ஸ்டாலினுக்கு சவால் விட்ட குஷ்பு.. பதிலடி தருமா திமுக..

ஸ்டாலினுக்கு சவால் விட்ட குஷ்பு.. பதிலடி தருமா திமுக..

 ஸ்டாலினை சீண்டும் விதமாக குஷ்பு இன்று ஒரு கருத்து தெரிவித்திருந்தார்.. இதையடுத்து திமுக - பாஜக மோதல் மேலும் வலுவாகி உள்ளது!

இது ஒருபக்கம் இருந்தாலும் திமுக எதிர்ப்பிலும் ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுப்பது என்பதிலும் பாஜகவின் பார்வை தெளிவாக இருக்கிறது. அதன் ஓர் அம்சமாக ஸ்டாலினுக்கு எதிரான ஒரு வழக்கை தூசு தட்டத் தொடங்கியுள்ளது.

இந்த முறை சட்டமன்ற தேர்தலில், திமுகவுக்கு நெருக்கடி தருவதிலும், அக்கட்சியை டேமேஜ் செய்வதிலும், தேர்தலில் வாக்கு வங்கியை சிதறடிப்பதிலும் பாஜக தன் கவனத்தை குவித்து வருகிறது

அந்த வகையில், காங்கிரசில் இருந்து குஷ்பு பாஜகவுக்கு சென்ற சமயம் ஒரு தகவல் கசிந்தது.. அதன்படி, ஸ்டாலின் எந்த தொகுதியில் போட்டியிடுகிறாரோ, அவரை எதிர்த்து குஷ்புவை நிறுத்துவது என்று ஒரு பேச்சு அடிபட்டது.

போட்டி

அதாவது கொளத்தூரில் ஸ்டாலின் ஸ்டிராங்காக இருக்கிறார் என்று தெரிந்தும், அவருக்கு டஃப் தரும் அளவுக்கு ஒரு கடுமையான போட்டியாளரை நிறுத்த பாஜக முடிவு செய்தது.. அந்த வகையில்தான் குஷ்புவை போட்டியிட வைக்கலாம் என்ற ஒரு திட்டமும் பாஜகவிடம் இருப்பதாக சொல்லப்பட்டது. அதாவது, ஸ்டாலினுக்கு நெருக்கடியை தந்து ராகுல் காந்தியை அமேதியில் தோற்கடித்ததைப் போல தோற்கடிக்க வேண்டுமென்பதுதான் பாஜகவின் திட்டம் என்றும் முணுமுணுக்கப்பட்டது

இதற்கு ஒரு காரணமும் சொல்லப்பட்டது.. அதாவது அன்றைய தினம், ஸ்டாலின் தந்த நெருக்கடி காரணமாகவே கட்சியிலிருந்து வெளியேற நேர்ந்தது என்று குஷ்பு தெரிவித்திருந்ததால், நிச்சயம் பிரச்சாரத்தின்போது, ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்ய நேரிடும் என்றே கணக்கு போடப்பட்டது. ஆனால், இதை பற்றி உறுதியான எந்த தகவலும் இதுவரை வரவில்லை.. ஒருவேளை அது புரளியா என்றும் தெரியவில்லை.

தைரியம்

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, நேரடியாகவே ஸ்டாலினுக்கு ஒரு சவால் விடுத்தார்.. அந்த வகையில் "திமுக தலைவர் ஸ்டாலினுக்குத் தைரியம் இருந்தால் ரஜினியை நேரடியாக விமர்சனம் செய்யலாமே" என்று தெரிவித்துள்ளார்.. ஏற்கனவே, "ரஜினியின் அரசியல் வருகையை பார்த்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பயம் வந்து விட்டது" என்று குஷ்பு கூறியிருந்த நிலையில், மறுபடியும் இன்று ஸ்டாலினுக்கு சவால் விடுத்துள்ளார்.

விமர்சனம்

இன்னும் பாஜக பிரச்சாரத்தையே ஆரம்பிக்காத நிலையில், இப்போதே திமுகவை சரமாரியாக விமர்சித்து வருவதால் அரசியல் களம் சூடாகி வருகிறது.. அதுமட்டுமல்ல, தேர்தலில் நான் போட்டியிருவேனா இல்லையா என எனக்கு தெரியாது என்று குஷ்பு சொன்னாலும், நிச்சயம் திமுகவை இந்த முறை தேர்தலில் காரசாரமாக விமர்சிப்பார் என்று தெரிகிறது.. அப்படியே விமர்சித்தாலும், அதற்கு உதயநிதி காட்டமான பதிலை தருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது