தமிழகத்தில் கரோனா பாதிப்பின் வேகம் சற்று குறைந்து: தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் கரோனா பாதிப்பின் வேகம் சற்று குறைந்து: தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் 



 கடந்த இரண்டு நாள்களாக தமிழகத்தில் கரோனா பாதிப்பின் வேகம் சற்று குறைந்துள்ளதாக தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்று பரவல் நிலவரம் குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார் ராதாகிருஷ்ணன்.

அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கத்தால் கரோனா பரவலின் வேகம் சற்றுக் குறைந்திருக்கிறது. அதன்படி, கடந்த இரண்டு நாள்களாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு வேகம் குறைந்துள்ளது. அடுத்த சில நாள்களுக்கு மக்கள் தேவையின்றி வெளியே வரக் கூடாது. 

தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக, மிகத் தீவிரமாக அதிகரித்து வந்த கரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது. பொது நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் கலந்து கொள்வதை குறைத்துக் கொள்வது, மேலும் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த உதவும்.

முகக்கவசம் அணியாமல் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம். தேவையின்றி, பொதுமக்கள் வெளியே வருவதைத் தவிர்த்துவிட வேண்டும்.

இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, நாள்தோறும் பதிவான கரோனா உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இன்னும் தீவிரமாக கட்டுப்பாடை பின்பற்றினால், கரோனா பரவல் குறையும் நிலையை அடையலாம் என்று தெரிவித்துள்ளார்.

கரோனா பரிசோதனை குறைக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு, தமிழகத்தில் நாள்தோறும் ஒரு லட்சம் அளவிலேயே கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாகக் கூறினார்.