பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்ப பெற்றோர் அச்சப்பட தேவையில்லை - அமைச்சர் அன்பில் மகேஷ் சிறப்பு பேட்டி...
.ஒரு நாளில் 5 வகுப்புகள் மட்டுமே நடத்தப்படும். விளையாட்டு நேரம் ஒதுக்கப்படாது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
நாளை முதல் 9, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கின்றன. இதையொட்டி கடந்த சில தினங்களாக பள்ளிகள் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பள்ளிகளில் செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகளை இன்றைய தினம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்ப பெற்றோர் அச்சப்பட தேவையில்லை. நாளை முதல் 9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாதுகாப்பான முறையில் பள்ளி இயங்கும். ஒவ்வொரு வகுப்பறையிலும் ஒரு கிருமிநாசினி வைத்திருக்க வேண்டும்.
ஒரு நாளில் 5 வகுப்புகள் மட்டுமே நடத்தப்படும். மாணவர்களுக்கு விளையாட்டு நேரம் ஒதுக்கப்படாது. தொடக்கம் முதலே பாடம் நடத்த வேண்டாம் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். மாணவர்கள் உளவியல் ரீதியாக தயாரான பிறகு வகுப்பெடுக்க வேண்டும்.
மாணவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யும். காலை 9.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை பள்ளி இயங்கும். வாரத்தில் 6 நாட்களும் பள்ளி இயங்கும். பள்ளி மாணவர்கள் நிச்சயம் மாஸ்க் அணிந்து கொண்டுதான் வர வேண்டும். பள்ளியிலும் கிருமிநாசினி, மாஸ்க்குகள் வைத்திருக்க வேண்டும். ஆசிரியர்கள் தடுப்பூசி போட்ட பின்னரே பள்ளிக்கு வர வேண்டும்.
மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்ற கட்டாயமில்லை. தற்போதைய சூழலில் மாணவர்களுக்கு வெறும் அடிப்படை டெக்னிக்குகளை மட்டுமே சொல்லித் தருமாறு கூறியுள்ளோம். இதனால் அவர்கள் அடுத்த வகுப்புக்கு செல்ல உதவியாக இருக்கும். ஆசிரியர்கள் 95 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். மாணவர்களை பள்ளி திறந்த நாளே படி படி என சொல்வது அவர்களுக்கு மேலும் வெறுப்பையும் மன அழுத்தத்தையும் தரும்.
பள்ளிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் பள்ளி இயங்குவது கட்டாயமில்லை. தற்போது 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்கவில்லை. எனவே அந்த வகுப்பறைகளை 9, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பயன்படுத்தலாம். அது போல் கல்வி தொலைகாட்சி வழக்கம் போல் இயங்கும். இதை தொடங்கினால் அது நிறுத்தப்படும். அது தொடங்கினால் இது நிறுத்தப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.
தமிழகத்தில் நாளை முதல் கல்லூரிகளும் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்றைய தினம் மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் தமிழகத்தில் சீருடையுடன் வரும் பள்ளி மாணவர்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்றும் அது போல் கல்லூரி மாணவர்களுக்கும் இலவச பேருந்து பயணத்திற்கு அனுமதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்கிறார்கள். என்னதான் வீடியோகாலில் பார்த்துக் கொண்டாலும் தங்கள் நண்பர்களை நேரில் அதுவும் பள்ளிச் சீருடையில் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அவர்களுக்கு அதிகமாகவே உள்ளது.



