முடிவெடுக்கப்போவது ராமதாசா? அன்புமணியா? யாருடன் பாமக கூட்டணி...?

 முடிவெடுக்கப்போவது ராமதாசா? அன்புமணியா? யாருடன் பாமக கூட்டணி...? அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் பாமக அதே கூட்டணியில் தொடருமா, தனித்து களம் காணுமா அல்லது திமுக கூட்டணியில் இணையுமா என்பதுதான் இப்போதைய கேள்வியாக உள்ளது. 

வட மாவட்டங்களில் பாமகவுக்கு கனிசமான வாக்கு வங்கி இருப்பதால் அக்கட்சியை உதாசீனப்படுத்த தமிழகத்தின் இருபெரும் கட்சிகளும் விரும்பாது.

தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில், வன்னியர்கள் மத்தியில் ராமதாசுக்கு செல்வாக்கு குறைந்து விட்டதாக கூறப்படுவதற்கிடையே, சொல்லி வைத்தாற்போல் வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரத்தை கையில் எடுத்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்
டிசம்பர் தொடக்கத்திலிருந்து பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி அதிமுக அரசுக்கு பாமக அழுத்தம் கொடுத்து வருகிறது.

வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீட்டை நீண்டகாலமாக பாமக வலியுறுத்தி வருகிறது. ஆனால், வன்னியர்களுக்கு மட்டும் 20% தனி இட ஒதுக்கீடு வழங்காமல் 108 சமூகத்தினருக்கு சேர்த்து 20% இட ஒதுக்கீடு வழங்கியதை வன்னியர்களுக்கு எதிரான சதி என்று சொல்லும் ராமதாஸ், உள் இடஒதுக்கீடு விவகாரத்தில் திட்டவட்டமாக இருப்பதுடன், அந்த கோரிக்கையை வரும் தேர்தலுக்கு முன்னரே செயல்படுத்தி ஆகவேண்டும் என்பதால் அதிமுக கூட்டணியை இன்னும் உறுதி செய்யாமல் உள்ளார். இருப்பினும் பாமகவுக்கு சாதகமான பதில்கள் வரவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பாமக சார்பில் இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பாமக தலைவர் ஜிகே மணி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதில் எந்த சட்ட சிக்கலும் இல்லை இதனால் எஸ்சி எஸ்டி இட ஒதுக்கீட்டிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது எனவே தமிழக அரசு உடனடியாக வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்றார்.

இட ஒதுக்கீடு வழங்க வில்லை என்றால் அதிமுக கூட்டணியில் பாமக இடம் பெறுமா என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “கூட்டணி குறித்து முடிவெடுக்க ராமதாசுக்கு முழு அதிகாரம் பொதுக்குழுவில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வருகின்ற 31ஆம் தேதி கட்சியின் நிர்வாக குழு கூட்டம் கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் நிர்வாகிகளிடையே கருத்துக்களை கேட்டறிந்து கூட்டணி குறித்து ராமதாஸ் முடிவெடுப்பார் என்றும் தெரிவித்தார்.

இது ஒருபுறமிருக்க, கடந்த தேர்தலில் மாற்றம் முன்னேற்றத்தை கையிலெடுத்த அன்புமணி இந்த முறை திமுகவுடன் கூட்டணி அமைக்க ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போதே வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளதால், தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணியில் இடம்பெற்றால் வெற்றி வாய்ப்பை தக்க வைத்துக் கொள்வதுடன், இட ஒதுக்கீட்டை வன்னியர்களுக்கு பெற்றுத் தந்ததாகவும் கூறிக் கொள்ளலாம் என்பது அன்புமணியின் கணக்காக உள்ளது என்று கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

இதற்காக துரைமுருகன் மற்றும் ஸ்டாலினின் மருமகன் சபரீசனிடம் அன்புமணி ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால், திமுக கூட்டணியில் பயணிக்கும் விசிகவுக்கு குறைவான இடங்களை ஒதுக்குவது பற்றி பேசப்பட்டு வருவதாக தெரிகிறது. அன்புமணியின் மனநிலையை உணர்ந்த ராமதாஸ் அவரது முயற்சிக்கு எந்த தடையும் போடவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், பாமக இடம்பெறும் கூட்டணியில் விசிக இடம்பெறாது என்று திருமாவளாவன் ஏற்கனவே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

இவை அனைத்துக்கும் வருகின்ற 31ஆம் தேதி கிட்டத்தட்ட முடிவு தெரிந்து விடும் என்பதால், தமிழக அரசியல் களம் பாமகவை சுற்றி சுழலத் தொடங்கியுள்ளது.