புதுச்சேரி போராட்டப் பந்தலில் தூங்கிய முதல்வர் நாராயணசாமி

 

புதுச்சேரி போராட்டப் பந்தலில் தூங்கிய முதல்வர் நாராயணசாமி

ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக போராட்டம்: சாலையில் படுத்துறங்கிய புதுச்சேரி முதல்வர்

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மக்கள் நலத்திட்டங்கள், வளர்ச்சி திட்டங்கள் ஆகியவைகளை செயல்படுத்த விடாமல் தடுப்பதாகவும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாடுகளை தடுத்து நிறுத்தி வருவதாகவும், அதனால் ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி ஆளும் காங்கிரஸ் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகள் நேற்று (ஜனவரி 8) முதல் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்தில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்த போராட்டத்தில் இரவு நேரத்திலும் அங்கேயே உணவு சாப்பிட்ட முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட தர்ணாவில் ஈடுபட்ட அனைவரும் போராட்டம் நடைபெறும் சாலையிலேயே இரவில் படுத்து உறங்கினர்.

இந்த நிலையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக இரண்டாவது நாளாக இன்று (ஜனவரி 9) தர்ணா‌ போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

காங்கிரஸ் மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் நடைபெறும் இந்த போராட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் வலியுத்தப்பட்டது. அப்போது, "போராட்டம் நடத்துவது ஜனநாயக உரிமை என்று‌ உச்ச நீதிமன்றம் அண்மையில் டெல்லி விவசாயிகள் போராட்டம் தொடர்பாக வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்துள்ளது.

ஆனால் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவின் பேரில் மாவட்ட ஆட்சியர், ஆளுநர் மாளிகை சுற்றியுள்ள பகுதிகளில் போராட்டம் நடத்த தடைவிதித்து, 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனிடையே இந்த போராட்டம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து துணைநிலை ஆளுநர் அலுவலகத்தை சுற்றி நான்கு புறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது," என்று கூறினர்.

ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக போராட்டம்: சாலையில் படுத்துறங்கிய புதுச்சேரி முதல்வர்

"குறிப்பாக பாதுகாப்பிற்காக வரவழைக்கப்பட்ட மத்திய துணை ராணுவப் படையினர், புதுச்சேரி நகர் முழுவதும் துப்பாக்கி மற்றும் ஆயுதங்களை தாங்கி நிற்க வைத்திருப்பது புதுச்சேரி மக்களை அச்சுறுத்தும் வகையில் இருக்கிறது. புதுச்சேரி காவல் துறையின் திறமையை சிறுமைப்படுத்தும் நோக்கில் துணை ராணுவப் படையினர் அழைத்திருப்பது கண்டனத்திற்குரியது.

மூன்று கம்பெனி துணை இராணுவப் படையினர் புதுச்சேரியில் தங்கி இருப்பதற்கான சம்பளம், உணவு மற்றும் இதர செலவினங்களுக்காக புதுச்சேரி அரசு பலகோடி செலுத்த வேண்டிய நிலை உள்ளது. ஏற்கனவே நிதி நெருக்கடியில் புதுச்சேரி அரசு இருக்கும் சூழலில், தனி ஒருவரின் பாதுகாப்பிற்காக பல கோடி ரூபாய் அரசு நிதியை விரயம் செய்வது தேவையற்றது. எனவே மத்திய அரசு புதுச்சேரிக்கு அனுப்பிய மத்திய துணை ராணுவப் படையை திரும்ப பெற வேண்டும்," மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்த போராட்டம் காரணமாக புதுச்சேரி நகரில் பெரும்பாலான சாலைகள் மூடப்பட்டன. குறிப்பாக, புதுச்சேரி ஆளுநர் மாளிகை, சட்டபேரவை மற்றும் தலைமை செயலகம் இருக்கும் சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. உள்ளூர் காவல் துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினர் மூன்று அடுக்கு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வருவதால் பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும் இந்த போராட்டம் காரணமாக ஆளுநர் மாளிகை மற்றும் போராட்டம் நடைபெறும் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக பின்பற்ற படுவதால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் வழக்கத்தை விட போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.

ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக போராட்டம்: சாலையில் படுத்துறங்கிய புதுச்சேரி முதல்வர்

போராட்டத்தில் போது சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி பேசிய போது, "முதல்வர் நாராயணசாமி நான்கு நாட்கள் மட்டுமே இந்த போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்திருந்தார். இது நான்கு நாட்கள் இல்லை, தொடர் போராட்டமாக நடைபெறும். எங்களுடைய கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கும் வரை இந்த போராட்டம் தொடரும்.

துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை மாற்றுவதால் எந்த பயனும் இல்லை. நாளை இவரை விட கடுமையான ஆளுநர் புதுச்சேரிக்கு வரலாம். ஆகவே எங்களது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் காவல் துறையினரால் போடப்பட்ட கம்பி வேலிகளை அகற்றிக் கடந்த முறை ஆளுநருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு கடைப்பிடிக்க வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார்.

"இன்று அல்லது நாளைக்குள் என்னை அழைத்து என் துறையில் உள்ள கோப்புகளை சரி செய்து கொடுக்க வேண்டும். அதையடுத்து முதல்வர் மற்றும் அமைச்சர்களை அழைத்து அவர்களது கோப்புகளை சரி செய்யுங்கள். நாங்கள் உடனடியாக போராட்டத்தை திரும்பப் பெறுகிறோம். இல்லையென்றால் இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெறும்‌. மேலும் தடைகளைத் தாண்டி ஆளுநர் மாளிகையில் போராடும் சூழலை ஏற்படுத்த வேண்டாம்," என்று அமைச்சர் கந்தசாமி மேலும் தெரிவித்தார்.