சசிகலாவின் சைலண்ட் க்கு காரணம் என்ன...? முழு பின்னணி....!

 சசிகலாவின் சைலண்ட் க்கு காரணம் என்ன...?  முழு பின்னணி....!

பத்திரிகையாளர்களைச் சந்திப்பதாக கூறிய சசிகலா ஏன் யாரையும் சந்திக்கவில்லை, தென் மாவட்டத்துக்கு பயணம் மேற்கொள்வதாக இருந்தது என்ன ஆனது, அதிமுக அமமுக இணைப்பு எப்போது என பல்வேறு விஷயங்கள் குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகி வருகிறது.

ஆரவாரமான வரவேற்பு!

சிறைவாசம் முடிந்து சசிகலா சென்னை திரும்பி இரு வாரங்களாகிவிட்டன. சசிகலாவின் வருகை ஊடக கவனம் பெற்றுவிடக்கூடாது என அதிமுக தலைமை சில முயற்சிகளை மேற்கொண்டது. கொடியை பயன்படுத்தக்கூடாது, அதிக கூட்டம் கூடகூடாது, நிறைய கார்கள் அணிவகுக்க கூடாது என பல்வேறு நிபந்தனைகள் காவல்துறை மூலம் போடப்பட்டது. அவை அத்தனையையும் கடந்து ஆரவாரமான வரவேற்பு அவருக்கு வழங்கப்பட்டது.

வீட்டிற்குள் முடங்கிய சசிகலா

மக்களைப் பார்த்த உற்சாகத்தில் நான் தீவிர அரசியலில் நிச்சயமாக ஈடுபடுவேன், பத்திரிகையாளர்களை விரைவில் சந்திப்பேன் என சூளுரைத்துவிட்டு தி.நகர் இல்லத்துக்கு சென்றார் சசிகலா. இனி அதிமுக நிர்வாகிகளும், அமைச்சர்களும் ஒருவர் பின் ஒருவராக தி.நகர் செல்வார்கள் என கூறப்பட்டது. ஆனால் இரு வாரங்களாகிய போதும் அதிமுகவிலிருந்து குறிப்பிடும்படியாக யாரும் சசிகலாவைப் பார்க்கவில்லை. சசிகலாவும் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை.

என்ன செய்கிறார் சசிகலா?

சசிகலா மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி ஓய்வெடுத்து வருகிறார் என டிடிவி தினகரன் கூறியுள்ளார். சசிகலா பத்திரிகையாளர்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தினகரன் தான் பழைய மாதிரி அடிக்கடி செய்தியாளர்களை சந்திக்கிறார். இந்த நகர்வுகள் எல்லாம் எதை நோக்கி செல்கின்றன, சசிகலா சைலண்ட் மோடுக்கு சென்றது ஏன் என்பது குறித்து அதிமுக அமமுக வட்டாரங்களில் விசாரித்தோம்.

பாஜக நிலைப்பாடு இதுதான்!

கடந்த ஞாயிற்றுக் கிழமை சென்னை வந்த பிரதமர் மோடி ஓபிஎஸ், இபிஎஸ் கைகளை உயர்த்திப் பிடித்து மறைமுகமாக ஒரு சேதி சொன்னார். அதாவது இவர்கள் இருவரின் தலைமையிலான அதிமுகவுடன்தான் கூட்டணி என்பதை சொல்லாமல் சொன்னார். சசிகலாவுக்கு மறைமுக ஆதரவு என மனநிலையில் உள்ளாரா ஓபிஎஸ் என விமர்சனம் எழுந்து வரும் நிலையில் அவரை தவிர்த்துவிட்டு எடப்பாடி பழனிசாமியை மட்டும் தனியாக அழைத்து 10 நிமிடங்கள் பேசியதிலும் சசிகலாவுக்கு ஒரு மெசேஜ் உள்ளது.

இதுதான் மௌனத்துக்கான காரணம்!

கடந்த நான்கு ஆண்டுகளாக தினகரன் தங்களது ஸ்லீப்பர் செல்கள் அதிமுகவுக்குள் இருப்பதாக கூறிவருகிறார். ஆனால் ஆரம்பத்தில் அவருடன் வெளியே வந்தவர்களைத் தவிர பின்னர் இப்போது வரை அதாவது சசிகலா வெளியே வந்த பின்னரும் கட்சி நிர்வாகிகளோ, எம்எல்ஏக்களோ, அமைச்சர்களோ சசிகலா ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கவில்லை. இது சசிகலாவின் மௌனத்துக்கு முக்கியக் காரணமாக கூறுகிறார்கள்.

அமமுக மூலம் தேர்தலை சந்திக்கலாம்!

அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலா தான் என அவரது தரப்பு கூறிவருகிறது. அதிமுகவை மீட்டெடுக்க சட்டப் போராட்டத்தையும் ஜனநாயகப் போராட்டத்தையும் நடத்தி கட்சியை மீட்க முயற்சித்து வருகின்றனர். ஆனால் தேர்தலுக்கு முன்னர் அதிமுக, அமமுக இணைப்புக்கு வாய்ப்பே இல்லை என அடித்துக் கூறுகின்றனர். அதன் காரணமாகவே அமமுக மூலம் தேர்தலை சந்தித்து தங்கள் பலத்தை காட்ட சசிகலா தரப்பு முயற்சித்து வருகிறது.

தள்ளிப்போடப்பட்ட திட்டங்கள்!

எதிர் அணியிலிருந்து பலர் இந்த பக்கம் வர தயாராக இருந்தால் மட்டுமே பத்திரிகையாளர்களைச் சந்திப்பது, மக்களைச் சந்திப்பது ஆகியவற்றை உடனடியாக நடத்த வேண்டும், இல்லையேல் சற்று பொறுமையாக அதை மேற்கொள்ளலாம் என்பதே சசிகலா தரப்பின் தற்போதைய எண்ணமாக உள்ளது. அதற்காகவே தென் மாவட்ட பயணத்தையும் தள்ளிப் போட்டுள்ளதாக கூறுகின்றனர்.