ஆபாச பேச்சால் வசமாக சிக்கிய கே.என் நேரு - 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு
முன்னாள் அமைச்சரும் திமுக மேற்கு தொகுதி வேட்பாளருமான கே.என். நேரு மீது முசிறி காவல்நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வது பற்றியும், ஆபாசமாக பேசியது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதால் கே.என் நேரு மீது வழக்கு பாய்ந்துள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலில் பல முனைப்போட்டி நிலவுகிறது. ஆட்சியை 3வது முறையாக தக்கவைக்க ஆளுங்கட்சி போராடி வருகிறது. திமுக ஆட்சியை கைப்பற்ற போராடி பலவித வியூகங்களை வகுத்துள்ளது. சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு செவ்வாய்கிழமை காலை 7 மணிக்கு தொடங்குகிறது. தேர்தலை முன்னிட்டு கடந்த ஒரு மாத காலமாக தமிழகம் முழுவதும் தீவிரமாக நடைபெற்ற தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 7 மணியுடன் முடிவுக்கு வந்தது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் 428 கோடி ரூபாய் மதிப்பில் பணம் மற்றும் நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்தின் போதும் தொண்டர்களிடம் பேசும் போதும் தேவையற்ற பேச்சுக்களை பேசி வழக்கில் சிக்கியுள்ளனர் சில திமுக வேட்பாளர்கள்.
முன்னாள் அமைச்சர் மற்றும் தி.மு.கவின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு போட்டியிடும் திருச்சி மேற்கு தொகுதிக்குப்பட்ட காவல்நிலையத்தில் காவலர்களின் தபால் வாக்குகளைப் பெறுவதற்காக பணம் கொடுக்கப்பட்ட அதனை தேர்தல் அதிகாரிகள் கைப்பற்றினர். இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் கே.என்.நேரு மீது அதிமுகவினர் குற்றம் சாட்டிவருகின்றனர். இது தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்தனர். சிபிஐ விசாரிக்கவும் தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
இதற்கிடையில், கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தனது கட்சியினருடன் தனிப்பட்ட முறையில் கே.என்.நேரு பேசும் வீடியோ இணையத்தில் வைரலானது. அதில், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா குறித்து அவர் பேசியிருந்தார். அதேபோல, சில கெட்டவார்த்தைகளையும் பேசியிருந்தா
அதிமுகவினர் வாக்காளர்களுக்கு தலா 500 ரூபாய் கொடுப்பதாக திமுக பிரமுகர் ஒருவர் நேருவிடம் சொல்ல, அதற்கு அவரோ, அவங்க கொடுத்தா கொடுத்துவிட்டு போகட்டும். 500 ரூபாய் முழுமையாகச் சென்று வாக்காளர்களைச் சேராது. அதனால் 200 கொடு போதும் என்கிறார்.
அதிமுக 500 கொடுப்பதால், நாமும் 500 கொடுப்போம் என நம்ம ஆளுங்க சொல்றாங்க என்று சொல்லும் தொண்டரை, கடுமையான ஆபாச வார்த்தைகளால் நேரு திட்டுகிறார். பணம் கொடுக்குறதுல ஏதாவது பிரச்சனை வந்தா அடிச்சு மண்டையை உடைச்சுடுவேன் என்றும் ஆவேசமாக பேசியுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதனால் கே. என் நேரு டென்சன் ஆகியுள்ளார். இதுதொடர்பாக தேர்தல் அலுவலர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் முசிறி காவல்நிலையத்தில் கே.என்.நேரு மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே கொளத்தூர், சேப்பாக்கம், திருச்சி மேற்கு உள்ளிட்ட ஐந்து தொகுதிகளில் தேர்தலை ஒத்திவைக்கவேண்டும் என்று அ.தி.மு.க சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சில தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கலாம் என்று தெரிகிறது. திமுகவில் நட்சத்திர பேச்சாளர்களும் வேட்பாளர்களும் தேவையற்ற பேச்சுக்களை பேசி வசமாக மாட்டிக்கொண்டுள்ளனர்.