விஜய் மாற்று சக்தியா...? மாற்றும் சக்தியா.... ?

 விஜய் மாற்று சக்தியா...? மாற்றும் சக்தியா.... ?

திரைப்படத்தின் அனைத்துக் கதாநாயகர்களும் அரசியலுக்கு வரத் துணிவதுமில்லை .. வந்தாலும் பெரிய அளவில் வெற்றி பெறுவதுமில்லை. காரணம் சினிமா வேறு அரசியல் வேறு என்கிற உண்மை நடிகர்களை விட தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கு நன்றாகவேத் தெரியும்.

ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்தே திரைப்படங்களில் தன் கட்சி சார்ந்த கருத்துகளை எப்படியாவது கொண்டு வந்து, மக்களிடையே அழுத்தமாக சேர்த்தத்திறமை எம்.ஜியாருக்கு மட்டுமே உரித்தானது. 

அவருடைய ரசிகர்களை உறுப்பினர்களாகவும் ,, கூட இருந்தத் தோழமைகளைக் கட்சியில் பொறுப்பாளர்களாகவும் மாற்றிய அரசியல் சாதுர்யம் வேறு எவரிடமும் இதுவரை இல்லை என்பது நிதர்சனமான உண்மை.

அவரைப் போன்றே சினிமாவில் மக்களின் பிரதிநிதியாக , அரசியல்வாதிகளைத் தட்டிக் கேட்பவராக , அதிகார வர்க்கத்தை எதிர்ப்பவராக நடித்ததோடு மட்டுமல்லாமல், எம்.ஜிஆரைப் போன்றே தர்ம காரியங்களில் ஈடுபட்டு மக்களோடு மக்களாக பழகியதால் தான் திரு விஜய்காந்த் அவர்களால் கட்சியைத் தொடங்கிய சில ஆண்டுகளிலேயே அதிமுக கூட்டணி மூலம் 27 இடங்களைப் பெற முடிந்தது.

அதன் பிறகு வெவ்வேறு காரணங்களால் அவர் சறுக்கி விழுந்து விட்டார் .கட்சியும் பெரிதாக வளர முடியவில்லை.

இந்த வரிசையில் நடிகர் விஜய்,தான் நடித்த ஒரு சில படங்களில் மட்டுமே அரசியல் பேசி .. தலைவராகத் தன்னை வரித்துக் கொண்டு . யாரும் அழைக்காமலேயே  தானாகவே அரசியல் பிரவேசம் செய்திருக்கிறார்.

கூட்டம் கூடுகிறது .. மக்கள் குவிகின்றனர் .. குறிப்பாக இளைய சமுதாயத்தினர் திரண்டு வருகிறார்கள் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் .. அவை எல்லாம் வாக்குகளாக மாறுமா? என்பதே கேள்வி.

அரசியலுக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் கட்சிகளை எதிர்த்து ஏற்ற இறக்கங்களோடு பேசுவதும் , அறிக்கை விடுவதும் .. அதன் பின் அமைதியாவதும் மட்டுமே அவரது நடவடிக்கைகளாகத் தொடர்கின்றது .

தான் ஆட்சிக்கு வந்தால் என்ன மாற்றங்களை செய்யப் போகிறேன் .. எப்படி தன்செயல்பாடுகள் இருக்கும் என்று ஒரு முறை கூட ஓரிடத்திலும் அவர் இன்று வரை தெரிவிக்கவில்லை .

மக்களின் பிரச்சனைகளுக்குக் குரல் கொடுக்கவும் இல்லை . நேரடியாக எவ்விதப் போராட்டத்திலும் மக்களோடு மக்களாக  ஈடுபடவுமில்லை  .

ஆனால் ..இதற்கு முன்னரே .. முதல்வராகத் தன்னை முன்னிறுத்துவதும் .. கூட்டணிக்கு நானே தலைவர் என்று அறிக்கை விடுவதும் .. அவர் மீது அவரே கொண்டுள்ள அதிகபட்ச நம்பிக்கை மட்டுமே.

தமிழக அரசியலில் எப்போதுமே இரு முனைப்போட்டிதான் .

காங்கிரஸா தி.மு.கவா என்ற ஆரம்ப நிலைக்குப் பின் கடந்த 50 ஆண்டுகளாக தி.மு.க  அ.தி.மு.க இரண்டுக்குமிடையே தான்  போட்டி என்பது நேற்று பிறந்த குழந்தைக்கும் கூட தெரிந்த உண்மை  .

இந்த இரு கழகங்களையும் மீறி .. அதுவும் வலுவான கட்டுக்கோப்பான தி.மு.க அணியை எதிர்த்து  முதல் தேர்தலிலேயே விஜய் தனித்து நின்று ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றி பெறுவார் என்பதெல்லாம் பகலில் கூட வரக்கூடாத கனவு 

தி.மு.க வையும் பா.ஜ.கவையும் எதிரி என்று அறிவித்த பிறகு எப்படி அவர் அதிமுக பா.ஜ.க கூட்டணிக்குள் வரப் போகிறார் ?

 அப்படியே வந்தாலும் உடைந்த பா.ம.க, உடைந்து கொண்டிருக்கும் அதிமுக, உடைய வாய்ப்புள்ள பா.ஜ.க. தெளிவில்லாத தே.மு தி க இவர்களோடு இணைந்து எப்படித் தன் அடையாளத்தைத் தக்க வைக்கப் போகிறார் என்பதெல்லாம் விடை தெரியாத வினாக்கள் .

இப்போதே தன் படம் தவிர வேறு  எவர் படமும் எங்கும் வரக்கூடாது என்கிற விஜய் .. எப்படிக் கட்சிக்குள் அடுத்தக் கட்டத் தலைவர்களை உருவாக்கப் போகின்றார் ? அவர்களை ஏற்றுக்கொள்ளப் போகிறார் ?

இவ்வளவு  பிரச்சனைகள் உள்ள விஜய் தன் அரசியல் பாதையில்..

சினிமா போல் ஒரே காட்சியில் ஒரே அடியில் எதிரியை  வீழ்த்த முடியாது என்பதை எப்போது உணரப்போகிறார் ? அப்படி வீழ்த்த முயன்றால் அவரும் அவர் கட்சியும் வீழ்ந்து போகும் என்பதுதான் இன்றைய தேர்தல் கள நிலவரம் .

களம் மாறும் போது காட்சிகள் மாறலாம். . அப்போதுதான் விஜய் மாறும் சக்தியா ? இல்லை மாற்றும் சக்தியா என்பதும் .. அவரது கட்சி வெற்றிக் கழகமா ? இல்லை வெற்றுக் கழகமா ? என்பதும் தெரிய வரும்.

- உதயம் ராம்

- பத்திரிகையாளர்

- 9444011105