1996 முதல் 2020 வரை... ரஜினியின் அரசியல் பேச்சுகள்!

1996 முதல் 2020 வரை... ரஜினியின்  அரசியல் பேச்சுகள்!

 "மாத்துவோம்...எல்லாத்தையும் மாத்துவோம்" என்ற தமது சமீபத்திய ட்விட்டர் பதிவின் மூலம் தமிழக அரசியல் களத்தை பற்றவைத்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். சரியாக ஒன்பது மாதங்களுக்கு முன் மார்ச் மாதம், சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பின்போது, 'நான் தீவிர அரசியலில் இறங்க வேண்டுமென்றால் திமுக, அதிமுகவுக்கு எதிராக தமிழக மக்கள் மத்தியில் புரட்சி, எழுச்சி வர வேண்டும். இந்தப் பணியை தமது ரசிகர்கள் மேற்கொள்ள வேண்டும்' என்று கூறி, இந்த கார்ப்பரேட் உலகில் மறந்துபோனதும், தமக்கே பிடிக்காததுமான புரட்சி, எழுச்சி என்ற அதிகப்படியான வார்த்தைகளை உதிர்த்து ரசிகர்களை அப்செட் ஆக்கினார் ரஜினி.


கடந்த ஒன்பது மாதங்களில் தமிழகத்தில் கொரோனாதான் வந்து போயுள்ளது. உங்கள் தலைவர் சொன்ன புரட்சி, எழுச்சி எங்கே வந்தது? இப்படி திடுதிப்பென்னு மாத்துவோம்...எல்லாத்தையும் மாத்துவோம்னு சொல்றாரேன்னு கேட்டால், இதற்கு ரஜினியின் தீவிர ரசிகர்களிடமே பதில் இல்லை. இப்படி கடந்த கால் நூற்றாண்டாக அவ்வபோது எடுத்தோம், கவிழ்த்தோம் என்று பஞ்ச் டயலாக்காக பேசுவதுதான் தமிழக அரசியலில் ரஜினியின் ஸ்டைலாக உள்ளது. அவரது ஸ்டைலான அரசியல் ஸ்டேட்மென்ட்களில் சில சூப்பர்ஹிட் ஸ்டென்ட்களை இந்த புகைப்பட கட்டுரையில் காண்போம்.

ரஜினிக்கு திடீரென தைரியலெஷ்மியான ஜெயலலிதா

நவம்பர் 08, 2004 -திருட்டு விசிடிகளை ஒழித்ததற்காக, அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழ் திரையுலகம் சார்பில் பிரம்மாண்டமான பாராட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய ரஜினி, " வீரப்பனை அழிச்சதும் , வீராணம் தண்ணீரை சென்னைக்கு கொண்டு வந்ததும் நிச்சயம் அரசியலுக்கு அப்பாற்பட்டவை. அதற்காக எனது மனமார்ந்த பாராட்டுகள். தைரியலட்சுமி இருக்குற பக்கம்தான் வீரலட்சுமி, வீரலட்சுமி இருக்குற பக்கம்தான் விஜயலட்சுமி... இப்படி ஒவ்வொரு லட்சுமியும் தன்னால வருவார்கள். இங்கே ஜெ.ஜெ., தைரியலட்சுமி" என்று ரஜினி வெகுவாக பாராட்டினார். அதாவது யார் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவானாலும் காப்பாற்ற முடியாது என்று ரஜினி சொன்னாரோ, அவரேயை எட்டு ஆண்டுகளுக்கு பிறகு தைரியலட்சுமி என்று பாராட்டினார்.

தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடும்

2018, மே மாதம் 30 ஆம் தேதி... ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூற, நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்றார். அங்கு செய்தியாளர்களிடம், "தூத்துக்குடி போராட்டத்தில் வன்முறை வெடிக்க சமூக விரோதிகள்தான் காரணம். போலீசாரை தாக்கியதும் அவர்கள்தான். கலெக்டர் அலுவலகத்தை தீயிட்டு கொளுத்தியதும் அவர்கள்தான். இது எப்படி தெரியும் என்று என்னிடம் கேட்க வேண்டாம். எனக்குத் தெரியும். இந்த பிரச்னை உருவானதே போலீசாரை அடித்த பின்னர்தான். சமூக விரோதிகள் போலீசாரை தாக்கினார்கள். அதன் பின்னர்தான் பிரச்னை உருவானது. யூனிஃபார்மில் இருக்கும் போலீசாரை அடித்தால் நான் விட்டுக் கொடுக்கமாட்டேன். எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும்" என்று கோபமாக பேசினார் ரஜினி. போராட்டம் என்றாலே தமிழ்நாடு சுடுகாடாகிவிடும் என்றால், மக்களை எல்லாவற்றுக்கு போராட வைக்கும் நிர்பந்ததுக்கு ஆட்சியாளர்கள் ஆளாக்குவது சரியா என்ற கேள்விக்கு ரஜினியிடம் பதில் இல்லை.

