27-ஆம் தேதி முதல் ஒரு வார காலத்திற்கு முழு ஊர் அடங்கா.....?!
தமிழகத்தில் கூட்டம் அதிகம் கூடும் தியேட்டர்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், பார்கள் உள்ளிட்டவைகளுக்கு வரும் திங்கள்கிழமை முதல் அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. உயிரிழப்புகளை தடுத்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்பட்டது.
இந்த நிலையில் வரும் 26-ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறுகையில் திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கூட்ட அரங்குகள் பார்களுக்கு அனுமதி இல்லை.
பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க அனுமதி இல்லை. சென்னை மாநகராட்சி, நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள சலூன்கள், அழகு நிலையங்களுக்கு அனுமதி இல்லை. அனைத்து மத வழிப்பாட்டு தலங்களில் அனுமதி இல்லை.
திருமணம், திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் 100 நபர்களாக இருந்த நிலையில் 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அது போல் இறுதி ஊர்வலங்களில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கை 50 பேராக இருந்த நிலையில் தற்போது 25 பேராக குறைந்துள்ளது.
கோயில் குடமுழுக்குகளில் பக்தர்கள் பங்கேற்க அனுமதியில்லை. கோயில் ஊழியர்கள் மட்டும் பங்கேற்கலாம். உணவகங்கள், தேனீர் கடைகளில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.
தனியார் மற்றும் அரசு பேருமந்து இருக்கைகளில் மட்டும் அமர்ந்து பயணிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. நின்று கொண்டு பயணிக்க அனுமதி இல்லை. டாஸ்மாக் கடைகள் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. பார்களுக்கு அனுமதி இல்லை. இந்த கட்டுப்பாடுகள் வரும் 30ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாளை காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்துவது பற்றி ஆலோசிப்பது தெரிகிறது.