தமிழகத்தில் கல்வித்தரம் சரியில்லை என்கிற ஆளுநரின் பேச்சை கண்டிக்கும் வேல்முருகன்..?

 தமிழகத்தில் கல்வித்தரம் சரியில்லை  என்கிற ஆளுநரின் பேச்சை  கண்டிக்கும் வேல்முருகன்..?


தமிழகத்தின் கல்வித் தரத்தை அவமதிக்கும் ஆளுநரின் கருத்தைக் கண்டிக்கிறோம்!

தமிழகம் என்றாலே கல்வி, அறிவு, திறமை என்று நாடு முழுவதும் பெருமையாகப் பேசப்படும் ஒன்று.

அந்தக் கல்வித்தரத்தைக் குறைத்து மதிப்பிட்டு, “தமிழகத்தில் தரமான கல்வி இல்லை” என்று கூறியுள்ள ஆளுநர் ஆர்.என்.இரவி அவர்களின் கருத்து, மாணவர்களின் உழைப்பையும், தமிழகம் கட்டியெழுப்பிய, கல்வி மரபையும் அவமதிக்கிறது.

கிராமம் முதல் மாநகரம் வரைக் கல்விக்கான அணுகல் வசதியில் தமிழகம் முன்னோடியாகத் திகழ்கிறது. தொடக்கக் கல்வியிலிருந்து உயர் கல்விவரை தரத்திலும், மாணவர்களின் சாதனைகளிலும், நாடு முழுவதும் தமிழகம் முன்னிலையில் உள்ளது.

இன்று, தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. தனியார் மருத்துவக் கல்லூரிகளுடன் சேர்த்து மருத்துவக் கல்வியில், தமிழகமே நாடு முழுவதும் முன்னணியில் உள்ளது.

550-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் தமிழ்நாட்டில் செயல்படுகின்றன. ஆண்டுதோறும் இலட்சக்கணக்கானப் பொறியாளர்கள், வெளிநாடுகளுக்குச் சென்று இந்தியாவின் பெருமையை உயர்த்துகின்றனர்.

உலகத் தரம் வாய்ந்த IIT, NIT, IIM, Anna University, CMC போன்ற கல்வி நிறுவனங்கள் தமிழகத்தில் இயங்கி வருகின்றன.

அதோடு, பிற மாநில மாணவ மாணவிகளும், தமிழ்நாட்டில் கல்வி கற்க, அதிக விருப்பம் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டித் தேர்வுகளில், ஆராய்ச்சித் துறைகளில், ஐ.டி. நிறுவனங்களில், இன்றுத் தமிழக மாணவர்கள் மற்றும் தமிழ்நாட்டில் கல்வி கற்றவர்கள், தமிழ்நாட்டின் அடையாளமாகத் திகழ்கிறார்கள்.

இந்த நிலையில், தமிழக மாணவர்களின் கல்வித் தரத்தை இழிவுபடுத்தும் வகையில், ஆளுநர் கூறிய இந்தக் கருத்து,

அரசியல் நோக்கத்துடன் தமிழகத்தின் கல்வி மேம்பாட்டை குறைசொல்லும் அநியாய முயற்சிதான்.

ஆளுநர் ஆர்.என்.இரவி அவர்களின் இந்தக் கருத்து, தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தையே  அவமானப்படுத்துகிறது.

இது மாணவர்களின் மனநிலையைப் பாதிக்கும் ஆபத்தான நிலைப்பாடு .

ஆளுநரின் இந்த நிலைப்பாட்டைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

ஆளுநர் ஆர் .என்.இரவி அவர்கள், உடனடியாகத் தனது கருத்தைத் திரும்பப்பெற்று, தமிழ்நாட்டு அரசு மற்றும் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், மத்திய அரசு அவரைக் கட்டுப்படுத்தி, அவர் தனது பதவியின் எல்லைகளை மீறாமல் இருக்கச் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்துவதோடு, தமிழ்நாட்டின் கல்வியைக் குறைத்து மதிப்பிடும் எந்த முயற்சியும், தமிழகமெங்கும் கடும் எதிர்ப்பைச் சந்திக்கும் என்பதை , தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரிக்கிறது.

தமிழகத்தின் கல்வி, தமிழர்களின் உயிர் மூச்சு.

அதை, யாராலும் இழிவுபடுத்த முடியாது.

தமிழக நலனைக் காப்போம்!

தமிழர் வாழ்வுரிமையை மீட்போம்!

என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கை முற்றிலும் திமுக அரசுக்கு முட்டுக் கொடுப்பது போலவே உள்ளது.

ஆளுநர் ஆர்.என். ரவி சொன்னதை இவர் தெளிவாக புரிந்து கொள்ளவில்லை போல் தெரிகிறது. அவர் சொன்னது அரசு நடத்தும் பள்ளிகள் கல்லூரிகள் பல்கலைக்கழகங்களில் தரம் சரியில்லை என்று தான் குறிப்பிட்டாரே தவிர எல்லா கல்லூரிகள் பல்கலைக்கழகங்களிலும் தரம் சரியில்லை என்று சொல்லவில்லை. நீங்கள் குறிப்பிட்டுள்ள சாதனை மாணவர்கள் எல்லாம் தனியார் பள்ளிகளில் கல்லூரிகளில் படித்தவர்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

ஒரு MLA சீட்டு பிச்சை வாங்குவதற்காக எல்லாம் இப்படி எல்லாம் முட்டுக் கொடுக்கக் கூடாது என்று இணைய வாசிகள் அவரை கலாய்த்து வருகிறார்கள்.