பள்ளிகள் திறந்தாச்சு; மாணவர்கள் கிளம்பியாச்சா? மாநில அரசு கெடுபிடி!

 பள்ளிகள் திறந்தாச்சு; மாணவர்கள் கிளம்பியாச்சா? மாநில அரசு கெடுபிடி!நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொடர்ச்சியான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதையொட்டி சுமார் 9 மாதங்களாக கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. இதற்கிடையில் வித்யகாமா திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வந்த நிலையில், திடீர் கொரோனா பாதிப்பு அதற்கும் முட்டுக்கட்டை போட்டது. இந்நிலையில் இன்று (ஜனவரி 1) முதல் பள்ளிகள், பியூ கல்லூரிகள் திறக்கப்படும் என்று மாநில அரசு தெரிவித்தது. இதற்காக அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பிற ஊழியர்கள் கட்டாயம் கோவிட்-19 பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

குறிப்பாக RT-PCR பரிசோதனையின் நெகடிவ் சான்று கிடைத்த பின்னரே பள்ளிகளுக்கு அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று காலை உரிய சுகாதார கட்டுப்பாடுகளுடன் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் வித்யகாமா திட்டத்தின் கீழ் 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடம் நடத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


மற்ற வகுப்பினருக்கு பள்ளிகள் திறப்பு குறித்து வரும் 15ஆம் தேதி இறுதி முடிவெடுக்கப்படும் என்று கர்நாடகா மாநில அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய தொடக்க மற்றும் நடுநிலைக் கல்வி அமைச்சர் எஸ்.சுரேஷ் குமார், பெற்றோர்கள் அச்சப்பட வேண்டாம். தைரியமாக தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வையுங்கள். கல்வியுடன் மாணவர்களின் உடல்நலனும் முக்கியம்.

எனவே அவர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணியுங்கள். ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் அவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். பள்ளிகளிலும் மாணவர்களை உடல்நலனைக் கவனிக்கும் வகையில் ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்படுவார். யாருக்காவது அறிகுறிகள் தென்பட்டால் உடனே அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் என்று தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநில தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சசி குமார் கூறுகையில், ஆசிரியர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள அச்சப்படுகின்றனர். அவர்கள் தைரியத்துடன் முன்வர வேண்டும். இன்றைய தினத்திற்குள் கொரோனா நெகடிவ் சான்று கிடைத்தவர்கள் மட்டுமே பள்ளிகளில் அனுமதிக்கப்படுவர் என்றார்.