வாகனங்களுக்கான ஆவணங்கள் செல்லுபடியாகும் காலத்தை நீட்டித்தது மத்திய அரசு
கடந்த ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை, காலாவதியாகும் வாகன பதிவு சான்றிதழ் (ஆர்.சி.), லைசென்ஸ், தகுதி சான்று, அனுமதி (அனைத்து வகை) உள்ளிட்ட வாகனம் தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் 2021 செப்டம்பர் 30ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் கூறியுள்ளது.
இது குறித்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ள மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம், இந்த உத்தரவை அனைவரும் தீவிரமாகப் பின்பற்றுவதை உறுதி செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்நிலையில், நாட்டில் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு அதிகமாக இருப்பதால், பழைய வாகனங்கள் அனைத்தையும் பயன்பாட்டில் இருந்து நீக்குவதற்கு மத்திய பட்ஜெட்டில் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி எட்டு ஆண்டுகளை கடந்த வாகனங்கள் அனைத்தும் ஒவ்வொரு ஆண்டும் தகுதி சான்றிதழ் பெற்றுதான் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
15 ஆண்டுகளை கடந்த வாகனங்களை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வாகன பதிவு சான்றிதழ் பெறுவது அவசியம். இந்த நிலையில் புதிய திட்டத்தின்படி வணிக ரீதியில் பயன்படுத்தப்பட்டு வருகின்ற வாகனங்கள் 15 ஆண்டுகளை கடந்து இருந்தால் 62 மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்தி சான்றிதழ் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
