேர்வுகள் நடத்துவதற்கும் ஏன் இந்த பயம்.....? ஒரு சாமானியனின் கேள்வி......? பதில் சொல்லுமா அரசு....?!
மிகவும் நேசிக்கின்ற ஒன்று நாசாமாகிப் போவதை கண்ணால் காணும் எவரும் படைத்த கடவுளையே விமர்சனம் செய்வது மனித இயல்பு .
அதுபோலத்தான் இந்தப் பதிவும்.சொன்னால் விரோதம் , ஆயினும் சொல்லியாகவேண்டும்.
விவேக்கின் மரணத்தின் போது , அழுதுபுலம்பலக்கிடையே உணர்ச்சி வேகத்தில், வைக்கப்பட்ட மன்சூர் அலிகானின் வாதம் அவர் மீது வழக்கு போடுவதற்கு ஏதுவாயிற்று .
அதுபோல இதுவானாலும் ஆகட்டும் ; ஆயினும் சொல்லியாகவேண்டும்.
எத்துணை அறிவுஜீவிகள் ,மருத்துவர்கள் , ஊடகவியலார்கள் , அரசு ஆசிரியர் கூட்டணியினர் இப்படி படிக்கும் ஒவ்வொருவரின் பேச்சுக்கும் அனைவரின் ஏச்சுக்கும் , ஆளாகத்தான் போகிறேன் ஆயினும் சொல்லியாகவேண்டும் .
ஆளும் மக்களே ! மத்திய அரசே , மாநில அரசே கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் . ஆளும் MP , MLAக்களில் பலர் பல பட்டங்களை பெற்ற வல்லுனர்கள் . கல்வியின் மகத்துவமும் முக்கியத்துவமும் தாங்கள் அறியாததா ?
இந்த கொரோனாவுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். எவ்வளவு தடை உத்தரவு வேண்டுமானாலும் போடுங்கள். ஆனால் தேர்வுகளை ரத்து செய்வது, தள்ளிப் போடுவது, பார்த்து எழுதலாம் என்று அறிவிப்பது - இதெல்லாம் மாணவர்களின் எதிர்காலத்தைக் குழி தோண்டிப் புதைப்பது போல் ஆகாதா ? தவிர வெறென்ன இது .
ஆளும் அரசியல் வல்லுனர்களுக்கு உறுதுணையாக விளங்கும் அரசு அலுவலர்களே! உங்களுடைய கல்விக்காலத்தை சற்றே பின்நோக்கி பாருங்கள் . இப்படித்தான் இருந்ததா உங்கள் கல்வி முறை . சற்றே யோசித்து பாருங்கள் இந்த முறையை உங்களால் ஏற்றுக்கொள்ள முடிகிறதா ?
எதிர்கால அரசினை வழிநடுத்துவதற்கும் நாடாளுவதற்கும் இன்றைய மாணவர்கள் தானே நாளை வரப்போகின்றார்கள் .
இப்பொழுது ஏற்பட்டுள்ள இக்கட்டிற்கு இடையே தங்களது கல்வியை சிறப்பாக கற்பதற்கான வாய்ப்பையும் வழிமுறைகளையும் கற்றுத்தந்தால் தானே இன்றைய மாணவர் உலகம் நாளை நம் தேசத்தை எந்த இன்னல் சூழ்ந்தாலும் அதனை திறமையாக கையாள்வார்கள்.
இப்படி ஓடி ஒளிந்து கொள்ளச்சொல்வதா நல்லதொரு நிர்வாக திறன்.
இந்த ஓரிரண்டு ஆண்டுப் பழக்கம் பிறகு வாழ்நாள் முழுதும் அவர்களை சோம்பித் திரிய வைக்கும். எப்போது எந்தத் தேர்வு எதிரே வந்தாலும் அது எப்போது ரத்தாகும் என்று எதிர்பார்க்கச் செய்யும். விளையாட்டல்ல. இப்போது நடைபெற்றுவரும் செய்முறைத்தேர்வுகளை மாணவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதைப் பாருங்கள். பெரும்பான்மை மாணவர்கள் மனதில் தேர்வுக்கான பொறுப்பு அறவேயில்லை தேர்வுகளை நடத்தும் ஆசிரியர்கள் தான் மாய்ந்து மாய்ந்து அவர்களை தேர்ச்சியுறச்செய்யும் பணிகளைச்செய்து வருகின்றனர்.
இப்பொழுது கேட்க நினைப்பதை மிகவும் அச்சத்துடன்தான் கேட்கின்றேன்.
இக்கல்வியாண்டில் 9 ,10 ,11 & 12 ஆம் வகுப்புகளை கையாண்ட ஆசிரியப்பெருமக்களே !
