சுயநிதிப் பள்ளிகள் இயக்குனரகம் உடனே தொடங்க வேண்டும். ; தமிழக அரசுக்கு தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை
அனைத்து வகை தனியார் பள்ளிகளையும் ஒருங்கிணைத்து ஒரே இயக்குனரின் கீழ் சுயநிதி பள்ளிகள் இயக்குனரகம் உருவாக்கிட போட்ட அரசாணையை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில பொது செயலாளர் நந்தகுமார் கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்
தமிழக முதல்வராக தாங்கள் பொறுப்பேற்று மிக சிறப்பாக செயல்பட்டு வரும் தளபதியார் அவர்களின் தலைமையிலான தமிழக அமைச்சரவைக்கு எங்கள் மாநில சங்கத்தின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இந்த கொடிய கொரோனா நோய் தொற்று காலத்தில் கூட மிகச் சிறப்பாக பணியாற்றி இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாய் நோய்த்தொற்றை தடுப்பதிலும் மக்கள் வாழ்வை பாதுகாப்பதிலும் மேம்படுத்துவதிலும் முன்னிலை வகித்து வரும் தங்களின் சீரிய பணிக்கு நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் சுயநிதி அடிப்படையில் தமிழக அரசின் பெரும் பணச் சுமையையும்,பணிச்சுமையையும் குறைத்து லட்சக்கணக்காணவர்களுக்கு வேலை வாய்ப்பைத் தந்து கோடிக்கணக்கான மாணவர்களுக்கு தரமான கல்வியை தந்து தமிழகத்தை தலை நிமிரச் செய்வதில் தனியார் பள்ளிகளின் பங்கு மகத்தானது என்பதை தாங்கள் அறிவீர்கள்.
தமிழகத்தில் நர்சரி, பிரைமரி,மெட்ரிக், மேல்நிலை,ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் , ஐசிஎஸ்இ பள்ளிகள் , கேம்பிரிட்ஜ் பள்ளிகள் ,ஐ.பி. பள்ளிகள் எனவும் சுயநிதி அடிப்படையிலான உயர்நிலை மேல்நிலை பள்ளிகள் என சுமார் 20,000 பள்ளிகள்,50,000 பள்ளி வாகனங்கள் இயங்கி பள்ளிக்கல்வி இயக்குனர், தொடக்கக் கல்வி இயக்குனர்,
மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் ஆய்வாளர் என பள்ளிகளின் அங்கீகாரம், கல்விக்கட்டணம் நிர்ணயித்தல், RTE கல்விக் கட்டணம் வழங்குதல் , தமிழ்நாடு பாடநூல் கழக பாடப் புத்தகங்களை வாங்குவது, தாழ்த்தப்பட்ட,மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும், சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகைகள் பெறுவது சம்பந்தமாகவும், பள்ளிகளை பார்வையிடல், மேம்படுத்துதல், வழிகாட்டுதல் என ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் தேவைகளுக்கும் நாங்கள் ஒவ்வொரு அலுவலகத்திற்கு அலைய வேண்டி வருகிறது.
எனவே தனியார் பள்ளிகளை கண்காணித்து நல்வழி காட்டஒரே சுயநிதி பள்ளிகளுக்கான இயக்குனரகம் வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
அதற்காக ஒவ்வொரு பள்ளியும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப (Contribution) பங்குத் தொகையை சுமார் 1000 ஆயிரம் கோடி ரூபாய்களை அரசுக்குச் செலுத்தி உள்ளோம்.
அதனடிப்படையில் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு The Tamil Nadu Private Schools (Regulations) ஆக்ட் 2018.Act.No. 350 Of 2019.Gazatte No 334 August 16,2019. அரசிதழில் வெளியிடப்பட்டு19 மாதங்களாகி அரசாணை இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றோம்.
எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் உடனடியாக இந்த பிரச்சனையில் தலையிட்டு தனியார் சுயநிதி பள்ளிகளுக்கான சுயநிதி பள்ளிகள் இயக்குனரகம் அமைப்பதற்காக போடப்பட்டுள்ள
தமிழக அரசின் ஆணையை உடனடியாக அமுல் படுத்திட வேண்டிய பணிகளை துரிதமாக செயல்படுத்திட நேர்மை மிகு பள்ளிக்கல்வி முதன்மைச் செயலாளர் பள்ளிக்கல்வி ஆணையாளர் ஆகியோரை பணிவோடு வேண்டி கேட்டுக் கொள்கிறோம்.
அதற்கான ஆணைகளைப் பிறப்பித்து தமிழகத்தில் தனியார் பள்ளிகள் இன்னும் மிகச் சிறப்பாக செயல்பட நல் வழிகாட்ட உதவிட வேண்டுமாய் மெத்த பணிவோடு தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் வேண்டுகின்றோம்.என்று குறிப்பிட்டுள்ளார்
