விருத்தாசலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி திருமண வரவேற்பு விழா நடந்த மண்டபத்துக்கு அதிகாரிகள் ‘சீல்

விருத்தாசலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி திருமண வரவேற்பு விழா நடந்த மண்டபத்துக்கு அதிகாரிகள் ‘சீல்

விருத்தாசலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி திருமண வரவேற்பு விழா நடந்த மண்டபத்துக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். இதனால், பிரியாணி அண்டாவுடன் பாதியிலேயே திருமண வீட்டார் வெளியேறினர்.*

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பெரியார் நகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தடை உத்தரவை மீறி நேற்று திருமண வரவேற்பு விழா ஒன்று நடந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் சம்மந்தப்பட்ட திருமண மண்டபத்துக்கு சென்றனர். ஆனால் அதன் முன்பக்க கதவு பூட்டப்பட்டு இருந்தது.

இதையடுத்து சந்தேகத்தின் பேரில், பின்பக்கமாக சென்று பார்த்தனர். அதில், பின்பக்க கதவு திறந்து இருந்த நிலையில், உள்ளே திருமண வரவேற்பு விழா நடந்தது. இதில் மணமகன், மணமகள் மற்றும் அவரது பெற்றோர், உறவினர்கள் என்று பலர் பங்கேற்றிருந்தனர்.

மேலும் இரு வீட்டாரின் உறவினர்களுக்கும் அங்கு பிரியாணி விருந்து தடபுடலாக வழங்கப்பட்டு கொண்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கட்டுப்பாடுகளை மீறி எவ்வாறு இதுபோன்று அதிகநபர்களை அழைத்து விழா நடத்தலாம் என்று கேட்டு திருமண வீட்டாரை எச்சரித்தனர்.

மண்டபத்துக்கு ‘சீல்’

பின்னர் உடனடியாக அனைவரும் வெளியேறுங்கள், மண்டபத்துக்கு ‘சீல்’ வைக்க போகிறோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து பிரியாணி உணவு இருந்த அண்டா, குண்டாக்கள் என்று அனைத்தையும் எடுத்துக்கொண்டு திருமண வீட்டார் அங்கிருந்து அவசர அவசரமாக வெளியேறினர்.

இதையடுத்து திருமண மண்டபத்திற்கு பூட்டுப் போட்டு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.