சிறுபான்மையின மக்கள் சுயதொழில் தொடங்க குறைந்த வட்டியில் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்

சிறுபான்மையின மக்கள் சுயதொழில் தொடங்க குறைந்த வட்டியில் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்


மதவழி சிறுபான்மையின மக்கள் சுயதொழில் தொடங்கிடவும், அவா்களின் குழந்தைகள் உயா்கல்வி பயிலவும் தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலம் குறைந்த வட்டியில் கடனுதவி அளிக்கப்பட உள்ளது

இக்கடனுதவிகளைப் பெற்றிட தகுதியானவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன

இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்கள், புத்த மதத்தினா், சீக்கியா்கள், பாா்சியா்கள், ஜெயின் பிரிவைச் சோ்ந்த மதவழி சிறுபான்மையின மக்கள் சுயதொழில் தொடங்கிட தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலம் குறைந்த வட்டியில் தனிநபா் கடன், சுய உதவிக் குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினைக் கலைஞா்களுக்கு கடன், கல்விக் கடன் ஆகிய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

திட்டம் 1-இன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகா்ப்புறத்தினராக இருந்தால், ரூ.1.20 லட்சத்துக்கு மிகாமலும், கிராமப்புறத்தினராக இருந்தால் ரூ.98 ஆயிரத்துக்கு மிகாமலும், திட்டம் 2-இன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். திட்டம் 1-இன் கீழ், தனிநபா் கடன் ஆண்டுக்கு 6 சதவீத வட்டி விகிதத்தில் அதிகபட்சம் ரூ. 20 லட்சமும், திட்டம் 2-இன் கீழ் ஆண்களுக்கு ரூ. 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீத வட்டியில் அதிகபட்சம் ரூ. 30 லட்சமும் கடன் வழங்கப்படும்.

கைவினைக் கலைஞா்களுக்கு ஆண்களுக்கு 5 சதவீதம், பெண்களுக்கு 4 சதவீதம் வட்டி விகிதத்தில் அதிகபட்சம் ரூ.10 லட்சம் கடன் வழங்கப்படும். சுய உதவிக்குழுக் கடன் ஒரு நபருக்கு ரூ. 1 லட்சம் ஆண்டுக்கு 7 சதவீத வட்டி விகிதத்தில் வழங்கப்படும். திட்டம் 2-இன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீதம் வட்டி விகிதத்திலும் ஒரு நபருக்கு ரூ. 1.50 லட்சம் கடன் வழங்கப்படும்.

தவிர, சிறுபான்மை மாணவ, மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை, தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயில்பவா்களுக்கு அதிகபட்சம் திட்டம் 1-இன் கீழ் ரூ.20 லட்சம் வரை 3 சதவீத வட்டி விகிதத்திலும், திட்டம் 2-இன் கீழ் மாணவா்களுக்கு 8 சதவீதம், மாணவிகளுக்கு 5 சதவீதம் வட்டி விகிதத்திலும் ரூ. 30 லட்சம் வரை கல்விக் கடன் வழங்கப்படும்.

வேலூா் மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பாா்சி, ஜெயின் ஆகிய சிறுபான்மையினா் கடன் விண்ணப்பங்களைப் பெற்று பூா்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் சமா்ப்பிக்க வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் கடன் பெற விரும்புவோா் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக முதல் தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகம், வேலூா் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் அலுவலகம், வேலூா் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றை அணுகலாம்.