அரசியலில் ரஜினி....! அடுத்த கட்டம் என்ன....?
நடிகர் ரஜினிகாந்த் வரும் நவம்பர் மாதத்தில் கட்சி தொடங்க வாய்ப்புள்ளதாக, அவரது நெருக்கத்தில் உள்ள காரத்தே தியாகராஜன் அண்மையில் தெரிவித்து, தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
கடந்த மார்ச் மாதம், சென்னையில் தான் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பின்போது, தமது அரசியல் நிலைப்பாடு குறித்து ரஜினிகாந்த் தெளிவாக தெரிவித்திருந்த பின்பும், காரத்தே தியாகராஜன் இவ்வாறு கூறியுள்ளார். இந்த நிலையில், கடந்த 2017 டிசம்பர் மாதம், ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்ததில் இருந்து, கடந்த மார்ச் மாதம் பத்திரிகையாளர் சந்திப்பு வரை, நடிகர் ரஜினிகாந்தின் தமிழக அரசியலில் ஆழம்பார்க்கும் வேலைகள் குறித்து இங்கு காண்போம்.
கடந்த 2017 டிசம்பர் 30 ஆம் தேதி, தமது ரசிகர் மன்ற நிர்வாகிகள், ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சியின் நிறைவு நாளில், தமது அரசியல் நிலைப்பாடு குறித்த நீண்டகால மெளனத்தை நடிகர் ரஜினிகாந்த் கலைத்தார்.தமிழக அரசியலில் ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் இருப்பதாகவும், போர் வரட்டும்.... பார்த்துக்கலாம் எனவும் அந்த நிகழ்ச்சியில் ரஜினி பேசிய பஞ்ச் டயலாக்குகளை அவர் அரசியலில் களம் இறங்குவதற்கான ஆயத்த வார்த்தைகளாகவே கருதி அவரது ரசிகர்கள் ஆனந்த கூத்தாடினார்கள்.
கடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு முன் ரஜினி தமது அரசியல் பிரவேசத்தை அறிவித்து எம்.பி. தேர்தலில் தமது புதிய கட்சியுடன் களம் காண்பார் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், எம்.பி., தேர்தலில் போட்டியிடுவது தமது விருப்பம் இல்லை என்றும்,, இந்தத் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தின் பெயரை யாரும் பயன்படுத்தக்கூடாது எனவும் கூறி, தனது அரசியல் பிரவேசத்தை மீண்டும் ஆறப்போட்டார் ரஜினி.
கடந்த ஜனவரி 14 ஆம் தேதி, துக்ளக் வார இதழின் பொன் விழாவில், " முரசொலி வைத்திருந்தால் திமுக காரன் என்று சொல்வார்கள். துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்று சொல்வார்கள்" என்று ரஜினி பேசியது தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
தமது அரசியல் பிரவேசம் குறித்து நிலவிவந்த பல்வேறு யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், கடந்த மார்ச் 12 ஆம் தேதி, சென்னை, லீலா பேலஸ் ஹோட்டலில் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ரஜினிகாந்த் ஏற்பாடு செய்திருந்தார். அப்போது, " எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கலைஞர் கருணாநிதியின் பெயர், புகழை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் ஸ்டாலினுக்கு உள்ளது. எனவே, இத்தேர்தலில் ஜெயிக்க, திமுக எந்த எல்லைக்கும் செல்லும். ஆளும்கட்சியான அதிமுகவோ குபேரனையே பக்கத்தில் வைத்துள்ளனர். திமுக, அதிமுக ஆகிய இருபெரும் கட்சிகளுக்கு எதிராக, எனது சினிமா ரசிகர்களை மட்டும் நம்பி அரசியலில் இறங்க முடியுமா எனக் கேட்டு, ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் ரஜினி. அதேசமயம், திமுக, அதிமுகவுக்கு எதிராக மக்கள் மத்தியில் புரட்சி வந்தால், தான் அரசியலுக்கு வரத் தயார் என்று ட்விஸ்ட் வைத்தார்.
இந்த நிலையில்தான், ரஜினியின் நெருங்கிய தொடர்பில் உள்ளவராக அறியப்படும் காங்கிரஸ் பிரமுகரான கராத்தே தியாகராஜன், நடிகர் ரஜினிகாந்த் நவம்பரில் கட்சி ஆரம்பிக்க வாய்ப்புள்ளதாக தற்போது கொளுத்தி போட்டுள்ளார்.
இது தியாகராஜனின் விருப்பமே தவிர ரஜினியின் விருப்பமாக இதை நாம் கருத முடியாது. ரஜினி இன்று நேற்றல்ல 20 வருடமாக வருகிறேன் வருகிறேன் என்று சொல்கிறாரே தவிர இதுவரை அரசியலுக்கு அவா் வந்த பாடில்லை.
பல கட்சிகளை கடந்து வந்த கராத்தே தியாகராஜன், தமிழருவி மணியன் போன்றவா்கள் வேறு போக்கிடம் இல்லாமல் ரஜினியை வைத்து அரசியலில் ஒரு ரவுண்டு வரலாம் என்று ஆசைப்படலாமே தவிர ரஜினிக்கு அரசியல் ஆசையெல்லாம் கிடையாது.
அப்படியே அவா் நவம்பாில் அரசியல் கட்சி ஆரம்பித்து ஆட்சிக்கு வருவதும். முக்கிய இடத்தை பிடிப்பது என்பதும் திரைப்படத்தில் வேண்டுமானால் நடக்கலாம்.நிஜ அரசியலில் நிறைய போராட்டங்களை கடந்து வந்தால் தான் நிலையான ஒரு இடத்தை பிடிக்க முடியும். இல்லையேல் கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலமாக தான் இருக்கும்.
அவருக்கு நிஜமாகவே அரசியல் ஆசை இருக்குமானால் அதற்கு ஒரே வழி தான் இருக்கிறது. அவரது சம்மந்தி கஸ்தூாிராஜாவைப் போல் பி.ஜே.பி.யில் சோ்ந்து பொிய பதவி வாங்கிக்கொண்டு ஒரு ரவுண்டு வரலமே தவிர தனி கட்சி எல்லாம் சோறு போடாது.