புரட்சி, எழுச்சி

எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் தமிழகம் சுடுகாடு ஆகிவிடும் என்று பொது பிரச்சினைக்கான போராட்டங்களை கொச்சைப்படுத்தும் விதத்தில் பேசிய ரஜினி, போராட்டத்துடன் நெருங்கிய தொடர்புடைய புரட்சி, எழுச்சி என்று சமீபத்தில் வீரவசனம் பேசினார். சென்னை லீலா பேலஸில் கடந்த மார்ச் மாதம் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பின்போது," தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளுக்கு எதிராக மக்கள் மத்தியில் புரட்சி. எழுச்சி வர வேண்டும். அப்போதுதான் நான் தீவிர அரசியலில் இறங்க முடியும். மக்கள் மத்தியில் அத்தைய புரட்சி. எழுச்சியை ஏற்படுத்தும் பணியை தமது ரசிகர்கள் மேற்கொள்ள வேண்டும்" என்று பேசி அவரது ரசிகர்களையே தலைசுற்ற வைத்தார். போராடினால் நாடு சுடுகாடு ஆகிவிடும் என்ற ரஜினியே தற்போது தமக்கு தேவையெனும்போது புரட்சி, எழுச்சி என்று பேசுகிறார் என்ற விமர்சனம் எழுந்தது.

மூணு வருஷமாதான் அரசியலில் இருக்கேன்

சென்னையில் மார்ச் மாதம் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ரஜினி பேசிய இன்னொரு விஷயம், அவர் எந்தளவுக்கு தான் செய்வதையே சரி என்று சொல்லும் நபர் என்பதற்கு சான்று. அதாவது" நான் 25 ஆண்டு காலமாக அரசியலில் இருப்பதாக ஊடகங்கள் தொடர்ந்து சொல்லி வருகின்றன. இதனை முதலில் திருத்திக் கொள்ளுங்கள். 2017 டிசம்பர் 31 ஆம் தேதி, ரசிகர் மன்ற நிர்வாகிகளுடனான சந்திப்பின்போதுதான் நான் அரசியல் பேசினேன். அப்போதில் இருந்துதான் அரசியலில் இருக்கிறேன். அதாவது கடந்த மூன்றாண்டுகளாக தான் அரசியலில் இருக்கிறேன்" என்று அழுத்தம் திருத்தமாக கூறினார் ரஜினி. அப்போ, "ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனால்கூட காப்பாற்ற முடியாது", "தண்ணீர் பிரச்சினையை யார் தீர்ப்பார்கள் என்று நம்புகிறீர்களோ அவர்களுக்கு வாக்களியுங்கள்" என்று தேர்தலின்போது திடீர் ஸ்டேட்மென்ட் ஸ்டெண்ட் அடிப்பதையும், "நா எப்போ வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது, ஆனா வரவேண்டிய நேரத்தில் கரெட்டா வருவேன்" என்று ஆடியன்ஸை பார்த்து பஞ்ச் டயலாக் பேசி, சும்மா இருக்கும் ரசிகர்களை உசுப்பேத்தி விடுவதையும் என்னவென சொல்வதென்று கேட்டால், அதற்கு ரஜினியிடமோ, அவரின் தீவிர ஆதரவாளர்களிடமோ தெளிவான பதில் கிடையாது. இப்படி கால் நூற்றாண்டாக தமது எடுத்தோம், கவிழ்த்தோம் ஸ்டேட்மென்ட்களால் தமிழக அரசியலை அவ்வபோது பற்றவைத்து வரும் ரஜினி, மாத்துவோம், எல்லாத்தையும் மாத்துவோம் என்று தற்போது அரசியலை மீண்டும் பற்ற வைத்துள்ளார்.