உங்கள் கற்பித்தல் காலத்தில் எத்தனை மாணவர்களுக்கு கொரானா வைரஸ் தொற்று ஏற்பட்டது? அவர்களுக்கு வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சை முறை என்ன? எப்படி அவர்கள் குணமடைந்தார்கள் ? குணமடைந்த பிறகு அவர்களது உடல்நிலையில் ஏதேனும் பாதிப்புகள் இன்னமும் உள்ளதா ?
சுயநலமின்றி ( இப்படி சொல்வதால் கோபம் கொள்ள வேண்டாம் ஒரு நிமிடம் உள்ளுக்குள் யோசியுங்கள் . புரியும் ) நீங்கள் வகுப்பறையில் கண்ட உண்மைகளின் அடிப்படையில் மாணவர்களிடையே ஏற்பட்ட கொரானா பாதிப்பை வகைப்படுத்துங்கள்.
a) மிகவும் பாதிப்புகளை ஏற்படுத்திய இதுவரை பார்க்காத கொடூர நோய்
b) நோய் தொற்றினால் மாண்டு விட்டார்.
c) நோய் தொற்றினிலிருந்து விரைவிலேயே மீண்டு விட்டார்.
d) இதுவும் வழக்கமான தொற்றாகத்தான் இருந்தது அச்சமூட்டிய அளவிற்கு பயமில்லை உள்ளது.
இதில் எது உங்கள் தேர்வாக இருக்கும் .
பெரும்பாலும் c அல்லது d தான் பதிலாக அமையுமாயின் ஒரு விபரத்தினையும் முழுமையாக அறியாத மாணவர்கள் வாழ்வில் இப்படி இருள்சூழச்செய்யலாமா ??!!
படித்தவன் பாவம் செய்தால் அய்யோவென்றுப்போவான் ... அலறுகிறானே பாரதி
பிச்சைப்புகினும் கற்கை நன்றே .... சொல்லிய ஜாதியாயிற்றே நாம்
இன்று கல்வியை கரையான் அரிப்பதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்கிறோமே .. சரிதானா நம் பாதை .
இன்று நமக்கெந்த பாதிப்புமில்லை என ஆட்சியாளர்களும் கல்வியாளர்களும் வாளாவிருந்தால் நாளை கட்டுப்பாடற்று மனம்போன போக்கில் செல்லும் இளைஞர்கள் கூட்டத்திடம்தான் நமது நாடு போகும் நாமும் நாசமாய் போவோம்.
தேர்தல் நடத்த முடிகிற அரசால் கவனமாகத் தேர்வுகள் நடத்த முடியாதா?
காசுக்காக TASMAC நடத்த முடிகிற அரசால் கல்வியை கற்பிக்க இயலாதா ? தேர்வைத்தான் நடத்த இயலாதா ?
கோயில் பண்டிகைகள் , உணவுக்கூடாரங்கள் , கேளிக்கை விடுதிகள் , போக்குவரத்து , திரையரங்கங்கள் , உடற்பயிற்சி கூடங்கள் என அனைத்தையும் இயங்க அனுமதித்த அரசு ஏன் கல்வி கூடங்களை செயல்பட அனுமதிக்க மறுக்கிறது ?
பயம் ...பயம்... பயம்....... என பய பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கும் அரசியலார்களுக்கு அதிகாரிகள் அறிவு புகட்டி இருக்க வேண்டாமா ?
வெற்று வாய்ச்சவடால் அரசியல்வாதிகள் ஆயிரம் பேசலாம். ஆனால் இந்தப் பிள்ளைகள் நாளை சான்றிதழ்களுடன் வேலை தேடிப் போகும்போது எந்த நிறுவனம் இந்த ALL PASS மாணவர்களை வேலைக்கு எடுக்கும் என்று எண்ணுகிறீர்கள்?
ஜல்லிக்கட்டுக்காக போராடியதாகக் கூறிக்கொள்ளும் காகிதப்புலிகள் , பேஸ் புக் காளைகள் இதனை just like that என பத்தோடு பதினொன்றாகத்தான் பார்க்கின்றார்களா ?
கொரானாவை காரணம் காட்டி ஒரு தலைமுறையையே ஊற்றி மூடத் தயாராகிவிட்டோம் நாம் .
கடும் புயல் , வெள்ளம் , பூகம்பம் , தீ விபத்து பேராழி , காலரா , பிளேக் , நிமோனியா தொற்றுகளிலிருந்தெல்லாம் நம்மை ( நாம் மாணவர்களாக இருந்த போது )பத்திரமாக மீட்டெடுத்து நல்லதொரு எதிர்காலத்தை படைத்துத் தந்த நமது மூத்தோர்களை / மூதாதையரை நாம் எந்த வகையில் பின்பற்றப்போகிறோம் .