சசிகலாவிடம் கதறி அழுத ஓபிஎஸ் குடும்பம்!
ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி ஹெர்னியா (குடலிறக்கம்) பிரச்சனையால் 10 நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று இன்று (செப்டம்பர் 1) டிஸ்சார்ஜ் செய்யப்படவிருந்த நிலையில், திடீர் மாரடைப்பு காரணமாகக் காலை 6.45 மணியளவில் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.
ஓபிஎஸ் மனைவி காலமான செய்தி கிடைத்ததும், தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின், துரைமுருகன், மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட அமைச்சர்கள், உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் நேரடியாக மருத்துவமனைக்குச் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு ஓபிஎஸுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், கட்சி பிரமுகர்களும் அஞ்சலி செலுத்திவிட்டு ஓபிஎஸுக்கு ஆறுதல் கூறினர்.
இதனிடையே ஓபிஎஸ் மனைவி மறைந்தார் என்ற செய்தி சசிகலாவுக்குக் கிடைத்ததும் அவர், ‘மருத்துவமனைக்கு வருகிறேன்’ என்று தனது உதவியாளர் கார்த்திக் மூலம் ஓபிஎஸ் தரப்புக்கு தகவல் தெரியப்படுத்தினார்.
அதாவது கார்த்திக், ஓபிஎஸ் மகனான ஜெயபிரதீப்புக்கு தொடர்புகொண்டு, ’அம்மா மருத்துவமனைக்கு வராங்க, எப்போது வரலாம்’ என்று கேட்டார். உடனே ஜெயபிரதீப் ஓபிஎஸ் மற்றும் எம்.பி.ரவீந்தரநாத்திடம் தகவலைத் தெரியப்படுத்தினார். சசிகலா வருகைக்கு, குடும்பத்தினரும் ஒகே சொல்ல, இந்த தகவல் ஈபிஸுக்கு தெரியவந்தது. உடனே அவர், ‘நான் தேனிக்கு வருகிறேன்’ என்று சத்தமில்லாமல் மருத்துவமனையிலிருந்து வெளியேறினார்.
இதையடுத்து ஜெயபிரதீப், சசிகலா உதவியாளர் கார்த்திக்கைத் தொடர்புகொண்டு ‘அம்மாவை வரச்சொல்லுங்கள்’ என்றதும் ஏற்கனவே தயாராக இருந்த சசிகலா அதிமுக கொடி கட்டிய காரில் மருத்துவமனைக்குப் புறப்பட்டு வந்தார். அப்போது மருத்துவமனைக்கு வெளியே இருந்த அதிமுகவினர் பலரும் சசிகலாவை வரவேற்றனர். மருத்துவமனை நுழைவாயில் சசிகலாவை வரவேற்ற ஜெயப்பிரதீப், விஜயலட்சுமி உடல் இருந்த அறைக்கு அழைத்துச் சென்றார்.
அந்த அறையில் ஓபிஎஸ், அவரது மகன் ரவீந்திரநாத், ஜெயபிரதீப், மகள் கவிதா பானு உட்படச் சிலரும் இருந்தனர். சசிகலாவைப் பார்த்துக் கதறி அழுத ஜெயபிரதாப்பும், கவிதாபானுவும், ‘அம்மா உயிரோடு இருக்கும்போது வருவீங்க என்று எதிர்பார்த்தோம், அம்மாவும் உங்களைக் கேட்டார்’ என்று கண்கலங்கிக் கூறினர். உடனே, சசிகலாவும் கண்கலங்கிப் போய், ‘பாத்துக்கலாம் பாத்துக்கலாம் நான் இருக்கிறேன்’ என்று ஆறுதல் கூறினார்.
சசிகலாவைப் பார்த்து ஓபிஎஸ் கையெடுத்துக் கும்பிட்டதும், மனைவியை இழந்து கலங்கி நின்ற அவரது கையை பிடித்து சசிகலா ஆறுதல் கூறினார். அதோடு, எப்படி இறந்தார், ஏன் கவனிக்காம விட்டீங்க என்று விசாரித்தார் சசிகலா.
“ஹெர்னியா பிரச்சனையால் கஷ்டப்பட்டு வந்தாங்க. சமீபத்தில் மனதளவிலும் கஷ்டப்பட்டுக் கொண்டு இருந்தாங்க. 10 நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அட்மிட் ஆனாங்க. டாக்டர்களும் ஆபரேஷன் செய்வதுதான் நல்லது என்றார்கள். சரி என்று ஒப்புதல் கொடுத்ததும், ஆபரேஷன் எல்லாம் முடிந்து நல்லாதான் இருந்தாங்க, இன்று காலையில் வீட்டுக்குப் போகலாம் என்று தயாராக இருந்தோம்.
அதிகாலையில், சிவியரான ஹார்ட் அட்டாக் ஏற்பட்டது, டாக்டர்களும் போராடி பார்த்தார்கள். ஆனால், சிகிச்சை பலனின்றி தவறிட்டாங்க” என்று அழுதார் ஓபிஎஸ்.
இதையடுத்து, அனைவருக்கும் ஆறுதல் சொல்லிவிட்டு மருத்துவமனையிலிருந்து வெளியேறும் போது முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகளும் முட்டி மோதிக்கொண்டு சசிகலாவிடம் முகத்தைக்காட்டி கும்பிடு போட்டதையும் பார்க்கமுடிந்தது.
ஓபிஎஸ் குடும்ப துக்க நிகழ்ச்சியில் சசிகலா பங்கேற்றதும் அவரை அதிமுகவினர் வரவேற்றதும் அதிமுகவுக்குள் ஒரு பெரிய பிரளயம் ஏற்பட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
