சைக்கிளில் சென்று சூடம் சாம்பிராணி விற்கும் தனியார் பள்ளி ஆசிரியை
புதுக்கோட்டை: கொரோனா தாக்கத்தால் வாழ்வாதாரம் இழந்த தனியார் பள்ளி ஆசிரியை, சைக்கிளில் சென்று சூடம், ஊதுபத்தி, சாம்பிராணி விற்பனை செய்து வருகிறார்.
புதுக்கோட்டைவட்டம் கோவில் பட்டியை சேர்ந்தவர் மணிமேகலை, 35. இவர், வலையபட்டியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்தார். இவரது கணவர் தினக்கூலி வேலை பார்த்து வருகிறார்; இரண்டு குழந்தைகள் உள்ளனர்.கொரோனா பொது முடக்கம் காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டதால் வாழ்வாதாரம் இழந்து வறுமைக்கு தள்ளப்பட்டனர். குடும்பத்தை காப்பாற்ற வீட்டிலேயே சூடம், சாம்பிராணி, மெழுகுவர்த்தி, ஊதுபத்தி தயாரித்து வருகிறார் மணிமேகலை.
இதை பல்வேறுபகுதிகளுக்கு சைக்கிளில் சென்று விற்பனை செய்து வருகிறார்.
இவரை போல், பல தனியார் பள்ளி ஆசிரியர்கள் மளிகைக்கடை, மெடிக்கல், உணவகங்களில் வேலை பார்த்து குடும்பத்தை காப்பாற்றி வருகின்றனர்.பொது முடக்கத்தால், வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு, அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
