போச்சம்பள்ளியில் உலகின் மிக பிரமாண்ட மின்வாகன உற்பத்தி ஆலை!

போச்சம்பள்ளியில் உலகின் மிக பிரமாண்ட மின்வாகன உற்பத்தி ஆலை! 

உலகின் பிரமாண்டமான மின் வாகன உற்பத்தி மிக விரைவில் உற்பத்தி தயாராகும் நிலையில் இருப்பதாக ஓலா எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனத்தின் சிஇஓ தகவல் வெளியிட்டுள்ளார்.

பிரபல கால் டாக்சி நறுவனமான ஓலா அதன் முதல் மின்சார இருசக்கர வாகனத்தை இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இம்மாதம் (ஆகஸ்டு) 15ம் தேதி அன்றே நிறுவனத்தின் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமாக இருக்கின்றது.

இந்த வாகனத்திற்கான புக்கிங் ஏற்கனவே இந்தியாவில் தொடங்கிவிட்டது. ரூ. 499 என்ற மிகக் குறைந்த முன் தொகையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன் பதிவு பணிகள் நாட்டில் தொடங்கியிருக்கின்றது. இதைத்தொடர்ந்து, தற்போது தயாரிப்பு ஆலையை தயார்படுத்தும் பணியிலும் நிறுவனம் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது.

தற்போது ஓலா மின்சார இருசக்கர வாகனத்தின் உற்பத்தி ஆலை கட்டமைக்கும் பணிகள் முடியும் தருவாயில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இது ஓர் பிரமாண்ட வாகன தயாரிப்பு ஆலையாகும். தமிழகத்தின் ஓசூரில் இந்த ஆலை தயாராகி வருகின்றது.

சுமார் 500 ஏக்கர் பரப்பளவு இந்த ஆலைக்காக ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இங்கு தயார் செய்யும் வாகனங்களே உலகின் பல்வேறு மூலைகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட இருக்கின்றன. இந்தியா, ஐரோப்பா, இங்கிலாந்து, லத்தீன் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு நமது தமிழகத்தில் வைத்தே வாகனங்கள் கட்டமைக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட இருக்கின்றன.

இந்த ஆலையில் மனிதர்கள் மற்றும் தானியங்கி ரோபோக்கள் இரண்டும் இணைந்து பணியாற்ற இருக்கின்றன. இதற்காக சுமார் 5 ஆயிரம் செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோக்கள் களமிறக்கப்பட இருக்கின்றன. இதுமட்டுமின்றி, 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பணியாளர்களாக நியமிக்கப்பட இருக்கின்றனர்.

இத்தகைய ஓர் சிறப்புமிக்க எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி ஆலை கட்டமைக்கும் பணிகளே நிறைவுறும் நிலையில் இருப்பதாக நிறுவனத்தின் சிஇஓ பவிஷ் அகர்வால் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருக்கின்றார். இத்துடன், உற்பத்தி ஆலையின் தற்போதைய நிலைகுறித்த புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய மின்சார இருசக்கர வாகன சந்தையில் ஓர் மிகப் பெரிய புரட்சியை செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் முதல் நாள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு கிடைத்த புக்கிங் எண்ணிக்கை விகிதம் இருக்கின்றது.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு 24 மணி நேரத்தில் ஒரு லட்சம் முன்பதிவுகள் குவிந்தன. இந்த வரவேற்பை இந்திய வாகன உலகமே எதிர்பார்க்காத ஒன்று. இந்த அதீத வரவேற்பை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக ஓலா நிறுவனம் மிக தீவிரமாக வாகன உற்பத்தியை தொடங்கும் பணியில் களமிறங்கியிருக்கின்றது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பத்து விதமான நிற தேர்வு, இணைப்பு வசதி, நேவிகேஷன் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வசதிகளுடன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இத்துடன், ஒரு முழுமையான சார்ஜில் 130 கிமீ முதல் 150 கிமீ வரையிலான பயண ரேஞ்ஜை வழங்கும் அது வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஓலா நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ரூ. 1 லட்சம் அல்லது ரூ. 1.25 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வழங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஃபேம்2 திட்டத்தின்கீழ் இதற்கு மானியம் கிடைக்குமானால் இதன் விலை மேலும் பல மடங்கு குறையும் வாய்ப்பு ஏற்படும். ஆகையால், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு இந்தியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

சமீப காலமாக இந்தியாவில் மின் வாகனங்களுக்கான தேவை அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. குறிப்பாக, பெட்ரோல் மற்றும் டீசல் விலை விண்ணைத் தொடுமளவு உயரத் தொடங்கியதில் இருந்து மக்கள் மின் வாகனங்களை நோக்கி நகர தொடங்கியிருக்கின்றனர்.

இதன் விளைவாக நாட்டில் மின் வாகனங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் நிகழாண்டில் கணிசமாக உயர்ந்துள்ளது. இந்த நிலை தொடர்ச்சியாக நீடிக்குமானால், நாட்டில் பெட்ரோல், டீசல் வாகனங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுக்கு ஓர் முற்று புள்ளி வைக்கப்படும். இந்த காரணத்திற்காகவே மத்திய மற்றும் மாநில அரசுகள் மின் வாகனங்களின் பயன்பாட்டை மிக தீவிரமாக ஊக்குவித்து வருகின்றன.