மின்சார கார் தயாரிக்கும் நிறுவனமாக மாறுகிறது Volvo

 பெட்ரோல், டீசல் கார்கள் உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்துவதற்கு வால்வோ நிறுவனம் அதிரடி முடிவு எடுத்துள்ளது. முழுக்க முழுக்க மின்சார கார் தயாரிப்பில் இறங்கவும் அந்நிறுவனம் திட்டம் போட்டுள்ளது. இந்த சூழலில், எதிர்காலத்திற்கு ஏற்றவாறு வர்த்தகத்தில் சில அதிரடி முடிவுகளை வால்வோ அறிவித்துள்ளது.

அதிசிறந்த சொகுசு கார்களை தயாரிப்பில் ஸ்வீடனை சேர்ந்த வால்வோ நிறுவனம் உலக அளவில் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் மதிப்பை தக்க வைத்து வருகிறது. குறிப்பாக, பாதுகாப்பு அம்சங்கள் வால்வோ சொகுசு கார்கள் மிகச் சிறந்ததாக இருந்து வருகின்றன. வால்வோ கார்களின் பல பாதுகாப்பு அம்சங்கள், வாகன உலகிற்கு முன்னோடியாக இருக்கின்றன. அந்த வகையில், மின்சார கார் உற்பத்தித் துறையிலும் முன்னோடியாகவும், முன்மாதிரியாகவும் மாறுவதற்கான அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, பெட்ரோல், டீசல் கார் உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்தி விட்டு, மின்சார கார் தயாரிப்புக்கு மாறப்போவதாக வால்வோ நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், ஆன்லைன் கார் விற்பனைக்கு மாறுவதற்கான திட்டத்தையும் வைத்துள்ளது.

வால்வோ நிறுவனம் எக்ஸ்சி40 எஸ்யூவி அடிப்படையிலான முதல் எலெக்ட்ரிக் கார் மாடலை உற்பத்தி செய்து வருகிறது. விரைவில் இந்தியாவிலும் இந்த புதிய சொகுசு எஸ்யூவி கார் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், இரண்டாவது எலெக்ட்ரிக் கார் மாடலை இன்று வெளியிடுகிறது.

இந்த நிலையில், வால்வோ நிறுவனத்தின் எதிர்கால திட்டம் குறித்து அந்நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்பப் பிரிவு அதிகாரி ஹென்ரிக் க்ரீன் கூறுகையில்,"பெட்ரோல், டீசல் கார்களுக்கு நீண்ட எதிர்காலம் இல்லை.

முழுமையான எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமாக மாறுவதற்கு நாங்கள் முடிவு செய்துள்ளோம். பருவநிலை மாற்றத்திற்கு எதிரான உலக சமுதாயம் போராடுவதற்கு துணை நிற்பதற்கு ஏதுவான தீர்வுகளை வழங்குவதற்கும், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்கும் திட்டமிட்டுள்ளோம்," என்று தெரிவித்துள்ளார்.