*அடுக்கடுக்காக தவறிழைக்கும் திமுக அரசு!**நன்றி மறக்கிறதா திமுக...? முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை மிரட்டும் அரசு ஊழியர்கள்...!

 *அடுக்கடுக்காக தவறிழைக்கும் திமுக அரசு!**நன்றி மறக்கிறதா திமுக...?  முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை மிரட்டும் அரசு ஊழியர்கள்...!


# இந்த முறை திமுக ஆட்சி கட்டிலில் கம்பீரமாய் அமர்ந்திருப்பதற்கு முழு காரணம்...

அஞ்சல் வாக்குகள்!

# சற்று அப்படியே திரும்பி, அருகில் உள்ள உங்கள் பொதுச் செயலாளர் மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் அவர்களை பார்த்துக் கொள்ளுங்கள்..

நாங்கள் நினைவுக்கு வரவில்லை என்றால் அது கொஞ்சம் கவலைக்குரியது தான்!

ஜெ வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால், செலக்டிவ் அம்னீஷியா!

# ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆகி, முழுமையான முதல்வர் ஆகி விட்டதால், மாண்புமிகு முதல்வருக்கு அது மறந்து விட்டது போல...!

# எப்போதெல்லாம் அரசு ஊழியர், ஆசிரியர்கள் வாக்குகளை இழக்கிறதோ அப்போதெல்லாம் அதிகாரத்தையும் இழக்கிறது திமுக...

# அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த கலைஞர், CPS ஓய்வூதிய திட்டத்தில் சறுக்கினார்...

தொடர்ந்து ஊதிய குழு அமல்படுத்தும் போது, உயர் அதிகாரிகளின் பேச்சைக் கேட்டு, இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தில் மாபெரும் துரோகம் செய்தார். 

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதிய நிர்ணயத்திலும் பல்வேறு குளறுபடிகள் செய்தார். 

ஆசிரியர்கள் சென்னையில் கொளுத்தும் வெயிலில் கோரிக்கைகளுக்காக ஊர்வலம் சென்ற போது, புதிய தலைமை செயலகத்தில் மீன்களுக்கு உணவளித்து கொண்டிருந்த முதல்வர் கலைஞர், ஆசிரிய சங்க பிரதிநிதிகளை பார்க்க மறுத்து விட்டார்.

அவரை பார்க்க விடாமல் தடுத்தது இப்போதைய முதல்வர் தான் என்ற செய்தியும் பரப்பப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, தொடர்ந்து 10 ஆண்டுகள், அரியணையை இழந்து தவித்தது திமுக.

# தனது கடைக்கோடி தொண்டர்களுக்கு எந்த நேரடி உதவியையும் திமுக செய்தது இல்லை. அதற்கான எந்த திட்டமும் இதுநாள் வரையில் அதனிடம் இல்லை என்பதும் கசப்பான உண்மை.

இருப்பினும் அந்த கடைக்கோடி தொண்டர்கள் கலைஞரின் மேல் கொண்ட தீராத அன்பினால் திமுக இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்பது தான் நிதர்சனம்.

தனக்கான ஒரு சிறு கோரிக்கையை கூட யாரிடம் கொண்டு செல்வது எனத் தெரியாமல், அப்படியே மீறி யாரையாவது சந்தித்து, தனது கோரிக்கையை சொன்னாலும், சாதி அரசியல், பண அரசியலில் அந்த ஏழைத் தொண்டன் குப்பையில் வீசி எறியப்படுகிறான். ஆனாலும் அவன் திமுக விற்கு துரோகம் செய்ய நினைப்பதில்லை...

காலம் முழுவதும் பிறருக்கு சேவகம் செய் என்பது தான் தொண்டனின் தலையெழுத்து...

# உயிர் போனாலும் கொள்கை, கட்சி மாறாத கடைக்கோடி தொண்டனுக்கு எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் எள்ளளவு பயனும் இல்லை.

பதவி, பணம், சாதி அடிப்படையில் பச்சோந்தி போல் நிறம் மாறும், கட்சி மாறும் துரோகிகளே இங்கு முக்கியத்துவமும், செல்வாக்குடனும் வலம் வருகின்றனர்.

