குற்றப் பின்னணி வழக்குகளைக் கண்டுபிடிப்பதில் கைதேர்ந்தவர்அரியலூர் எஸ்.பி சீனிவாசன்
குற்றப் பின்னணி வழக்குகளைக் கண்டுபிடிப்பதில் கைதேர்ந்தவர். ரவுடிகளைக் களையெடுத்தவர். பல வருடங்களாகக் கண்டுபிடிக்க முடியாத வழக்குகளைக் கண்டுபிடித்து குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கிக்கொடுத்தவர். இவருக்கு சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம். தற்போது அரியலூர் மாவட்ட எஸ்.பி-யாக இருக்கிறார். 45 வயதுக்காரரான இவரது கண்டிப்பு அரியலூர் மாவட்டத்தில் பிரசித்தம்.
தவறு செய்யும் அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுப்பதோடு, திறம்பட செயல்படும் காவலர்களை அழைத்து வெகுமதி கொடுத்து ஆச்சர்யப்பட வைப்பார். மாவட்டத்தில் கொடிகட்டிப்பறந்த போலி மது, கஞ்சா விற்பனையை இரும்புக்கரம் கொண்டு அடக்கியதோடு, கஞ்சா வியாபாரிகளைக் குண்டாஸில் சிறையில் தள்ளியவர்.
தர்மபுரிக்குப் பிறகு, அதிக அளவில் சாதி கலவரங்கள் நடக்கும் மாவட்டங்களில் அரியலூரும் ஒன்று. சாதி கலவரங்கள் நடந்தால் குறைந்தது 15 நாள்களாவது அங்குள்ள கிராமங்களில் அசாதாரண சூழல் நிலவும். ஆனால், பொன்பரப்பி கிராமத்தில் நடந்த சாதி மோதலை மூன்று நாள்களுக்குள் கட்டுக்குள் கொண்டுவந்தார். இவரது அதிரடி நடவடிக்கையால் அரசியல் கட்சிகள் எதுவும் செய்ய முடியாமல் திணறிப் போயின.
அதிக விபத்துகள் நடக்கும் மாவட்டங்களில் இதுவும் ஒன்று. திடீரென வாகன சோதனையில் ஈடுபடும் இவர், லாரி ஓட்டிக்கொண்டே போனில் பேசிவந்த 7 ஓட்டுநர்களின் உரிமத்தை ரத்து செய்தார். அவருக்குக் கீழ் பணியாற்றும் போலீஸாருக்கு ஒரு செய்தியை மட்டும் அடிக்கடி சொல்லிக்கொண்டே இருக்கிறார்.
"காவல் துறையினர் லஞ்சம் வாங்காமல், பொதுமக்கள் அச்சம் இல்லாமல் காவல் நிலையத்தை அணுகும் சூழலையை உருவாக்க வேண்டும். இந்த நிலை வந்தால் நாம் சரியாக வேலை பார்க்கிறோம் என்று அர்த்தம். இல்லையென்றால் வேலை பார்ப்பதில் எந்த அர்த்தமும் இல்லை" என்பதுதான் அந்தச் செய்தி.
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் G. முருகன்
