திமுகவை வெலவெலக்க வைத்த கமல்.. வேடிக்கை பார்க்கும் அதிமுக.. காரணம் இதுதான்!
 திமுகவை வெலவெலக்க வைத்த கமல்.. வேடிக்கை பார்க்கும் அதிமுக.. காரணம் இதுதான்!




 ஒத்த அறிவிப்பில் திமுகவையே கிடுகிடுவென நிலைகுலைய வைத்துவிட்டார் கமல்ஹாசன்.. காரணம், மய்யம் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைதான். 

வழக்கமாக எந்த தேர்தல் அறிக்கை வெளிவந்தாலும், அதில் கட்டாயம் இடம் பெறும் அறிவிப்பு, ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்பதுதான்.. இதை திமுகவும் சொல்லும்.. இதே வாக்குறுதியை அதிமுகவும் சொல்லும்.. அதேபோல பாமகவும் சொல்லும். 

இதற்கு பிறகு அடுத்த முறை தேர்தல் நடக்கும்போதும், இதே வாக்குறுதிகள் அச்சுபிசகாமல் இருக்கும்.. ஒருபக்கம் டாஸ்மாக்கில் பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டி கொண்டிருக்கும், இன்னொரு பக்கம் டாஸ்மாக்கை மூட சொல்லி போராட்டமும் நடக்கும்.. இதுதான் நம் தமிழகம்...!

இப்படித்தான், கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலில் ஒரு வாக்குறுதியை தந்தது திமுக.. ஆனால், இந்த முறை அதாவது 2021 தேர்தல் அறிக்கையில், பூரண மதுவிலக்கு வாக்குறுதியை தவிர்த்துவிட்டது.. 

இது ஏன் என்று தெரியவில்லை.. ஆனால, மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தையும், அதனைய ஒட்டிய சந்தேகத்தையும் இது ஏற்படுத்தியுள்ளது. மதுவிலக்கு இதுபோலவே, அதிமுகவும் அன்றைய தேர்தல் அறிக்கையில், மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும் சொன்னது.. 

படிப்படியாக என்ற ஒரு வார்த்தையை சேர்க்கவும், அந்த வார்த்தைக்கு ஏற்றவாறே 500, 100 என டாஸ்மாக்குகள் மூடப்பட்டன.. வேறு சில மாற்றங்களையும் அதிமுக அரசு முன்னெடுத்தது.. அதை மறுக்க முடியாது.

இந்த சமயத்தில்தான் திமுக மீது ஒரு குற்றச்சாட்டு எழுந்தது... கடந்த 2016 தேர்தலில் பூரண மதுவிலக்கு அறிவிப்புதான் சட்டப்பேரவை தேர்தலில் திமுக தோல்வியடைய காரணமாக அமைந்ததாகவும் ஒரு பேச்சு எழுந்தது.. இப்போது, இந்த லிஸ்ட்டில் திமுக போய், அமமுக சேர்ந்துள்ளது.. அமமுக தன்னுடைய தேர்தல் அறிக்கையில், "தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை கொண்டுவரும் வகையில், மதுபான உற்பத்தி ஆலைகளுக்கு இனிமேல் அனுமதி இல்லை என்ற கொள்கை முடிவு உடனடியாக எடுக்கப்படும்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது மக்களின் கவனத்தையும் பெற்று வருகிறது.

இன்றைய தினம் கமல் தன்னுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்... "படிப்படியாக மதுக்கடைகள் மூடப்பட்டு மதுவிலக்கை அமல்படுத்துவதே எங்கள் இலக்கு" தன்னுடைய நவீன தேர்தல் அறிக்கையில் உறுதி கூறி உள்ளார்.. வழக்கமாக கமலின் திட்டங்களை திமுக காப்பி அடிக்கும் என்ற முணுமுணுப்பு உள்ளது.. ஆனால், திமுக அறிவிக்காத ஒன்றை கமல் அறிவித்துள்ளது அடுத்த ஆச்சரியத்தை மக்களிடம் பெற்று வருகிறது.

கமலின் இந்த அறிவிப்பினை பொறுத்தவரை நிச்சயம் அவர் செயல்படுத்துவார் என்ற நம்பிக்கை தென்படுவது ஆச்சரியம் இல்லை.. இன்னொரு பக்கம், "துண்டு சீட்டு பறந்து போனது" என்று ஏற்கனவே புலம்பி கொண்டிருந்த நிலையில், திமுகவை பலவகையில் கமல் மறைமுகமாக விமர்சித்து வரும் நிலையில், இந்த டாஸ்மாக் அறிவிப்பு மிக பெரிய பலமாக பிரச்சாரத்தில் எதிரொலிக்கும் என்றே தெரிகிறது. திமுக இதை எப்படி சமாளிக்கும்? டாஸ்மாக் குறித்த விவகாரங்களை எப்படி கையாளும்? பிரச்சாரங்களில் இதற்கு ஏதாவது பதில் வைத்திருக்குமா? பார்ப்போம்..!