# ஒரு முறை 40/40 என தொகுதிகளை இழந்த ஜெ, அரசு மற்றும் ஆசிரியர்கள் ஆதரவு தனக்கு முழுமையாக இல்லை எனத் தெரிந்தும், அவர்களுக்கு அநீதி இழைக்கும் செயல்களில் ஈடுபடவில்லை.

அவர்களுக்கான அடிப்படை உரிமைகளில் எந்த பாதகமும் செய்யவில்லை. இதுவே ஒரு காலத்தில் அஞ்சல் வாக்குகளில் வெறும் 10 சதவீதம் மட்டுமே வாங்கிக் கொண்டிருந்த அதிமுக ஒரு கால கட்டத்தில் பெரும்பான்மையான அஞ்சல் வாக்குகளை பெறுமளவு தன்னை தயார் செய்து கொண்டது.

# தொடர்ந்து எடப்பாடி அரசு, அரசு மற்றும் ஆசிரியர்கள் மீது நடத்திய கொடும் தாக்குதலின் விளைவாகவே, இன்று ஆட்சி, அதிகாரத்தை இழந்து, தெருவுக்கு வந்து, தங்களைக் காப்பாற்றிக் கொள்ள, கதறித் துடிக்கும் பரிதாப நிலைக்கு வந்துள்ளது.

# ஏட்டு சுரைக்காய் கறிக்குதவாது! நிதியமைச்சர் திறமையானவர் தான்.. அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அவர்கள் சுரண்டி விட்டார்கள்.. திருடி விட்டார்கள்.. அதனால் உங்களுக்கு கிடைக்க வேண்டியதை தர மாட்டோம்.. பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்பதெல்லாம் ஓர் அரசாங்கம் சொல்லும் பதிலல்ல.. அது அழகுமல்ல..¡!

இந்த பதிலைக் கேட்கத் தான் உங்களுக்கு ஆதரவளித்தோமா? 

# அதிமுக ஆட்சியில்

* அகவிலைப்படி நிறுத்தம்

* உயர்கல்வி ஊக்க ஊதியம் நிறுத்தம்

* ஒப்படைப்பு விடுப்பு நிறுத்தம்

என தொடர்ந்து ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு எதிராக செயல்பட்டனர்.

அதையே தொடர்ந்து செய்வதற்கு நீங்கள் எதற்கு? எல்லாம் சரியாக இருந்து, எந்த அலைச்சல், உளைச்சல் இல்லாமல் சரியாக நடந்தால், அவர்களே எல்லாம் செய்து விட்டு போய் இருக்க மாட்டார்களா? உங்களுக்கு இந்த வாய்ப்பே வந்திருக்காதே?

கவலைகளையும், கஷ்டங்களையும் மட்டும் சொல்லிக் கொண்டே இராமல், அதனை சரி செய்து, சீர்படுத்தி கொண்டு செல்வது தான் நல்ல அமைச்சருக்கு அழகு!

மன்னனுக்கும் பெருமை!

# ஆமாம்! தெரியாமல் தான் கேட்கிறோம்... நிதிச் சுமை என்றாலே உங்களுக்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தான் நினைவுக்கும், கண்ணுக்கும் தெரிவார்களா?

# எம். எல். ஏ. க்கள், எம். பி. க்கள் பொது சேவை செய்யத் தானே வந்தார்கள். அவர்களுக்கு எதற்கு ஊதியம்? அதுவும் ஒரே ஒரு நாள் பதவியேற்று விட்டால் கூட  வழி வழியாய் ஓய்வூதியம் வேறு!

# ஒரே அடியில், 100 மடங்கு சம்பள உயர்வு வேறு..!

# இப்படி எங்கள் வாயிலும், வயிற்றிலும் அடித்து, எங்கள் உழைப்பை, இரத்தத்தை சுரண்டி அரசியல்வாதிகள் தின்று  கொழுக்க.. இது தான் நீதியா? உங்கள் நேர்மையா?

# அகவிலைப்படி என்பது ஊதிய உயர்வல்ல! விசம் போல ஏறும் விலைவாசிக்கு ஏற்ப தரப்படும் பிழைப்புப் படி!

ஒருவர் பத்தாண்டுகளுக்கு முன் வேலையில் சேரும் போது அடிப்படை ஊதியம் 10000 வாங்குகிறார். அகவிலைப்படி என்ற ஒன்றே கிடையாது என்று வைத்துக் கொள்வோம்.

