இந்திய கல்வி கொள்கை தொலைநோக்கு கொண்டது: இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் பாராட்டு
இந்தியாவின் தேசிய கல்வி கொள்கை தொலைநோக்குடன் உள்ளதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் டொமினிக் ராப், பாராட்டியுள்ளார்.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் டொமினிக் ராப், மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலை சந்தித்து இருதரப்பு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். கல்வித்துறை மற்றும் ஆராய்ச்சியில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட ஒப்புக் கொள்ளபட்டது. அப்போது, ‛இந்தியாவின் தேசிய கல்வி கொள்கை 2020, தொலைநோக்குடன் உள்ளதாகவும், இதில் கூறப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் மாணவர்களுக்கும், பொருளாதாரத்துக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தும் எனவும், இரு நாடுகள் இடையேயான கூட்டுறவை வலுப்படுத்தும் எனவும் டொமினிக் ராப் கூறினார்.

மேலும், கடந்த 2018-ம் ஆண்டில் பிரதமர் மோடி இங்கிலாந்து சென்றபோது, 'கல்வி தான் இரு நாடுகள் இடையேயான இணைப்பு பாலம்' என குறிப்பிட்டதை நினைவு கூர்ந்த டொமினிக் ராப், இந்த புதிய கல்வி கொள்கை இந்தியா - இங்கிலாந்து இடையேயான இணைப்பு பாலத்தை வலுப்படுத்தும் என்றார். வெளிநாட்டு மாணவர்களின் வருகைக்காக, விசா மற்றும் குடியுரிமை நடைமுறைகளில் பல மாற்றங்கள் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.