ஒரே நாளில் 6,800 வாகனங்களை கொத்தாக தூக்கிய போலீஸ்...காரணம் புதுசு... என்ன தெரியுமா?
கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக, இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனவே அன்றைய தினம் முதல் பொது போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டது. அத்துடன் தனியார் கார், டூவீலர்களை இயக்கவும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்த எச்சரிக்கையை மீறிய வாகனங்கள் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டன.
ஆனால் ஊரடங்கில் தற்போது படிப்படியாக பல்வேறு தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் தொடர்ச்சியாக வழங்கி வருகின்றன. எனவே இந்தியாவில் தற்போது வாகன போக்குவரத்து ஓரளவிற்கு சீராகியுள்ளது. பஸ், ஆட்டோ, டாக்ஸி உள்ளிட்ட பொது போக்குவரத்து வாகனங்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது இயங்கி வருகின்றன.
மேலும் தனியார் கார், டூவீலர் உள்ளிட்ட வாகனங்களை இயக்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன. அதே சமயம் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளில், போலீசார் கட்டுப்பாடுகளை கடுமையாக்கி வருகின்றனர். இதில், மும்பையும் ஒன்று. இந்தியாவிலேயே கொரோனா வைரஸால் மிக மோசமான பாதிப்பை சந்தித்திருக்கும் நகரம் மும்பைதான்.
எனவே கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக, வாகனங்களின் இயக்கத்திற்கு மும்பை போலீசார் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கியுள்ளனர். வீட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு மேல் செல்ல கூடாது என்பதும் இதில் ஒன்று. அதாவது உரிய காரணம் இல்லாமல், தனது வீட்டில் இருந்து ஒருவர் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு மேல் செல்ல கூடாது.
இதில், ஷாப்பிங், உடற்பயிற்சி போன்றவை அடங்கும். ஆனால் வேலைக்கு செல்பவர்கள் மற்றும் அவசரமாக மருத்துவமனை செல்பவர்கள், 2 கிலோ மீட்டர்களுக்கு மேல் பயணிக்கலாம். இந்த புதிய விதியை, மும்பை போலீசார் தற்போது தீவிரமாக அமல்படுத்த தொடங்கியுள்ளனர். இந்த விதிமுறையை மீறியதாக கடந்த ஞாயிற்று கிழமை (ஜூன் 28) மட்டும், சுமார் 6,800 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இவர்கள் அனைவரும், மருத்துவ ரீதியிலான காரணங்கள் எதுவும் இல்லாமலோ அல்லது அவசர காரணங்கள் எதுவும் இல்லாமலோ வாகனங்களை ஓட்டி வந்து விதிமுறைகளை மீறியுள்ளனர் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மும்பை நகரில் மொத்தம் 12 மண்டலங்கள் உள்ளன. அவை அனைத்தில் இருந்தும் ஞாயிற்று கிழமை ஒரே நாளில் சுமார் 6,800 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மும்பையை போலவே சென்னையிலும் தற்போது கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க செல்பவர்கள் வாகனங்களை பயன்படுத்த வேண்டாம் என காவல் துறையினர் கேட்டு கொண்டுள்ளனர். அதற்கு பதிலாக நடந்து செல்லும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையை மீறுபவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர். முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் சிங்கின் காரை கூட சென்னை போலீசார் சமீபத்தில் பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அளவில் பார்த்தால், ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக இதுவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள், அதன் உரிமையாளர்களுக்கு எப்போது திருப்பி தரப்படும்? என்பது சரியாக தெரியவில்லை. ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில், உரிமையாளர்கள் அபராதத்தை செலுத்திய பின்னர் அல்லது ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்ட பிறகு வாகனங்கள் திரும்ப வழங்கப்படுகின்றன.
ஊரடங்கு கட்டுப்பாடுகளால் இன்னமும் ஒரு சில இடங்களில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. அப்படிப்பட்ட சாலைகளில் ஒரு சில வாகன ஓட்டிகள் அதிவேகத்திலும், தாறுமாறாகவும் செல்கின்றனர். எனவே அதிவேகமாகவும், தாறுமாறாகவும் இயக்கப்பட்ட 46 மோட்டார்சைக்கிள்கள் மற்றும் லக்ஸரி கார்களை பறிமுதல் செய்திருப்பதாகவும் மும்பை போலீசார் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்டோமொபைல் செய்திகளை உடனுக்குடன் அளித்து வரும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் இணையதளம், அனைத்து சமூக ஊடகங்கள் வாயிலாகவும் செய்திகளை வாசகர்களுடன் உடனுக்குடன் பகிர்ந்து வருகிறது. கார், பைக் குறித்த அண்மை செய்திகள், டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்டுகள் மற்றும் வீடியோக்களை பெறுவதற்கு எமது WhatsApp, Telegram சேனல்களில் இணைந்திடுங்கள். எமது Facebook, Twitter, Instagram மற்றும் YouTube பக்கங்களுடன் தொடர்பில் இருங்கள்.