இன்றும் அதே 10,000/- மட்டும் வாங்கிக் கொண்டிருந்தால், அவர் குடும்பம் செத்து சுடுகாட்டுக்கு தான் போயிருக்கும்.

# அவர்களை எரிக்கக் கூட அந்த ஊதியம் போதாது.

# இப்படி எங்களை சுரண்டி, கொடுமைப்படுத்தி, நீங்கள் கெட்ட பெயர் வாங்கிக் கொண்டு, அடுத்து வரும் அரசாங்கத்திற்கு சுமையை குறைக்கிறீர்கள்! ஒவ்வொரு முறையும் திமுக செய்யும் தொடர் தவறு இது.

# கலைஞர் முன்பு சில தவணை அகவிலைப்படியையே முழுதாக ஏமாற்றினார். இப்போது கலைஞர் மகன், தான் அவரின் வாரிசு என்பதை நிரூபிக்கிறார்...

# ஆனாலும் தொடர்ந்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆதரவு தொடர்ந்து கணிசமாக இருந்து வரும் சூழலை, இது போன்ற பொருளாதார நிபுணர்களின் அறிவிப்புகள் நிரந்தரமாக இழக்கச் செய்து விடும் என்பதை முதல்வர் கவனத்தில் கொள்ள வேண்டும்.

# நிதியமைச்சர் அவர்களின் மிக உயர்ந்த பொருளாதார படிப்போ, இந்தியா ஆட்சிப் பணி அதிகாரிகளின் சுயநலமான சிந்தனைகளை அடியொற்றி நடந்தால், அரசு கஜானா வேண்டுமானால் நிறையலாம்..

மக்கள் மனசு நிறையாது. வெறுப்பு தான் நிறையும்.

# மெத்த படித்த மேதாவிகளின் அறிவுரைகளை கேட்டுக் கொள்ளுங்கள்..

மக்களின் மனக் குரல்களை, மனக் குமுறல்களை உணரக் கற்றுக் கொள்ளுங்கள்.. அது தான் சிறந்த தலைவனின் பண்பு!

# CPS ரத்து!

முதல் கையெழுத்து

# மக்கள் நலப் பணியாளர்களுக்கு வேலை

முதல் கையெழுத்து

# சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களை முழு நேர ஊழியர்

முதல் கையெழுத்து

# நகைக் கடன் தள்ளுபடி

முதல் கையெழுத்து

# மாதம் 1000 உரிமைப் பணம்

முதல் கையெழுத்து

# இப்படி எந்த முதலையும் செய்யாமல், முதல் இல்லை.. முதல் இல்லை என்று சொல்லிக் கொண்டு இருந்தால்..

மக்கள் உங்களைக் கடைசியில் நிறுத்தி விடுவார்கள்!

# முதல்வருக்கு ஒன்றை நினைவு படுத்துகிறோம்..

இன்று ஓய்வூதியம் மறுக்கப்படுவது ஊதியத்தை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்தும் கடைநிலை ஊழியருக்கே...

ஊதியம் என்ற ஒன்றே தேவைப்படாத அமைச்சர்கள், எம். எல். ஏ., எம். பி. க்கள், நீதி வழங்க வேண்டியவர்கள், IAS அதிகாரிகள் இவர்களுக்கு எல்லாம் இன்றும், என்றும் ஓய்வூதியம் உண்டு என்பது தான் காலக் கொடுமை..

துன்பமான உண்மையும் கூட...! 

அதனால் தான் கடைநிலை ஊழியர்களின் அவலக் குரல்கள் அரசை சென்றடைய இவர்கள் விடுவதில்லை. அதற்கு நல்ல தீர்வு காணவும் இவர்கள் அனுமதிப்பது இல்லை.

# இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த

வகுத்தலும் வல்ல தரசு.

பொருள் வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும் வந்த பொருள்களைச் சேர்த்தலும், காத்தலும் காத்தவற்றை வகுத்துச் செலவு செய்தலும் வல்லவன் அரசன்.

# தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்

நீங்கா நிலனான் பவர்க்கு.

காலம் தாழ்த்தாத தன்மை, கல்வியுடைமை, துணிவுடைமை இந்த மூன்று பண்புகளும் நிலத்தை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க வேண்டியவை.

