இனி மூன்று டீலர்களிடமிருந்து Gas ரீஃபில் புக் செய்யலாம்: முழு விவரம்
LPG சிலிண்டர்களின் விலை உயர்ந்து கொண்டே இருப்பது மக்களை பெரும் இன்னலுக்கு ஆளாக்கியுள்ளது. இந்த இக்கட்டான சூழலில், LPG குறித்த ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. LPG வாடிக்கையாளர்கள் விரைவில், மூன்று டீலர்களிடமிருந்து சிலிண்டரை முன்பதிவு செய்வதற்கான தேர்வைப் பெறுவார்கள். ஒரு குறிப்பிட்ட எரிவாயு வியாபாரி சரியான நேரத்தில் LPG எரிவாயு சிலிண்டரை வழங்கத் தவறிவிட்டால், அதனால் பயனர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு இந்த வசதி செய்யப்படவுள்ளது. இந்த செய்தியை எண்ணெய் செயலாளர் தருண் கபூர் உறுதிப்படுத்தினார்.
LPG சமையல் எரிவாயு விலை மார்ச் 1 ம் தேதி சிலிண்டருக்கு ரூ .25 உயர்த்தப்பட்டது. சமீபத்திய விலை உயர்வுக்குப் பிறகு, 14.2 கிலோகிராம் LPG சிலிண்டரின் விலை டெல்லியில் இப்போது ரூ. 819 ஆக உள்ளது.
பிப்ரவரி 28 ம் தேதி பி.டி.ஐ-யிடம் பேசிய எண்ணெய் செயலாளர், "LPG இணைப்பை குறைந்தபட்ச அடையாள ஆவணங்களுடன் வழங்குவதற்கான திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் சமையல் எரிவாயுவைப் பெறுவதற்கான இடத்திற்கான வதிவிட ஆதாரத்தை தர வெண்டும் என்ற வற்புறுத்தலும் இனி இல்லாமல் இருக்க வழிவகை செய்யப்படும். மேலும், ஒரு விநியோகஸ்தருடன் பிணைக்கப்படுவதற்குப் பதிலாக, அருகிலுள்ள மூன்று டீலர்களிடமிருந்து சிலிண்டர் ரீஃபில்லைப் பெறுவதற்கான தேர்வு நுகர்வோருக்கு விரைவில் கிடைக்கும். இதனால், ஒரு டீலர், LPG சிலிண்டர் இல்லாததாலோ அல்லது பிற காரணங்களுக்காகவோ பயனருகு சிலிண்டர் கொடுக்க முடியாமல் போனால், மற்ற இரண்டு டீலர்களிடமிருந்து சிலிண்டரைப் பெறுவதற்கான வாய்ப்பு பயனருக்கு கிடைக்கும்.” என்று கூறினார்.