# மக்களுக்கு எது தேவையோ, எதை செய்ய வேண்டுமோ அதை காலம் தாழ்த்தாமல், காரணம் கூறாமல் செய்ய முயற்சி செய்யுங்கள்...!

# என்ன தான் திறமையானவர்களாக இருந்தாலும், எவ்வுளவு படித்திருந்தாலும் மக்களின் மனதை படிக்கத் தெரியா விட்டால்.. நீடித்திருப்பது என்பது மிகக் கடினம்...!

# கடைசியாக மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

இந்த நிதியமைச்சர், ஆட்சிப் பணி அதிகாரிகள் சொல்வதை மட்டும் கேட்டுக் கொண்டு, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தயங்கினால், மறுத்தால் உங்கள் மீதான நம்பகத்தன்மை முற்றிலும் அழிந்து விடும்.

# சில பணிகளை செய்ய தாமதமானாலும், இப்படி பணம் இல்லை.. பணம் இல்லை என புலம்புவதை நிறுத்தச் சொல்லுங்கள்...! 

புலம்புவதை நிறுத்தி விட்டு, வருமானத்திற்காக வழிகளை பார்க்கச் சொல்லுங்கள்...!

# ஏனென்றால், மீண்டும் வாக்கு கேட்கப் போவது நீங்கள் தான்.

IAS அதிகாரிகள் அல்ல! யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் தொடர்ந்து அவர்களுடன் இணைந்து கொண்டு, தங்கள் வேலைகளை பார்த்துக் கொள்வார்கள்..!

மக்களுக்கு செய்ய வேண்டியதை சொல்லுங்கள்.. அதை செய்வதற்கான வழிமுறைகளை செய்யச் சொல்லுங்கள்...!

# பணம் இல்லை என்பதற்காக, மக்கள் நலத் திட்டங்களை நிறுத்தப் போகிறீர்களா?

இல்லை இனிமேலும் கடன் வாங்காமல் இருக்கப் போகிறீர்களா?

ஊழியர்களும், ஆசிரியர்களும் மக்கள் தான்.. 

எனக்கு தெரிந்த வரையில் அதிமுக அரசு ஒருமுறை கூட இப்படி புலம்பிக் கொண்டே இருந்ததில்லை.. மக்களுக்கு செய்ய வேண்டியதை எப்படியாவது செய்து கொண்டு தான் இருந்தார்கள்...!

ஆனால், திமுக அரசு ஒவ்வொரு முறையும், இப்படி ஒரு மொக்கையான காரணத்தைக் கூறி கொண்டு, அரசு கஜானாவை நிரப்புகிறேன் என்று, மக்கள் வயிற்றில் அடிக்கிறார்கள்...!

IAS அதிகாரிகள் பேச்சை மட்டும் கேட்டு, கலைஞர் அல்லது ஜெ ஆட்சி புரியவில்லை... மக்கள் மனதை புரிந்து ஆட்சி நடத்தினார்கள்!

# அரசு நடத்துவது என்பது பைனான்ஸ் கம்பனி நடத்துவது போல் அல்ல... லாபம் வந்தால் உனக்கு செய்கிறேன் என்பதற்கும்.. பணம் இல்லை என்றால், உன்னிடமே பிடுங்குவேன் என்பதற்கும்..

இப்படி எத்தனை நெருக்கடி இருந்தாலும், வேறு எந்த அரசும் இது போல கறுப்பு, வெள்ளை, பச்சை என வண்ண அறிக்கைகளை சொல்லிக்கொண்டு பொறுப்புகளை தட்டிக் கழிப்பது இல்லை.

திமுக ஆட்சிக்கு வரும் போது மட்டும் தான் இப்படி சொல்லி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, மக்களுக்கு எதிராக செயல் பட வைத்து அரசுக்கு கெட்ட பெயர் உண்டாக்குகிறார்கள். இதனை ஆட்சியாளர்கள் உணர்ந்து மக்களின் மனதை அறிந்து செயல்பட முயற்சிக்க வேண்டும்.

# ஏற்கனவே, நீங்கள் நிறைவேற்ற முடியாத பொய்யான வாக்குறுதிகளை கொடுத்துள்ளீர்கள் என்ற எதிரிகளின் குற்றச்சாட்டுகளை மெய்ப்பிக்கும் வண்ணம்... 

உங்கள் மீதான நம்பிக்கையை, சில, பல காரணங்களை சொல்லிக் கொண்டு நீங்களே அழித்து விடாதீர்கள்!